Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM
பிளஸ்-2 தேர்வுக்கு இதுவரைவிண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தட்கல் திட்டம் வரும் மார்ச் மாதம் பிளஸ்-2தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.
தனித்தேர்வர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்கு வருகிற 17,18,19-ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்களின் விவரத்தை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tndge.in) அறிந்துகொள்ளலாம்.
சிறப்பு மையங்கள் விவரம்
மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் சிறப்பு மையங்களின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக்கட்டணத் தொகை பதிவு சிலிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எச் வகை தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50-ம் (இதர கட்டணம் ரூ.35), எச்.பி. வகை நேரடி தனித்தேர்வர்கள்
ரூ.150 மற்றும் ரூ.37 என மொத்தம் ரூ.187-ம் இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை பணமாக மட்டுமே சிறப்பு மையத்தில் செலுத்த வேண்டும்.
மாவட்டத்திலே தேர்வு மையம்
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை தேர்வுத் துறை இணையதளத்தில் பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான தேதி, பிறகு அறிவிக்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மைய விவரம் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.
தனித்தேர்வர்கள் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. அவர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT