Published : 19 Sep 2013 04:44 PM
Last Updated : 19 Sep 2013 04:44 PM

3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளும் சென்னை சட்டக் கல்லூரியையே தேர்வுசெய்தனர்.

1262 இடங்கள்

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பில், பட்டதாரிகள் சேரலாம். நடப்பு கல்வி ஆண்டில் 3 ஆண்டு பி.எல். படிப்பில் சேர 6,483 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5,731 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சாதனை படைத்த மாணவிகள்

தகுதியானவர்களின் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்ட பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 90.04 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி திவ்யா, 87 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்த சாலினி, 86.52 கட் ஆப் பெற்று 3-ம் இடத்தை பிடித்த அஸ்வினி ஆகிய 3 பேருமே சென்னை சட்டக் கல்லூரியை தேர்வுசெய்தனர்.

30-ந்தேதி வகுப்பு ஆரம்பம்

சிறப்பிடம் பெற்ற அந்த 3 மாணவிகளுக்கும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலர் ஜி.ராமச்சந்திரன், சட்டக் கல்வி இயக்குனர் நாராயணபெருமாள், பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3 ஆண்டு பி.எல். படிப்புக்கான வகுப்புகள் வருகிற 30-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் காலி இடங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த இடங்களை இந்த வாரமே 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x