Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM
சூரியனும் நட்சத்திரங்களும் கிழக்கே உதித்து, வானில் ஊர்ந்துபோய், மேற்கில் மறைவதை நாம் அனைவரும் தினசரி பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பூமி நிலையாக இருப்பது போலத் தோன்றலாம். பூமி சூரியனைச் சுற்றுவது உண்மையானால், கோள வடிவ உள்ள பூமியில் இருந்து எந்தப் பொருளும் எப்படி கீழே விழாமல் இருக்கிறது என்று சின்னக் குழந்தைகளைப் போன்ற சந்தேகமும் நமக்குத் தோன்றலாம்.
ஆனால், இதற்கு நேர்மாறாக பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதாக கோபர்நிகஸ் ஒரு புதிய கொள்கையை முன்வைத்தபோது, தர்க்கரீதியிலான இந்தப் பாய்ச்சலை "முற்றிலும் முட்டாள்தனம்" என்று அவரது சமகால அறிவியலாளர்கள் நம்பினார்கள்.
அதற்கு முன்னர் பூமிதான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்தி ரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன என்று அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அதையே பல வானியலாளர்கள் நம்பிவந்தனர்.
புதிய கொள்கை
1543இல் மரணப் படுக்கையில் இருந்த காலத்தில் போலந்து வானியலாளர் நிகோலஸ் கோபர் நிகஸ், பிரபஞ்சத்தில் சூரியன்தான் மையத்தில் (heliocentric) இருக்கிறது என்ற கொள்கையை தி ரெவல்யூஷனிபஸ் ஆர்பியம் செலஸ்டியம் என்ற நூலில் வெளியிட்டார்.
சூரியக் குடும்பத்தின் மையத்தில், சூரியன் அசையாமல் இருக்கிறது என்றும், அதைச் சுற்றி மற்ற கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகின்றன என்பதும்தான் அவர் முன்வைத்த கொள்கை.
அறிவியல் உலகில் அந்தக் கொள்கை நிச்சயம் ஒரு புதிய புரட்சிதான். அதற்குப் பிறகு, பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இல்லை என்ற புரிதல், தத்துவச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், மேற்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த வாத்திகனில் உள்ள கத்தோலிக்க மதத் தலைமையகம், அடுத்த 250 ஆண்டுகளுக்கு இந்தக் கொள்கையை ஏற்கவில்லை. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்றது. அதற்கு எதிராக கோபர் நிகஸை தொடர்ந்து, புரூனோவும் கலிலியோவும் கூறியது குற்றம் என்று வாத்திகன் சபை கருதியது.
புரூனோவின் கொலை
கோபர்நிகஸ் தன் கருத்தை பதிவு செய்து 70 ஆண்டுகளுக்குப் பின்னால், "சூரியனே பிரபஞ்சத்தின் மையம்" என்று சொன்னதற்காக இத்தாலியைச் சேர்ந்த கியோர்டானோ புரூனோ 1600இல் எரித்துக் கொல்லப்பட்டார்.
புரூனோ ஒரு டொமினிக்கன் பாதிரியார். கோபர்நிகஸின் கொள்கை சரியானது என்று அவருக்குத் தோன்றியது. அத்துடன், பிரபஞ்சம் எல்லையில்லாதது என்பதை முன்வைக்கும் "எல்லையில்லா பிரபஞ்சமும் முடிவற்ற உலகமும்" என்ற நூலை எழுதியிருந்தார். அதைப் பற்றி போப்பின் முன்னால், ரோம் நகரத்திலேயே பிரசங்கமும் செய்தார்.
அவருக்கு எதிராக வாத்திகன் சபை விசாரணை நடத்தியது. தான் சொன்னதெல்லாம் தவறு என்று சிலுவையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்று புரூனோவிடம் கூறப்பட்டது. ஆனால், தன் கருத்தில் இருந்து புரூனோ பின்வாங்கவில்லை. கடைசியாக கத்தோலிக்க சபைத் தலைவரின் ஆட்கள் அவரை எரித்துக் கொன்றார்கள் என்று கூறப்படுகிறது.
பின்னர் "சூரியனே மையம்" என்ற கருத்தை கலிலியோ முன்வைத்தபோது, அவரும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். தன் கொள்கைக்கு ஆதாரமாக தொலைநோக்கியை அவர் பயன்படுத்தினார். அவரது புதிய கண்டறிதல், அவரது சமகால அறிவியலாளர்களை தொந்தரவு செய்தது. சூரியக் குடும்பத்தின் இயக்கம் தொடர்பான அடிப்படைகள் 1632இல் அவர் வெளியிட்ட டயலாகோ சோப்ரா ஐ டியூ மாசிமி சிஸ்டமி டெல் மாண்டோ நூலில் வெளியாகின.
கச்சிதமான கோளம் என்று நம்பப்பட்டுவந்த நிலவில் அம்மைத் தழும்புகள் போலிருந்த குழிகளும், வியாழனைச் சுற்றி வந்த நிலவுகளும் அவரது தொலை நோக்கியில் தென்பட்டன. கலிலியோ, வாத்திகன் சபைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார். அவரும் வாத்திகன் சபையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுசிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் கலிலியோ ஒரு ஆராய்ச்சி நூலை எழுதியதுதான் ஆச்சரியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT