Last Updated : 17 Feb, 2014 12:00 AM

 

Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM

சீலிங் ஃபேனின் கதை

பிலிப் தியல் ஜெர்மனியைச் சேர்ந்தவர். 1868ஆம் ஆண்டு தனது 21ஆம் வயதில் வேலை தேடி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குப் போனார். ஒரு தைரியத்தில்தான் அவர் அங்கே போனார். ஆனால் அங்கு வேலை கிடைப்பது, அதுவும் அவர் நினைத்தபடியான ஒரு நல்ல வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. சின்ன சின்ன இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களில்தான் வேலை கிடைத்தது. அம்மாதிரியான நிறுவனங்களில் வேலை வெகு நாள்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தார்.

ஒரு வழியாக அமெரிக்காவின் மிகப் பெரிய இயந்திரத் தயாரிப்பு நிறுவனமான சிங்கர் தயாரிப்பு நிறுவனத்தில் பிலிப் தியலுக்கு ஒரு வேலை கிடைத்தது. ஐஸ் மெரிட் சிங்கரின் நிறுவனமான அது, தையல் இயந்திரங்கள் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. பிலிப்புக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு. அவரும் இதைப் பயன்படுத்தித் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பால் வெகு விரைவில் பதவி உயர்வு பெற்று, அதன் தயாரிப்பு மேம்பாட்டு அதிகாரி ஆனார் பிலிப்.

சிங்கர் தையல் கருவி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில்தான் அவர் மேற்கூரை மின்விசிறியை (Ceiling Fan) கண்டுபிடித்தார். தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றியபோதுதான், மேற்கூரை மின்விசிறி கண்டுபிடிக்கும் சோதனையை அவர் மேற்கொண்டார். அப்போது தையல் இயந்திரத் தயாரிப்பில் பல புதிய யுக்திகளைப் பிலிப் கொண்டுவந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் தையல் இயந்திர மோட்டாருடன் இறக்கைகளை இணைத்துப் பார்க்கலாம் என அவருக்குத் தற்செயலாகத் தோன்றியுள்ளது. அதற்கு முன்பே மேஜை மின்விசிறி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அவர் இதைச் செய்து பார்த்தார்.

1880கள் கண்டுபிடிப்புகளின் காலம் எனலாம். அப்போது, அமெரிக்கா முழுவதும் பயன்பாட்டுக்கான கருவிகள் துரிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பிலிப் அலுவலக ரீதியிலான கண்டுபிடிப்புகளைக்கூடத் தன் வீட்டில் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படித் தன் வீட்டில் பணி செய்துகொண்டிருந்த ஒரு நாளில்தான், கூரையில் தன் மின்விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே பிலிப், மின் காயிலுடன் கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்திருந்தார். எடிசன் கண்டுபிடித்த மின் விளக்கிற்குப் பிலிப்பின் விளக்குதான் ஆதாரமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்துச் சர்ச்சையும் இருக்கிறது.

விளக்கையே உற்று நோக்கிக்கொண்டிருந்த பிலிப்பின் மனதில் விளக்குடன் இணைந்த மேற்கூரை மின்விசிறியைக் கண்டுபிடிக்கும் எண்ணம் உதித்துள்ளது. அதை நிரூபிப்பது போலவே, தொடக்கத்தில் அவர் சந்தைப்படுத்திய மின்விசிறி மின் விளக்குடன் கூடியதாகத்தான் இருந்தது. இது மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப், எலக்ட்ரிக் டிரில்லிங் இயந்திரம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுக்காக பிலிப் இன்று நினைவுகூரப்படுகிறார்.

அமெரிக்காவுக்கு வேலை தேடி ஒரு சாதாரண மனிதனாக வந்த பிலிப் தியல், தன் அபாரமான உழைப்பாலும் திறமையாலும் முன்னேறி 1906இல் ‘தியல் தயாரிப்பு நிறுவனம்’ என்னும் பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். மோட்டார், மின் விசிறி உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களை அந்நிறுவனம் தயாரித்து, சந்தைப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x