Published : 17 Jan 2014 11:40 AM
Last Updated : 17 Jan 2014 11:40 AM
நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வை நடத்தியது. இந்த காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் (தமிழ் நீங்கலாக) நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. பின்னர் வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 23-ம் தேதி தமிழ் தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
முதலில் தேர்வு முடிவு வெளியான பாடங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட தமிழ் பாடத்துக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட தற்காலிக இறுதி தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 2013-14-ம் கல்வி ஆண்டுக்கான 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியது.
எனவே, இந்த 981 காலியிடங்களும் தற்போது நடத்தப்பட்ட தேர்வு முடிவு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களுக்கு அனுமதி பெறப்படுவதற்கு முன்பாகவே 2881 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிநியமன பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதால் தற்போதைய தேர்வு மூலமாக 981 காலியிடங்களை நிரப்ப முடியாது என்றும் இதற்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்கண்ட 981 காலிப் பணியிடங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 809 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய காலியிடங்கள் ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை ஆகியவற்றின் கீழ் செயல் படும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி யிடங்களாக இருக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT