Published : 16 May 2017 10:37 AM
Last Updated : 16 May 2017 10:37 AM
பொதுவாகவே தேர்வும் பயமும் பிரிக்க முடியாதவை. இந்நிலையில் நீட் தேர்வு நம் மாணவர்களை அச்சத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது. கடைசிவரை நடக்காது, தடை செய்யப்பட்டுவிடும் என்னும் பேச்சுகளுக்கு நடுவே கடந்த வாரம் இத்தேர்வு நடந்து முடிந்தது. அதுவும் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்னமே மாணவர்களைச் சோதனை என்கிற பெயரில் அச்சத்தில் ஆழ்த்தி! சில மையங்களில், தேர்வு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாததால் மாணவர்களின் சட்டையைக் கிழித்து, மாணவிகளின் தலை முடியைக் கலைத்து, நகைகளை அவிழ்க்கச் சொல்லி, இன்னும் மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் நீட் தேர்வு அதிகாரிகள்.
இரட்டை சுமை!
ஏதோ ஒரே ஒரு நாள் நடந்து முடிந்த நிகழ்வு இது என்றாலும், நெடுநாள் அதன் தாக்கம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோரிடமும் நீடிக்கும் என்கிறார் உளவியலாளர் தீப். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ‘உதவி’ என்கிற உயிர் சேதம் தடுக்கும் விழிப்புணர்வு இலவசத் தொலைபேசி ஆலோசனை நிகழ்ச்சியைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் மருத்துவர் தீப்.
“தொழில்முறைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முறையைச் சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழக அரசே நடத்திவந்தது. அப்போது மனச் சோர்வு, மன அழுத்தத்துக்குத் தீர்வு வேண்டி மாணவர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் எங்களுக்கு நிறைய அழைப்புகள் வரும். ஏனென்றால், பொதுத் தேர்வு என்பதே அச்சுறுத்தும் விஷயம்தான். அதுவும் பொதுத் தேர்வைத் தொடர்ந்து அதைவிடவும் கடினமான நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு இரட்டைச் சுமை. மாணவர்களின் நலன் கருதி அவர்களுடைய அச்சத்தைப் போக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாநில அரசு பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது. சொல்லப்போனால், அதன் பிறகு அப்பருவத்தில் இருக்கும் மாணவர்களின் மன உளைச்சலும் பல மடங்கு குறைந்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்” என்கிறார் தீப்.
பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரணமாகவே பதைபதைப்போடுதான் தேர்வு அறைக்குள் நுழைவார்கள். அப்படியிருக்க அவர்களைச் சோதனை செய்வதாகச் சொல்லிச் சங்கடப்படுத்துவது அதிகப்படியான மன அழுத்தத்தை உண்டாக்கும். “சோதனை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதைக் கவனத்தோடும், மரியாதையோடும் செயல்முறைப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். இதன் பின்விளைவு சிறிய அளவிலேயே இதுவரை வெளிப்பட்டிருக்கிறது. பிளஸ் டூ தேர்வுக்கான முடிவுக்காகக் காத்திருந்ததால், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்குள்ளேயே இந்த அதிர்ச்சியைப் புதைத்து வைத்திருந்திருப்பார்கள். இனி இதன் பாதகமான விளைவுகள் வெளிப்படும் அபாயம் உள்ளது” என எச்சரிக்கிறார் தீப்.
முறைகேட்டுக்கு வாய்ப்பே இல்லை
எல்லோரும் சமமான மாணவர்கள் என்பதே தவறான கண்ணோட்டம். கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், முதல் தலைமுறை மாணவர்களும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நீட் போன்ற தேர்வை எதிர்கொள்வதே மிகப் பெரிய சவால்தான். ஏற்கெனவே சவாலான ஒரு தேர்வை எழுதவரும் மாணவர்களைத் தேர்வெழுதும் முன்பே அவமானப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பொ. ராஜமாணிக்கம்.
“இந்தியப் பணிகளிலேயே உயர்வானதாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு களுக்குக்கூட இத்தகைய கெடுபிடியான தேர்வு விதிமுறைகள் கிடையாது. அதுவும் நீட் தேர்வைப் பொறுத்தவரை முறைகேடுகள் நடைபெற வாய்ப்பே கிடையாது. அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்க வேண்டிய 180 கேள்விகள். அவற்றை எழுத வெறும் 180 நிமிடங்கள். அப்படியிருக்க பிட் அடிப்பதற்கோ அல்லது குறுக்கு வழியில் விடைகளைக் கேட்டு எழுதுவதற்கோ சாத்தியமே கிடையாது.
அப்படியே முறைகேடுகள் நடக்கக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், அதற்குக் கண்ணியமான பல வழிகள் உள்ளன. ஆக, இத்தேர்வை அனைத்து மாணவர்களும் சுதந்திரமான மனநிலையில் எழுதிவிடக் கூடாது என்கிற நோக்கம் இதில் தலைதூக்குகிறது. மாணவ சமுதாயத்தைக் குற்றவாளிகள்போல நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்கிறார் ராஜமாணிக்கம்.
மாணவர்களைக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது தேர்வு முறை. அதிலும் இதுவரை எதிர்கொள்ளாத நீட் போன்ற தேர்வை மாணவர்கள் எழுத முன்னவரும்போது அவர்களைத் தோழமையோடு அணுகுவது மிக அவசியமாகிறது. இது தேர்வு அறைக்கு வெளியே மட்டும் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை அல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் நமது கல்வித் திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய கொள்கை.
முதல் முறை
இதுவரை இந்திய மருத்துவப் படிப்புக்கான ஒட்டுமொத்த இடங்களில் 15 சதவீதத்துக்கு மட்டுமே நீட் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திவந்தது. மீதம் உள்ள 85 சதவீத இடங்களையும் அந்தந்த மாநிலங்கள் வெவ்வேறு விதமாக நிரப்பிவந்தன. அதுவும் கடந்து ஆண்டு இரண்டு கட்டங்களாக நீட் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டோ ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான நீட் தேர்வு ஒரே நாளில், நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் முதன்முறையாக நடத்தப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT