Published : 06 Jan 2014 12:02 PM
Last Updated : 06 Jan 2014 12:02 PM
பொதுவாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தாண்டி யோசிப்பதே அரிதாகி வருகிறது. அதனால் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (IISER) கல்வி நிறுவனம், இது தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. புனே, போபால், கொல்கத்தா, மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம்.
IISER எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், பி.எஸ்.-எம்.எஸ்., பிஹெச்.டி மற்றும் ஒருங்கிணைந்த பிஹெச்.டி உள்ளிட்ட படிப்புகளை வழங்குகின்றன. 5 ஆண்டு பி.எஸ்.-எம்.எஸ். படிப்பு, இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 படிக்கும்போதே இந்தப் படிப்பு பற்றியும் மாணவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
IISER நிறுவனத்தில் பி.எஸ்.-எம்.எஸ். படிப்பதில் வித்தியாசம் உண்டு. இப்படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் 2 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களைப் படிப்பார்கள். இதன்மூலம், எந்தப் பாடத்தில் தங்களுக்கு நல்ல திறன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில், தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்து, அதை விரிவாகப் படிப்பார்கள். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் 5 ஆண்டு காலத்துக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. IISER கல்வி நிறுவனத்தில், தமிழகத்திலிருந்து வெறும் 5 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்கிறார்கள். நுழைவுத் தேர்வு, மாணவர் சேர்க்கை, உதவித்தொகை உள்ளிட்ட விரிவான விவரங்களை http://www.iiser-admissions.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT