Published : 21 Jan 2014 12:08 PM
Last Updated : 21 Jan 2014 12:08 PM

ஆர்வம் மட்டும் இருந்தால் ஆர்க்கியாலஜியில் சாதிக்கலாம்

பொருளாதார ரீதியாக வாழ்வில் மேன்மை தரக்கூடிய பட்டப்படிப்புகள் குறித்து தெரிந்துகொண்டோம். உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் என்றில்லாமல் தனி விருப்பம், பழமை மீதான ஆர்வம், மன திருப்தி, ஆசையை நிறைவேற்றக் கூடிய படிப்பாக பி.ஏ. ஆர்க்கியாலஜி உள்ளது. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனித் திறனை வெளிக்காட்டவும் சுய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் விரும்புபவர்கள் ஆர்க்கியாலஜி பட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம்.

பழங்கால மனித சமூகத்தின் வாழ்வியல், அவர்கள் விட்டுப்போன பொருட்கள், புதையுண்ட கட்டிடங்கள், பழங்கால மனித எலும்புக் கூடுகளை கண்டறிந்து, ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் போட்டு, ஆராய்ச்சி மேற்கொள்ளக்கூடிய கல்வியாக ஆர்க்கியாலஜி உள்ளது. பிளஸ் 2-வில் எந்த பாடப்பிரிவு எடுத்த மாணவ, மாணவியரும் இதைப் படிக்கலாம். வரலாறு, புவியியல், வேதியியல், ஓவியம் ஆகிய பாடங்களில் ஆர்வம் இருக்க வேண்டியது அவசியம்.

எகிப்து நாட்டில் ஆர்க்கியாலஜிஸ்ட்டுக்கு தனி மரியாதையும் செல்வாக்கும் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இதற்கான வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. நகரப் பகுதியில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்காது. காடுகள், நதிக்கரை, மலையடிவாரம் என பண்டைய மனிதர்கள் வாழ்ந்த புறநகரப் பகுதியில் ஆராய்ச்சி செய்யவேண்டி இருக்கும்.

ஆர்க்கியாலஜி பட்டப்படிப்பு ஆர்ச்சிஸ், மியூசியாலஜி, எத்திகிராஃபி என பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதைப் படிப்பவர்கள் மியூசியம், வரலாற்றுத் துறை, ஆராய்ச்சித் துறை, புவியியல் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறைகளில் பணி வாய்ப்பு பெற முடியும். ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா பணிக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய, மாநில அரசுகளில் பணி வாய்ப்பு பெறலாம். மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

பி.ஏ. ஆர்க்கியாலஜியுடன் பி.ஜி. ஆர்க்கியாலஜி டிப்ளமோ ஓராண்டு படித்து முடித்தவர்கள், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்) தேர்வு எழுத முடியும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரத்துடன் ஆராய்ச்சி மற்றும் விரிவுரையாளர் பணி வாய்ப்பு வழங்கப்படும். சென்னையில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. ஆர்ட்ஸ் இன் ஹிஸ்டரி, ஆர்க்கியாலஜி, மியூசியாலஜி பட்டப்படிப்பு உள்ளது.

எம்.ஏ. ஆர்க்கியாலஜி பட்டமேற்படிப்பு சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தில் உள்ளது. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்பதால், ஆங்கில மொழி அறிவு அவசியம். ஆங்கில மொழியில் நன்கு கற்றுத் தேர்வதன் மூலம் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. பணம், பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆர்வத்துக்கு முக்கியம் அளிப்பவர்கள் தனித்துவமிக்க ஆர்க்கியாலஜி படிப்பை தாராளமாக தேர்வு செய்யலாம். நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி, தொல்லியல் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x