Published : 30 Mar 2014 11:13 AM
Last Updated : 30 Mar 2014 11:13 AM
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் அபாரமான சிறுகதைகளில் ஒன்று ‘விகாசம்’. அந்தக் கதையில் பார்வையற்ற ராவுத்தர் என்பவர் ஜவுளிக்கடையில் பில்களை நொடிப்பொழுதில் மனக்கணக்காகப் போட்டுத் தருவார். ஒருநாள் கால்குலேட்டர் அக்கடைக்கு வந்து அவரது முக்கியத்துவத்தைக் குறைத்து விடும். கொஞ்ச நாட்கள்தான். பிறகு அவர் சரக்குகளின் கையிருப்பு, முக்கியமான தேதிகள், வருமான வரிக் கெடு தேதி போன்றவற்றை நினைவில் வைத்திருக்கும் கணினியாக மாறிவிடுவார்.
இதுபோல சிலருக்குச் சில விஷயங்களில் அபாரமான திறமை இருக்கும். இவர்களில் சிலருக்கு மூளை வளர்ச்சியில் சில பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு ஆட்டிஸம் (Autism) குறைபாடு இருக்கும். ஆட்டிஸக் குறைபாடு இருப்பவர்களுக்குப் பேச்சு வருவதில் பிரச்சினைகள் இருக்கும். பிறருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். யாருடனும் பழகாமல் தனியாகக் குறிப்பிட்ட சில செயல்களையே செய்துகொண்டிருப்பார்கள்.
கிம் பீக் (Kim Peek) என்ற அமெரிக்கருக்குப் பிறவியில் இருந்தே பல குறைபாடுகள். பேச்சு சரியாக வராது. நடப்பது தள்ளாட்டம்தான். சட்டைப் பொத்தான்களைக்கூடச் சரியாகப் போட முடியாது. ஆனால் அவர் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்துவிட்டு அதிலிருக்கும் எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பார். படிப்பதற்குக்கூட அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார். ஒரு பக்கத்தைச் சில நொடிகளில் படித்து விடுவார். அதிலும் வலது கண் ஒரு பக்கத்தையும் இடது கண் வேறொரு பக்கத்தையும் படிக்கும். எந்த வருடத்து தேதியைச் சொன்னாலும் அது என்ன கிழமை என்பதை நொடிப் பொழுதில் சொல்லிவிடுவார். அவர் கிம்ப்யூட்டர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
டெரெக் பாராவின்ஸி (Derek Paravinci) என்ற இங்கிலாந்து நாட்டவர் பார்வையற்றவர். அவரால் சரியாகப் பூட்டைக்கூட திறக்க முடியாது. ஆனால் ஒருமுறை இசையைக் கேட்டால் அதை அப்படியே பியானோ வில் வாசிப்பார். இதுபோன்ற குறிப்பிட்ட அபாரத் திறமைகள் இருப்பவர்களை ஆங்கிலத்தில் சவான்ட் (Savant) என்று அழைக்கிறார்கள். சில புகழ்பெற்ற விஞ்ஞானிகள், இசைமேதைகள்கூட இதுபோன்ற சவான்ட்டாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாகக் கணிதத் திறமை, படம் வரையும் திறமை, இசைத் திறமை, இயந்திரங்களைக் கையாளுதல் போன்ற சில விஷயங்களில் இவர்களுக்கு அபாரத் திறமை இருக்கும்.
ஒரு மாணவனுக்கு ஒருசில பாடங்களில் சரியாகத் திறமை இல்லையென்றால் அவனுக்கு எந்த விஷயத்தில் திறமை இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். இதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. எல்லோரும் எல்லா பாடங்களிலும் சராசரி மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் கல்வி முறை இவர்களது திறமையை வெளிக்கொண்டுவராது. எவ்வளவு பயிற்சி அளித்தாலும் மானைப் பறக்கவைக்க முடியாது. எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்கப் பள்ளிக்கூடங்கள் தொழிற்சாலைகள் அல்லவே.
-மீண்டும் நாளை...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT