Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM
ஒரு நிறுவனத்துக்கு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியம். இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கும் போது, எழுத்துகள் 10 அல்லது 12 ஃபான்ட் அளவில் இருக்க வேண்டும். ஏரியல் அல்லது ரோமன் ஃபான்ட் பயன்படுத்தலாம். ஹரிசான்டல், வெர்ட்டிகல் முறைகளைத் தவிர்த்து, ஏ4 தாளை பயன்படுத்த வேண்டும். மற்றொருவரது விண்ணப்பத்தை காப்பி எடுத்து விண்ணப்பிக்கக் கூடாது. இவ்வாறு செய்யும்போது, நேர்முகத் தேர்வில் சில கேள்விகளைக் கொண்டு, வேறொருவர் தயாரித்து அளித்த விண்ணப்பத்தின் நகல்தான் அது என்பதை கண்டுபிடித்துவிடுவர்.
விண்ணப்பத்தில் கடைசி வரை ஃபான்ட் சைஸ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நடுவில் ஃபான்ட் அளவு பெரிதுபடுத்துவது, போல்டாக காண்பிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே 1.5 அளவு இடைவெளி இருக்க வேண்டும். லேசர் பிரின்ட் எடுக்க வேண்டும். இரண்டு புறம் பிரின்ட் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஸ்டேப்ளர் பின் செய்வதைத் தவிர்த்து, கிளிப்பை பயன்படுத்துவது நல்லது. விண்ணப்பத்தில் தேவையில்லாமல் புகைப்படம் ஒட்டக் கூடாது. அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டால் மட்டுமே புகைப்படத்தை இணைக்க வேண்டும். முகம் 80 சதவீதம் தெரியும்படியும், பேக்ரவுண்ட் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் புகைப்படம் இருக்க வேண்டும். எப்போதும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உடன் வைத்துக்கொள்வது நலம்.
விண்ணப்பத்தில் தேதி, கையெழுத்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 10 பேரில் 5 பேர் விண்ணப்பத்தில் தேதி அல்லது கையெழுத்திட மறந்துவிடுகின்றனர். இந்த தவறை செய்வது, கவனக்குறைவை வெளிக்காட்டும். விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தவறு உள்ளதா என்று இரண்டு, மூன்று பேரிடம் காட்டி, தவறு இருந்தால் திருத்தம் செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தொலைபேசி எண் அல்லது செல்போன் எண், ஒரு இ-மெயில் முகவரி, நிரந்தர முகவரி ஆகியவற்றை அளிக்க வேண்டும். படிப்பைக் குறிப்பிடும்போது முழுமையாக (உதாரணம்: எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்) எழுத வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படிப்பு, தொழில் சார்ந்த அனுபவம், விருப்பம் ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அதுசம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்போது, எளிதில் பதில் அளிக்க முடியம். தெரியாத விஷயத்தை விண்ணப்பத்தில் குறிப்பிடக்கூடாது. விண்ணப்பத்துடன் கவரிங் லெட்டர் வைத்து அனுப்புவது சிறந்தது.
இ-மெயில் அட்டாச் செய்து அனுப்புவதை சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, சப்ஜெக்டில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். நிறுவனம் எந்த முறையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது என தெரிந்துகொண்டு, அதற்கேற்ப அனுப்புவது நலம். பணிக்கு விண்ணப்பிக்கும் போது, இதுபோன்ற விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், நம் மீதான நன்மதிப்பை அவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT