Published : 23 Oct 2013 12:44 PM
Last Updated : 23 Oct 2013 12:44 PM

அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு?

அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், கமிஷன் கொடுப்பவர்களுக்கே ஆர்டர் வழங்கப்படுவதாகவும் சரமாரியாக புகார் எழுந்துள்ளன.

4,042 நூலகங்கள்

தமிழகத்தில் 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள் என 4,042 நூலகங்கள் உள்ளன.

இவை தவிர, சென்னை எழும்பூரில் கன்னிமாரா பொது நூலகம், கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய மாநில அளவிலான 2 பெரிய நூலகங்களும் தனியாக இயங்குகின்றன. இவற்றில் பாரம்பரியமிக்க கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவில் உள்ள 6 தேசிய நூலகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நூலக வரி

அரசு நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்காக தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம் உள்பட பல்வேறு விதமான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் இருக்கும். பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாக சென்றுவிடும்.

இந்த நூலக வரியில் இருந்து கிடைக்கும் தொகை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை ஆண்டுதோறும் தோராயமாக வழங்கும் ரூ.6 கோடி மானிய உதவியைக் கொண்டும் அரசு நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

தேர்வுக்குழு

எந்தெந்த புத்தகங்களை வாங்க வேண்டும்? என்பதை தேர்வுசெய்ய தனியே தேர்வுக்குழு உள்ளது. நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்க விரும்பும் பதிப்பகத்தினர், அந்தந்த மாவட்ட நூலகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு ரூ.100 பதிவு கட்டணம் செலுத்துவதுடன், புத்தக மாதிரிகளையும் கன்னிமாரா உள்பட இந்தியாவில் உள்ள 6 தேசிய நூலகங்களுக்கு அந்த புத்தகங்களை பதிவு தபாலில் அனுப்பி வைத்தற்கான ஒப்புகைச்சீட்டையும் அத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

நிதி பங்கீடு

இவ்வாறு பதிப்பகத்தினர் விண்ணப்பித்த புத்தகங்களை தேர்வுக்குழு ஆய்வுசெய்து என்னென்ன புத்தகங்களை வாங்கலாம்? என்ற பட்டியலை அரசிடம் வழங்கும்.

இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆண்டில் புத்தகங்கள் வாங்குவதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என்பதை கணக்கில்கொண்டு, தேர்வுசெய்யப்பட்ட புத்தகங்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படும். இருக்கின்ற நிதிக்கு ஏற்ப. வாங்கப்படும் புத்தக பிரதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

சிக்கல் ஆரம்பம்

தேர்வுக்குழுவால் எந்தெந்த புத்தகங்கள் தேர்வுசெய்யப்படுகின்றன? எந்தெந்த பதிப்பகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது கிடையாது. இதில் இருந்துதான் முறைகேடு ஆரம்பிப்பதாக பதிப்பகத்தினர் புகார் கூறுகிறார்கள்.

2010, 2011-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் வாங்குவதற்கு அரசு ரு.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிகிறது. புத்தகங்கள் வழங்குவதற்காக கிட்டதட்ட 1,200 பதிப்பகங்கள் விண்ணப்பித்துள்ளன.

கமிஷன் கொடுத்தால் ஆர்டர்?

இந்த புத்தக கொள்முதலில், கமிஷன் கொடுத்த பதிப்பகங்கள் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டிருப்பதாகவும், கமிஷன் கொடுக்காத காரணத்தினால் தரமான புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னணி பதிப்பக நிர்வாகிகள் சரிமாரியாக புகார் தெரிவிக்கிறார்கள்.

விண்ணப்பிக்கப்பட்ட புத்தகங்கள் விவரம், அவற்றில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட புத்தகங்கள், புத்தக தேர்வுக்கும், நிராகரிப்பு செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணங்கள், எந்தெந்த பதிப்பகங்களுக்கு எந்தெந்த புத்தகங்கள்? எத்தனை பிரதிகள்? வழங்கப்பட்ட நிதி விவரம்-இவையனைத்தையும் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிட்டால் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அடித்துச் சொல்கிறார்கள் முன்னணி பதிப்பகங்களின் நிர்வாகிகள்.

ஆன்லைனில் வெளியிட கோரிக்கை

புத்தக ஆர்டர் கிடைக்க வேண்டும் என்று ஒருசில பதிப்பகத்தினர் கமிஷன் கொடுப்பதால் தரமான புத்தகங்களை நூலகங்களில் பொதுமக்கள் வாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்பது அவர்களின் ஆதங்கம்.

நூலகங்களுக்கான புத்தக கொள்முதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் வெளியிட்டால், முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள்.

ரூ.100 கோடி நூலக வரி பாக்கி

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்துகின்ற சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாக சென்றுவிடும்.

பொதுமக்களிடம் இருந்து 10 சதவீத நூலக வரியை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் அந்த தொகையை நூலகத்துறைக்கு ஒழுங்காக செலுத்துவது கிடையாது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து நூலகத்துறைக்கு ரூ.100 கோடிக்கு மேல் நூலக வரி பாக்கி வரவேண்டியுள்ளது என்று பொது நூலகத்துறையினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x