Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியல் 2 வாரத்தில் வெளியீடு

இந்த ஆண்டு எத்தனை அரசு காலிப்பணியிடங்களுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும் என்ற வருடாந்திர தேர்வு பட்டியலை 2 வாரத்தில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வுப் பட்டியல் அட்டவணை

மத்திய அரசு பணிகளுக்கு ஊழியர்களையும் அதிகாரிகளை யும் தேர்வுசெய்யும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மற்றும் பணியாளர் தேர் வாணையம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) ஆகியவை ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு எந்தெந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை (ஆனுவல் பிளானர்) முன்கூட்டியே வெளியிடுவது வழக்கம்.

போட்டித் தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வுக்கு தயார் ஆவதற்கு இந்த தேர்வுப் பட்டியல் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதே முறையைப் பின்பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர தேர்வுப் பட்டியல் அட்ட வணையை வெளியிட்டு வருகிறது.

2 வாரத்தில் வெளியிட ஏற்பாடு

2014-15-ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியல் அட்டவணை தயாரிக்கும் பணியில் டி.என்.பி.எஸ்.சி. மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. மத்திய அரசு தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், வங்கிப் பணி தேர்வுகள் போன்ற தேர்வுகள் நடத்தப்படும் நாளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வருடாந்திர தேர்வுப் பட்டியல் அட்டவணையை இறுதிசெய்து 2 வாரங்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. ஏற்பாடு செய்துள்ளது. எப்படியும் பொங்கலுக்குள் தேர்வுப் பட்டியல் அட்டவணையை வெளியிட்டுவிடுவோம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அட்டவணையில், போட்டித் தேர்வு (தோராயமான காலியிடங்களுடன்), அதற்கான அறிவிப்பு வெளியாகும் தேதி, தேர்வு நாள், முடிவு வெளியாகும் தேதி, நேர்முகத் தேர்வு நாள் ஆகிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுகள் பலவிதம்

டி.என்.பி.எஸ்.சி.யைப் பொறுத்தவரையில் பல்வேறு விதமான பொதுத் தேர்வுகளையும், தொழில்நுட்ப பணி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப்-1 தேர்வு, உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு குருப்-1-ஏ தேர்வு,

இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் பதவிக்கு குரூப்-1-பி தேர்வு, நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அதிகாரி போன்ற பணிகளுக்கு குரூப்-2 தேர்வு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு குரூப்-4 தேர்வு, வனப் பயிற்சியாளர் பதவிக்கு குரூப்-6 தேர்வு, நிர்வாக அதிகாரி கிரேடு-3 பணிக்கு குரூப்-7 தேர்வு, இதே பதவியில் கிரேடு- 4 பணிக்கு குரூப்-8 தேர்வு, வி.ஏ.ஓ. என பலவிதமான தேர்வுகளை நடத்துகிறது. இவை தவிர, உதவி தொழிலாளர் ஆணையர், புள்ளியியல் உதவி இயக்குநர், உதவி புள்ளியியல் ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், கைத்தறி உதவி இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணி தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x