Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM

‘தி இந்து’ வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்- 2000 பேர் பங்கேற்பு

‘தி இந்து’ நடத்திய 2 நாள் வேலைவாய்ப்பு முகாமில் 2000 பேர் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

‘தி இந்து’ வேலை வாய்ப்பு முகாம் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெற்றது. இந்த முகாமில் விவேக்ஸ் அன்கோ, பொலாரிஸ், அஜீபா, சதர்லேண்ட் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் பங்கு கொண்டன. புதிதாக வேலை தேடுபவர்கள் முதல் 9 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் வரை இதில் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் மூலம் வேலை கிடைத்திருக்கும் திவ்ய பாரதி என்பவர் கூறுகையில், “கடந்த ஆண்டு படிப்பை முடித்த எனக்கு 3 நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது. விரைவில் புது வேலையில் சேருவேன்” என்றார்.

மாற்றுத் திறனாளியான உம்முல் கைர் சமூகவியல் இளங்கலை படித்து முடித்திருக்கிறார். அவர் வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை தேடி வந்திருந்தார்.

எம்.எம்.சி. இன்போடெக் சேவைகள் நிறுவனத்தின் மனிதவள அலுவலர் சாய்கிருபா கூறுகையில், “300 பேர் எங்கள் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தனர். அதில் 15 பேரை உடனே தேர்ந்தெடுத்துள்ளோம்” என்றார்.

ஐ.ஐ.கே.எம். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராகி சுபு தாங்கள் வேலைக்கு தேர்வு செய்வது மட்டுமல்லாமல் விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்பு ஆலோசனைகளையும் தருவதாக கூறினார்.

வரும் மே மாதத்தில் 45க்கும் மேலான நிறுவனங்களைக் கொண்டு பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்போவதாக ‘தி இந்து’ விளம்பரத் துறை துணைப் பொது மேலாளர் கிரண் சுதாகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x