Last Updated : 09 Dec, 2013 12:00 AM

 

Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

பொம்மையும் வீடுகளும்

எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பொருளை நோண்டிக்கொண்டே இருப்பது மகேஷின் பொழுது போக்கு. தேவையில்லை என்று தூக்கி எறியப்படும் பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவற்றை வைத்து ஏதாவது செய்துகொண்டே இருப்பான். வெவ்வேறு பொருள்களை இணைத்தும் ஒரு பொருளைப் பிய்த்தும் உடைத்தும் பல புதிய பொருள்களை உருவாக்குவான். என்னடா இதெல்லாம் என்று கேட்டால் "பொம்மை" என்று உற்சாகமாகப் பதில் வரும்.

ஏழு வயதாகும் மகேஷிடம் நீங்கள் மேலும் பேச்சுக்கொடுத்தால் அவன் தன் கையில் இருக்கும் ‘பொம்மை’களை ஒரு கண்காட்சியாக மாற்றி விடுவான். "இது யானை, இது திருடன், இது கம்ப்யூட்டர்…" என்று அவன் விளக்கும்போது உங்களுக்கும் அந்தப் பொருள்கள் அப்படித்தான் தெரியும்.

பயன்படாது என்று பிறர் தூக்கி எறிந்த பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றைப் பலவிதமாகத் துருவி ஆராய்ந்து ஏதாவது ஒரு பொம்மையை உருவாக்கிவிடுவான் மகேஷ். காற்றாடி, படகு, விமானம் என்று அவன் உருவாக்கிய பொருள்களுக்குக் கணக்கே இல்லை.

மகேஷ் கொஞ்சம் பெரியவன் ஆனதும் இதே காரியத்தைக் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்ய ஆரம்பித்தான். புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கிடைக்கும் படங்களை எடுத்துவைத்துக்கொள்வான். படத்தை அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்ப்பான். அதேபோல ஒரு பொருளை உருவாக்க முயற்சி செய்வான்.

இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் தானே சில பொருள்களின் படங்களை வரைய ஆரம்பித்தான். அந்தப் படங்களில் உள்ளபடி பொம்மைகள் செய்ய முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தான்.

பதினைந்து வயதிற்குள் திருப்புளி, சுத்தி, ஆணி, மரக்கட்டை, பிளாஸ்டிக், துணி, நூல் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்திப் பொம்மை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் பொம்மை செய்யும் இடத்தைப் பார்த்தால் ஏதோ குட்டித் தொழிற்சாலைக்கு வந்துவிட்டதுபோல இருக்கும்.

படத்தில் உள்ள பொருள் எப்படி இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பான். அந்தப் பொருளின் பாகங்கள் எப்படி எங்கே சேர்ந்திருக்கின்றன என்பதை ஆராய்வான். பாகங்களின் அளவுகளைக் குறித்துக்கொள்வான். அதன் பிறகு பொருள்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குவான்.

மகேஷின் திறமை எது?

மகேஷின் பழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இதை வைத்து அவன் திறமையை எப்படித் தெரிந்துகொள்வது?

மகேஷ், ஒரு பொருளைப் பார்த்ததும் அதற்குள் ‘ஒளிந்திருக்கும்’ வேறொரு பொருளைக் காண்கிறான். அந்தப் பொருளை அதிலிருந்து உருவாக்க முயல்கிறான், தேவைப்பட்டால் வேறு பொருள்களைச் சேர்த்துக்கொள்கிறான்.அடுத்த நிலையில், தான் பார்த்த ஒரு பொருளைப் போலவே இன்னொரு பொருளை உருவாக்க முனைகிறான். அதற்கடுத்து, தன் கற்பனையில் உதித்த ஒரு பொருளுக்கு வடிவம் கொடுக்க முயல்கிறான்.

வடிவமைப்பு என்று சொல்லப்படும் விஷயத்திற்குத் தேவைப்படும் அடிப்படையான திறமைகள் இவை.

