Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
இளம் வயதில் ஒவ்வொருவருக்கும் திருடன் - போலீஸ் விளையாட்டில் ஆர்வம் இருக்கும். இதுவே பிற்காலத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது. மருத்துவம், பொறியியல், ஆடிட்டர் என பல்துறைகளை சேர்ந்தவர்களும்கூட புலனாய்வு படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
ஃபாரன்சிக் சயின்ஸ் படிப்பு மூலம் இவர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இப் படிப்பு முதுநிலைப் பட்டப்படிப்பில் மட்டுமே உள்ளது. வேதியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல், மைக்ரோ பயாலஜி, டி.ஃபார்ம், பி.டி.எஸ்., அப்லைடு சயின்ஸ் உள்ளிட்ட பட்டப் படிப்பு படித்தவர்கள், பட்ட மேற்படிப்பாக மாஸ்டர் இன் ஃபாரன்சிக் சயின்ஸ் படிக்கலாம். இதில் ஃபாரன்சிக் மெத்தடாலஜி, ஃபாரன்சிக் மெடிஷன், ஃபாரன்சிக் டெக்னாலஜி, வேதியியல், உயிரியல், டாக்ஸிகாலஜி, ஃபிங்கர் பிரிண்ட் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சுய ஆர்வம் இருப்பவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. ஏனெனில், இந்த துறையில் வேலைவாய்ப்பு குறைவு. தனியார் புலனாய்வு நிறுவனங்கள், காவல் துறை, தடய அறிவியல் துறை பணி வாய்ப்பு கிடைக்கும். ஆரம்பக் கட்டமாக 10,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இந்த படிப்பை தேர்வு செய்வதற்கு முன் மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடியவராகவும் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் இருப்பது அவசியம்.
குற்ற சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று ரத்த மாதிரி, கைரேகை, குற்றவாளி விட்டுச் சென்ற தடய பொருட்கள், ரோமம், சிறுநீர், ஆல்கஹால், வெடிபொருள் உள்ளிட்டவை கொண்டு அறிவியல் ரீதியாக துப்பு துலக்க வேண்டியிருக்கும். குற்ற சம்பவம் நடந்ததற்கான மூலக்கூறுகளைக் கொண்டு குற்றவாளியை கண்டறிய வேண்டும்.
எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் எம்.டி. இன் ஃபாரன்சிக் சயின்ஸ் பட்ட மேற்படிப்பும், எம்.பில்., பிஎச்.டி. வரையும் படிக்கலாம். ஃபாரன்சிக் சைக்காலஜி, ஃபாரன்சிக் கெமிஸ்ட், ஃபாரன்சிக் என்தோமாலஜி போன்ற சிறப்பு பாடப் பிரிவுகளும் உள்ளன. குற்றவாளிகளின் உருவம், குற்றச் சம்பவம் நடந்த இடம் ஆகியவற்றை ஓவியமாக வரையும் ஃபாரன்சிக் ஆர்ட்டிஸ்ட் படிப்பும் உண்டு.
தமிழகத்தில் சென்னையில் தடய அறிவியல் துறை மூலம் இரண்டு ஆண்டு படிக்கும் ஃபாரன்சிக் சயின்ஸ் பட்ட மேற்படிப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்காலிகமாக இப் படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஓஸ்மானியாவிலும், கர்நாடக மாநிலம் தார்வாடில் இயங்கும் கர்நாடக பல்கலைக்கழகத்திலும் இப் படிப்பை படிக்கலாம். தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் ஃபாரன்சிக் இன்பர்மேஷன் செக்யூரிட்டி பட்ட மேற்படிப்பு படிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT