Published : 13 Oct 2014 05:33 PM
Last Updated : 13 Oct 2014 05:33 PM

அமைதிக்கான வீரர்கள்

நடப்பு ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ஒரு இந்தியரும், ஒரு பாகிஸ்தானி சிறுமியும் பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள்.

17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வருவதற்காகவும், இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடி வருவதற்காகவும் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டிப்பெண் மலாலா

மலாலா மிகவும் சுட்டியான, துறு துறுப்பானஅழகுக் குழந்தை. தந்தை யூசுப்சாய் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலே படித்தாள். அவளது சுவாத் கிராமம் மலை சூழ்ந்த, நதி பாயும், இயற்கை எழில் கொஞ்சும் இடம்.

2008 -ன் தொடக்கத்தில் அந்த கிராமத்தைத் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சவுக்கடி உள்ளிட்ட கடுமையானத் தண்டனைகளை விதித்தார்கள்.

பள்ளி செல்லத் தடை

ஒரு நாள் தாலிபான் தலைவர் அரசு வானொலி நிலையத்தைக் கைப்பற்றினார். “ஜனவரி 15 முதல் சுவாத் கிராமப் பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது, பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லக்கூடாது.” என உத்திரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பல சிறுமிகள், பெண்கள் ஆட்டு மந்தைகளாக நடத்தப்பட்டனர்.

ஊடகத்தில் மலாலா

இத்தனையையும் பார்த்த 11 வயதுச் சிறுமியான மலாலா தன் உள்ளக் குமுறலை 2009-ம் ஆண்டில், பி.பி.சி. நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில், ‘குல் மகாய்’ என்ற பெயரில் வெளியிட்டாள். தன் ஊர் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுகிறது என்று உருக்கமாக விவரித்தாள். தொடர்ந்து தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என வலைப்பதிவு எழுதத் தொடங்கினாள். தாலிபான்கள் மலாலாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால் சளைக்காமல் பெண் கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றி எழுதினாள்.

மீண்டும் பள்ளிக்கு..

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாலிபானுடன் சண்டையிட்டு அவர்கள் பிடியிலிருந்து சவாத் கிராமத்தை மீட்டது. மீண்டும் மலாலா தன்னுடைய பள்ளிக்கேச் செல்லத் தொடங்கினாள்.

ஒரு நாள் தாலிபான் படையை சேர்ந்த ஒருவன் பள்ளிப் பேருந்தில் ஏறினான். யார் மலாலா? யார் மலாலா? என கேட்டுப் பதில் சொல்வதற்குள், துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு நெற்றிக்குள் நுழைந்து, கழுத்து வழியாக, இடது தோளுக்குள் பாய்ந்தது.

அதுபற்றி மலாலா “ கண் விழித்துப் பார்த்தபோது நான் இங்கிலாந்தின் மருத்துவமனையில் கிடந்தேன். ஏழு நாட்களாகக் கோமாவில் இருந்தேன் எனச் சொன்னார்கள். உயிரோடு இருக்கிறேன் எனச் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்னால் பேச முடியவில்லை. என் கழுத்தில் குழாய் செருகப்பட்டிருந்தது. நான் பேப்பர், பேனா கேட்டேன். அதில் என் அப்பா எங்கே? யார் பில் கட்டுவார்கள்? என்று எழுதினேன்” என்றார்.

ஐநா சபையில் மலாலா பேசும்போது,“எதற்காக படிக்க வேண்டும் என்பது சுடப்பட்ட பிறகுதான் நன்கு புரிந்தது. என்னைச் சுட்டவன், என்னுள் இருந்த பயத்தை முழுமையாகக் கொன்றுவிட்டான். இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அனைத்துக் குழந்தைகளும், ஆணோ, பெண்ணோ, கறுப்போ, வெள்ளையோ, கிருத்துவரோ, இஸ்லாமியரோ, பள்ளிக்கு செல்லும் நாள் நிச்சயம் வரும்” என்றார்.

'நான் மலாலா’ என்ற தலைப்பில், ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறார் மலாலா. பாகிஸ்தானின் ‘தேசிய இளைஞர் அமைதி விருது’ மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இன்று அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறுவர்களைக் காத்த கைலாஷ்

“நான் காலை 8 மணிமுதல் அடுத்த நாள் காலை 1 மணி வரை நாள் முழுவதும் என் கால்களை ஒரு அங்குலம் அளவும் நகர்த்தாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே தைத்துக் கொண்டிருப்பேன். ஒரு காலை சற்றே அசைத்தால் கூட அடிப்பார்கள். வலியால் அழுது எங்களை விட்டுவிடுங்கள் என்றால் முகத்தில் அறைவார்கள்” என்கிறான் சிறுவன் ஆசிஃப்.

ஆசிஃப் குழந்தைத் தொழிலாளியாக வதைக்கப்பட்ட நிலையிலிருந்து கைலாஷ் சத்யார்த்தியின் அமைப்பால் மீட்டெடுக் கப்பட்டவர்களில் ஒருவன். நாம் ரசித்து அணியும் ஜரிகை வேலைப்பாடு கொண்ட துணிகளின் இழைகளுக்கு இடையில் சிக்குண்டுக் கிடக்கிறது இது போன்ற குழந்தைகளின் உழைப்பு.

மீட்புப்பணி

லட்சக்கணக்கான குழந்தைகள் தினம் தினம் கொத்தடிமைகளாக் கடத்தப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள். குழந்தை அடிமைத்தனம் இப்படியாக நீடித்து வருவதைக் கண்டு கோபம் கொண்ட சத்யார்த்தி “ பச்சான் பச்சாவோ அந்தோலன் “ என்ற தனியார் சேவை நிறுவனத்தை 1990-ல் துவக்கினார்.

இந்த அமைப்பு தங்கள் குழந்தைகளை மீட்டுத்தருமாறு வேண்டுகிற பெற்றோர்களுக்காக செயல்படுகிறது. சத்யார்த்தியோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர் படை அவரோடு களத்தில் செயல்படுகிறது. முதலில் ரகசிய சோதனை மற்றும் மீட்புப்பணி என திட்டமிடுகிறார்கள். அடுத்து காவல் துறை மற்றும் சட்ட நிபுணர்களை

உடன் அழைத்துச் செல்கின்றனர். அதிரடியாக குழந்தைகள் அடிமைப்படுத்தப்படும் தொழிற்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள். இந்தப் பணியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டார். மற்றொருவர் அடித்துக் கொல்லப் பட்டார். ஆனால் இது போன்ற சவால்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றிக்கொண்டவர்தான் இந்த கைலாஷ் சத்யார்த்தி.

“குழந்தை அடிமை நிலையை ஒழிக்கவே பச்சான் பச்சாவோ அந்தோலன் உருவாக்கப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் தங்கள் குழந்தைப் பருவத்தை முழுமையாக கொண்டாட வேண்டும். இதுவே எங்கள் இலக்கு” என்கிறார் சத்தியார்த்தி.

ரக்மார்க்

மலாலா தன் சாம்பலில் இருந்து மீண்டெழுந்து உயரப் பறக்கும் ஃபீனிக்ஸ் புராணப் பறவை போல் என்றால் சத்யார்த்தியோ கூடுகளில் இருந்து தவறி விழுந்து சிறகொடிந்து போன குருவிகளை மீண்டும் பறக்கச் செய்பவர். சத்தியார்த்தி மத்தியப்பிரதேசத்தில் பிறந்தவர்,தற்போது டில்லியில் வசிக்கிறார்.

தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார்.

பரிசுத் தொகை

அமைதிக்கான நோபல் பரிசின் பரிசுத்தொகை 690,000 பவுண்டுகள். அதாவது மலாலா, கைலாஷ் சத்யார்த்தி இருவருக்கும் தலா ரூ.3 கோடியே 40 லட்சங்கள் கிடைக்கும்.இது அவர்களின் முயற்சிகளுக்கு வலுவூட்டும்.

இதர வெற்றியாளர்கள்

அமைதிக்கான நோபல் பரிசு தவிர்த்து மற்ற பிரிவுகளில் நோபல் பரிசுகளை பெற்றவர்கள் வருமாறு:

வேதியியல்

எரிக் பெட்சிக், ஸ்டஃபான் ஹெல், வில்லியம் மோர்னர் - இவர்கள் மூன்று பேரும்தான் வேதியியல் பிரிவில் 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள். இவர்களில் எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகிய இரு விஞ்ஞானிகளும் அமெரிக்கர்கள். ஸ்டஃபான் ஹெல் ஜெர்மானியர்.

இவர்கள் ஒளிரும் நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, ஒளிரும் நவீன நுண்ணோக்கியை கண்டுபிடித்துள்ளனர். இதனால் நேரடியாக புளோரஸன்ஸ் அல்லது பாஸ்போரசென்ஸ் ஒளியைப் பாய்ச்சி ஆய்வு செய்ய முடியும். உடலுக்குள் செல்களின் வளர்ச்சி, நோயின் தாக்கம் ஆகியவற்றையும் மிகவும் துல்லியமாக இனி அறிய முடியும்.

இயற்பியல்

இசாமு அகாசகி, ஹிரோசி இசாமு அகாசகி, ஷுஜி நகமுரா- இவர்கள் மூன்று பேரும்தான் இயற்பியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றவர்கள். இவர்களில் இசாமு அகாசகி, ஹிரோசி இசாமு இருவரும் ஜப்பானியர்கள். நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். க்ஷுஜி நகமுரா அமெரிக்கர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் மூன்று பேரும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத புதிய எல்.இ.டி. விளக்குகளை கண்டுபிடித்துள்ளனர். மிகவும் குறைந்த ஆற்றலில் வழக்கமான ஒளியைவிட கூடுதலான ஒளியை இந்த டயோடுகள் மூலம் பெறலாம். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் கம்ப்யூட்டர் திரைகள், நவீன ஸ்மார்ட் செல்போன் திரைகளில் ‘எல்இடி’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

இலக்கியம்

‘பாட்ரிக் மோதியானோ’ இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பிரெஞ்சு எழுத்தாளர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸூக்கு அருகில் 1945-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஒரு யூதர். தாய், பெல்ஜிய சினிமா கதாநாயகி. பிரான்ஸ் நாஜிகளின் ஆதிக்கத்தில் இருந்த பதற்றமான காலகட்டத்தில் மிக ரகசியமாகத் தங்கள் காதலை இருவரும் வளர்த்துவந்தனர்.

நாஜிகளின் பிரான்ஸ் படையெடுப்பின்போது அங்குள்ள சாதாரண மனிதர்களின் வாழ்க்கை என்னவாக இருந்தது என்பதை அச்சு அசலாகத் தன் கதைகளின் மூலம் மோதியானோ சித்திரித்தார். அவரது எழுத்தின் இந்தப் பண்பையே நோபல் பரிசு குறிப்பு, மேற்கோள் காட்டுகிறது.

அவரது முதல் நாவலான La place de l'Etoile (Place the star)-ல் தன் முழு படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். 1968-ல் இது வெளிவந்தது. பாரிஸும், போர் சூழலும்தான் இவரது கதைகளின் மையம். திரைக்கதைகளும் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மருத்துவம்

நார்வே நாட்டைச் சேர்ந்த மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் எனும் கணவன்- மனைவிக்கு இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே துறையில் சாதனை புரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃபே இந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்.

மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் இருவரும் பத்தாண்டுக் கால உழைப்பால் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். கிரிட் செல்கள் என்பவைதான் நாம் போக வேண்டிய இடத்தைக் கண்டு உணர்ந்து நம்மை அழைத்துச் செல்கின்றன என அவர்கள் அறிவித்துள்ளனர்.

1971-ல் ஜான் ஓ கீஃபே நமது மூளைக்குள் இருக்கும் ஜி.பி.எஸ். (Global Positioning System -GPS) சிஸ்டத்தைக் கண்டுபிடித்தார். அதாவது ஒரு திசையிலிருந்து பயணிக்கும்போது மூளை தானாக ஒரு மேப்பை உருவாக்கிப் பார்த்துக்கொள்கிறது என்பதை ஒரு எலியைக் கொண்டு அவர் நிரூபித்துக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x