Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM

10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு - சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அறிமுகம்

10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆய்வுசெய்யும் வகையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சிறப்புத் திறன் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திறன் தேர்வு அறிமுகம்

சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வை பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதலாம். பொதுத் தேர்வாகவும் எழுதலாம். இது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது ஆகும். 12-ம் வகுப்பு தேர்வு பொதுத் தேர்வாக மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்யும் வண்ணம் திறன் தேர்வு (புரபிசியன்சி டெஸ்ட்) என்ற புதிய தேர்வை சி.பி.எஸ்.இ. நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்துகிறது. இது கட்டாயத் தேர்வு அல்ல. விருப்பப்பட்ட மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம்.

என்னென்ன மதிப்பீடு செய்யப்படும்?

இந்த தேர்வு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக நடத்தப்படும். மொழித்தாள் பாடத்தைப் பொருத்தவரையில் - மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்தாற்றல், வார்த்தைகளை தெரிந்து வைத்திருத்தல் ஆகியவற்றை ஆராயும் வகையிலும், அறிவியல் பாடத் தேர்வு - விஞ்ஞான விதிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் திறனை அளவிடும் வகையிலும், கணித தேர்வு - பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பகுத்தாய்வு செய்தல், சிந்திக்கும் திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் விதமாகவும் அமைந்திருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், மாணவர்கள் பாடங்களை எந்த அளவுக்கு படித்து புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதாக இருக்கும்.

ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த சிறப்பு தேர்வில், மாணவர்களின் ஞாபகத்திறன், மனப்பாடத்திறன் ஆகியவற்றை அறியும் வகையில் இல்லாமல் மேற்கண்ட திறமைகளை கண்டறியும் வகையில்தான் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

தகுதிச் சான்றிதழ்

தவறான கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அவர்களின் திறனை குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சிறப்பு திறன் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x