இடத்தைப் பயன்படுத்தும் திறன்

புதிய வடிவங்களை, புதிய பொருள்களை உருவாக்கும் இந்தத் திறமையின் மற்றொரு பரிமாணம் ‘வெளி’யை (Space) கையாளும் திறமை.

அதாவது, வெட்டவெளியில், ஒன்றும் இல்லாத இடத்தில் நமக்கு வேண்டிய ஒரு பொருளைப் பொருத்திப் பார்ப்பது. அந்த இடத்தில் இந்தப் பொருள் எப்படி அமையும் என்று கற்பனை செய்து பார்ப்பது. பிறகு அந்தக் கற்பனையை நிஜமாக மாற்றுவது. இதுதான் வடிவமைப்பின் அடிப்படை. வெளி என்றால் என்ன என்ற உணர்வு ஒரு வடிவமைப்பாளருக்கு அவசியம். அந்த வெளியில் பொருள்களைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். உதாரணமாக, ஓர் அறையில் பொருள்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்வது. ஒரு காலி மனையின் மீது ஒரு கட்டடத்தைக் கற்பனையில் எழுப்பிப் பார்ப்பது.

மகேஷும் இப்படிப்பட்ட திறமைகள் கொண்டவன்தான். அவன் திறமையைக் கூர்தீட்டிக்கொள்வதற்கு இன்று பல வழிகள் இருக்கின்றன. வடிவமைப்புத் துறையில் பெரிய அளவில் அவனால் சாதிக்க முடியும். வடிவமைப்புத் துறையில் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. உங்களுக்குள் ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறாரா? அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளியுங்கள். அது வெறும் பொழுதுபோக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை.

கை நிறையப் பணமும் மனத்திருப்தியும் தரும் தொழிலாகவும் அது மாறலாம்.

வடிவமைப்பாளர்களுக்கான துறைகள்

கிராஃபிக் டிசைனர்கள்

காட்சியின் மூலம் ஒரு விஷயத்தை உணர்த்துவது அல்லது சொல்வது இவர்களுடைய வேலை. சித்திரங்கள், வண்ண ஓவியங்கள், புகைப்படங்கள், அச்சாக்கம் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்துவார்கள்.

ஆடை வடிவமைப்பு

புதிய வடிவங்களிலும் வண்ணங்களிலும் துணிகள், புதிய தோற்றங்களில் ஆடைகள். இவற்றை உருவாக்குபவர்கள் ஆடை வடிவமைப்பாளர்கள். சாதாரண ஆடையிலிருந்து ஃபேஷன் டிசைனிங்வரை இவர்களது படைப்புத் திறன் மூலம்தான் உருவாகின்றன.

கட்டுமானம்

முன்பெல்லாம் பொறியாளர்கள் உற்பத்தித் தொழிலில் மட்டுமே இருந்தார்கள். இன்று அழகான, பயனுள்ள, பாதுகாப்பான, எளிதில் பயன்படுத்தத் தகுந்த பொருள்களை உருவாக்குவதற்காக வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இதனால் கட்டடங்கள் கட்டும் துறையில் வடிவமைப்பாளர்களுக்கு எண்ணற்ற வேலைகள் கிடைக்கின்றன.

புறநகர்கள், நகரியங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கட்டடங்களைச் சுற்றியுள்ள இடங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் இதம் தருபவையாக இருப்பதற்காகத் திட்டமிடுவதும் வடிவமைப்புப் பணிதான். கட்டடங்களின் உட்புறத்தைச் சிறப்பாக அமைக்கவும் வடிவமைப்பாளர்கள் தேவை.

அரங்க அமைப்பு

கண்காட்சிகள், சினிமாவுக்கு செட் போடுதல், நாடக / பொதுக்கூட்ட அரங்கம் அமைத்தல், நகைகளை வடிவமைத்தல், மரச் சாமான்கள், புகைப்படங்கள் எனப் பல துறைகளில் வடிவமைப்பாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. நவீன வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் இவர்களது பங்களிப்பு தேவைப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x