Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM
தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
கடந்த 2004-ல் கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி இறந்தனர். போதிய இடவசதி இல்லாத இடத்தில் பள்ளி அமைந்திருந்ததே தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிட்டிபாபு கமிஷன், தனது அறிக்கையில் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தது.
மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் பள்ளிகள் 6 கிரவுண்ட் நிலத்தில் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மூன்று ஏக்கரிலும் ஊரகப் பகுதிகளில் ஐந்து ஏக்கரிலும் போதிய இடவசதிகளுடன் பள்ளிகள் அமைந்திருக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. சிட்டிபாபு கமிஷனின் இந்தப் பரிந்துரைகள், அப்படியே அரசாணையாக வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கு ஆட்சேபணை தெரிவித்த தனியார் மெட்ரிக் பள்ளிகள், ‘நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அரசு நிர்ணயித்த அளவு இடத்தை ஒதுக்கி பள்ளிகளை நடத்துவது சாத்தியமில்லை. எனவே வரையறுக்கப்பட்ட இடத்தின் அளவைக் குறைக்க வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனால், அரசாணையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு மண்டல வாரியாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது பள்ளிக் கல்வித் துறை. இந்தக் கூட்டங்களிலும் நில நிர்ணய அளவைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தப்பட்டது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்கள் மாவட்டத்தில் நில மதிப்பு மற்ற மாவட்டங்களைவிட பலமடங்கு கூடுதலாக இருப்பதால் பள்ளிகளுக்காக வரையறுக்கப்பட்ட நிலத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என தனியாக கோரிக்கை வைத்தன. இதையடுத்து, முதல் கட்டமாக இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கான நிலத்தின் அளவைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் படிப் படியாக நிபந்தனை தளர்வு அமல்படுத்தப்படும் என்றும் சொல்லப் படுகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை சுமுகமாக முடிப்பதற்காக சில மாவட்டங்களில், பள்ளிக்கு 6 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்து சில தனி நபர்கள் வசூல் நடத்துவதாகவும், இந்தத் தொகையையும் மாணவ, மாணவிகளிடமே வசூலிக்கும் முயற்சியில் சில பள்ளிகள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT