Published : 02 Jan 2017 03:26 PM
Last Updated : 02 Jan 2017 03:26 PM
கேட்டாரே ஒரு கேள்வி
Limelight என்பதற்கும் எலுமிச்சம் பழத்திற்கும் என்ன தொடர்பு?
Tagline என்றால் என்ன என்று கேட்கும் நண்பரே, ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தெளிவுபடுத்தவோ அல்லது நாடகத்தனமான ஒரு விளைவை ஏற்படுத்தவோ உதவுவதுதான் tagline.
நிறுவனங்களைப் பொறுத்தவரை slogan என்று நாம் கூறுவதுகூட taglineகளைத்தான். கீழே சில நிறுவனங்களின் taglines அளிக்கப்பட்டிருக்கிறது. அவை எந்த நிறுவனத்துக்கானவை என்பதைக் கண்டுபிடியுங்களேன்.
1. Think Different
2. The ultimate driving machine
3. Imagination at work
4. Forever sports
5. India’s International Bank
6. Forever New Frontiers
7. The edge is efficiency
8. Future full of energy
9. Life’s good
10. Tyres with muscle
கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை இது. பொது மக்களின் கவனத்தின் மையமாக ஒருவர் இருக்கும்போது ஒருவர் limelightக்கு வந்து விட்டதாக அர்த்தம். ஒரு திரைப்படத்தில் சிறிய வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர்கூட limelight-க்கு வந்து விடலாம்.
Limelightக்கும், எலுமிச்சம் பழத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால் limelightக்கும் limeக்கும் தொடர்பு உண்டு.
இங்கு lime என்பது எலுமிச்சையைக் குறிக்கவில்லை. கால்சியம் அடங்கிய பல பொருள்களை (கால்சியம் கார்பனேட், கால்சியம் ஆக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு) lime என்பார்கள். சுண்ணாம்புகூட limeதான்.
இந்த lime வெளிப்படுத்தும் அடர்த்தியான வெண்மை ஒளிக் கதிர்களை limelight என்று கூறுவதுண்டு. Limelightல் பளிச்சென்று பொருள்கள் தெரியும். அதுபோல பலரது கவனத்தைப் பளிச்சென்று கவர்ந்தால், limelightக்கு வந்துவிட்டார்.
அதேசமயம் Lemon, lime ஆகியவை காய்களும் கூட.
Limes என்பவை பச்சையாக இருக்கும். சிறியதாக இருக்கும். Lemon என்பது மஞ்சளாகவும் lime-ஐவிடப் பெரியதாகவும் இருக்கும். Lemon-ஐவிட lime-ல் அதிக அமிலத்தன்மை உண்டு.
Spotlight என்றால்?
மேடையிலுள்ள ஒருவர்மீது மட்டும் குறுகலாகத் தீவிரமாகப் பாய்ச்சப்படும் ஒளிக் கதிர்களைத்தான் spotlight என்பார்கள். பிறரின் தீவிரக் கண்காணிப்பில் இருப்பதையும் இப்படிக் கூறலாம். The actor is constantly in the media spotlight.
‘Conflict of interest’ என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
நீங்கள் ஒரு நீதிபதி. உங்கள் தலைமையில் ஒரு வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர் உங்களுக்கு மிக நெருங்கிய நண்பர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு conflict of interest உண்டாகும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை தரலாமா என்பதில் உங்களிடம் உள்ள நீதிபதியும் உங்களுக்குள் இருக்கும் நண்பரும் எதிரெதிராகச் செயல்படுவார்கள்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். பகுதி நேர வேலையாக மாலை நேரங்களில் அதன் போட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். இந்த சூழலில் அந்த முதல் நிறுவனம் உங்களை வேலையிலிருந்து நீக்கிவிடலாம். “உங்களுக்கு conflict of interest உண்டு” என்று அந்த நிறுவனம் வேலைநீக்கத்துக்கான காரணம் கூறலாம்.
Taglines தொடர்பான நிறுவனங்களின் பட்டியல் இதோ:-
1. Apple
2. BMW
3. General Electric
4. Adidas
5. Bank of Baroda
6. Boeing
7. Bombay Stock Exchange
8. Hindustan Petroleum
9. LG
10. MRF
“It is a small world” என்பதற்கும், “world at large” என்பதற்கும் நேரெதிரான அர்த்தம்தானே? இப்படியொரு வினாவை எழுப்பியுள்ள வாசகருக்கு ‘அப்படியல்ல’ என்பதைத்தான் அழுத்தமாகவே கூறவேண்டியிருக்கிறது.
இதை அறிவதோடு world என்ற வார்த்தை தொடர்பான பலவிதப் பயன்பாடுகளையும் அப்படியே அறிந்து கொள்வோமா?
ஒரு நண்பரை, அவரைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு இடத்தில், சந்திக்கிறீர்கள். “It is such a small world” என்று நீங்களோ அவரோ கூறுவது இயல்பு.
“Sorry, we are worlds apart” என்று கூறிவிட்டுக் காதலி உங்களைக் கைவிட்டு விட்டால் “The world falls apart” என்று உங்களுக்குத் தோன்றலாம். அதாவது உலகமே இடிந்து விழுந்துவிட்டது - உங்களைப் பொறுத்தவரை. அந்தப் பரிதாப நிலையில் “We are worlds apart என்று என் காதலி கூறியதற்கு என்ன அர்த்தம்? ” என்று நீங்கள் கேட்டால் “நாம் வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள். உனக்கும் எனக்கும் ஒத்துப்போகவே போகாது” என்பதைத்தான் அவர் அப்படிக் கூறியிருக்கிறார் என்பதைப் பரிதாபத்துடன் நான் விளக்க நேரிடும். அப்போது ‘All the world is a stage’ என்று தத்துவம் பேசும் உரிமையும் உங்களுக்கு உண்டு. அதாவது ‘உலகமே ஒரு நாடக மேடை’.
மற்றொரு காதலி வசப்படும்போது நீங்கள் ‘On top of the world’ ஆக உணரக்கூடும். பொதுவாக எந்தவொரு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும்போதும் இப்படிப்பட்ட உணர்வு தோன்றும்.
திறமைசாலியாக இருந்தும் வெற்றி வசப்படவில்லை என்றால் “This is a phony world” என்று நீங்கள் கசப்புவழிய கூறலாம். இந்த உலகம் அசிங்கம் நிறைந்தது, நாணயமற்றது என்பதை நீங்கள் இப்படிக் குறிக்கிறீர்கள்.
“Do not lead a twilight world” என்றால் விதிகளை மீறிய ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழாதே என்று அர்த்தம்.
உங்கள் தயாரிப்பு அல்லது சிந்தனை பொது மக்களுக்கானது என்றால் “It is for the world at large” என்று நீங்கள் கூறுவதில் தவறில்லை.
போட்டியில் கேட்டுவிட்டால்?
The thieves robbed the bank in _______ with the watchman.
a) collision
b) collusion
c) coalition
d) compulsion
e) spite
திருடர்கள் வங்கியில் கொள்ளையடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை காவல்காரரின் எதிர்ப்பையும் மீறித் திருடர்கள் கொள்ளையடித்தனர் என்றால் “The thieves robbed the bank in spite of the resistance of the watchman” என்பதுபோல் வாக்கியம் இருந்திருக்க வேண்டும். தவிர in spite என்பதைத் தொடர்ந்து of என்கிற வார்த்தை கட்டாயம் இடம்பெற வேண்டும். அது இங்கு இல்லை. எனவே spite என்ற வார்த்தை பொருத்தமானது அல்ல.
Compulsion என்றால் கட்டாயம். இதுவும் வாக்கியத்தில் சரியாகப் பொருந்தவில்லை.
இப்போது மீதி வார்த்தைகளைப் பார்ப்போம்.
Collision என்றால் மோதல். Sixty people died in a train collision.
Coalition என்றால் கூட்டணி. பெரும்பாலும் அரசியல் கூட்டணி. The coalition Government at the centre may not last long.
Collusion என்றாலும் கூட்டுதான். ஆனால் அது ஒரு விதத்தில் ரகசியமான கூட்டு. இது வாக்கியத்தில் பொருந்துகிறது. காவல்காரருடன் ரகசியக் கூட்டு வைத்துக் கொண்டு கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்தனர். எனவே விடை collusion என்பதுதான்.
சிப்ஸ்
# Rollback என்றால் என்ன?
Reduction அல்லது decrease. A five percent rollback of income tax என்றால் வருமான வரியில் 5 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
# Outsmart என்றால்?
ஒருவரைப் புத்திசாலித்தனமாகத் தோற்கடிப்பது. (பெரும்பாலும் தந்திரமான முறையில் வெற்றி பெறுவதை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்).
# ZIP என்றால்?
Zone Improvement Plan. நமக்கு PIN Code. அமெரிக்காவில் ZIP code.
புதிருக்கு பதில் இருவாரங்களுக்கு முன் சில riddles மற்றும் crossword puzzle ஒன்றுக்கு பதில் கேட்டிருந்தோம். கேட்கப்பட்ட riddles இவைதான். 1. What does not exist but has a name? 2. Where can you always find diamonds? 3. What baby is born with whisker? இவற்றுக்கான விடைகள் முறையே Nothing, In a deck of cards, A kitten. மூன்றாவது கேள்விக்கு dolphin என்றும் சிலர் பதில் அளித்திருந்தார்கள். இரண்டாவது கேள்விக்கு ‘in a diamond shop’ என்ற வித்தியாசமான விடையை அளித்திருந்தார் இஸ்மாயில் சுகர்னோ. முதல் கேள்விக்கு வந்திருந்த சுவாரசியமான மாற்று விடைகள் - Imagination (கிருத்திகா சந்திரசேகர்), God (வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி), Vacuum (ஜெய பட்டாபிராமன், மாதவரம், சென்னை), Sky (இஸ்மாயில் சுகர்னோ). Riddlesக்கு உரிய காலத்துக்குள் சரியான விடைகளை அனுப்பிய பிற வாசகர்கள். 1) P.செர்புதீன் 2) S.மீனாட்சிசுந்தரம், பாவூர் சத்திரம் 3) N. சுவாமிநாதன், கோயம்புத்தூர் 4) டாக்டர் B. சுப்புலட்சுமி, ஈரோடு 5) G. அன்பழகன், ஆற்காடு 6) பாஸ்கர்ஆனந்த், நோவா, பொள்ளாச்சி 7) S.G. சுகதிரவன் 8) K.B. ராமகிருஷ்ணன், உடுமலைப் பேட்டை. Cross word puzzle-ன் விடைகள் இடமிருந்து வலம் - 1. Table 4. Slave 5. Erect மேலிருந்து கீழ் - 1. Taste 2. Blame 3. Eject. Riddles–ஐவிட மிக அதிகமான எண்ணிக்கையில் இந்தப் பகுதிக்கு வாசகர்கள் விடை அனுப்பியிருந்தார்கள். இவர்களில் பலரும் ஏதோ ஒரு வார்த்தையில் தவறு செய்திருந்தார்கள். உரிய நாட்களுக்குள் முழுமையான சரியான விடையை எழுதி அனுப்பியவர்களின் பட்டியல் இது. 1) S. கண்ணன், திருச்சி 2) அப்துல் மூனாஃப் 3) M. இளங்கோ 4) ஆவின் கோ-ஆப், ECS 5) சுஜா கிரேஸ் 6) S.மீனாட்சிசுந்தரம், பாவூர்சத்திரம் 7) N. சுவாமிநாதன், கோயம்புத்தூர் 8) நவஜீவன், திருச்சி-9 9) V. ராமச்சந்திரன், மரவனேரி, சேலம் 10) K. ராஜன் 11) R. ரகுராம், தென்காசி 12) டாக்டர் B. சுப்புலட்சுமி, ஈரோடு 13) G. அன்பழகன், ஆற்காடு 14) S.சந்தானம், மன்னார்குடி 15) ஜெயஸ்ரீ பட்டாபிராமன், மாதவரம், சென்னை 16) பாஸ்கர்ஆனந்த், நோவா, பொள்ளாச்சி 17) சிவராஜ் 18) S.G.கதிரவன் 19) சின்னூர் ராஜ்துரை 20) M. குழந்தைசாமி 21) இஸ்மாயில் சுகர்னோ 22) K.B.ராமகிருஷ்ணன், உடுமலைப் பேட்டை 23) ரெங்கராஜ் பலராமச்சந்திரன் |
(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT