Last Updated : 06 Oct, 2014 03:07 PM

 

Published : 06 Oct 2014 03:07 PM
Last Updated : 06 Oct 2014 03:07 PM

சார் போஸ்ட்

கடிதம் எழுதியதும் அதற்காகக் காத்திருந்ததும் இனிமையான பழைய நினைவுகளாகிவிட்டன. இப்போதைய தலைமுறை மின்னஞ்சல், வாட்ஸ் அப் யுகத்தில் வாழ்கிறது. நினைத்தவுடன் பகிர வேண்டிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறது.

எனவே அது அஞ்சல் துறையின் அவசியத்தையோ தபால்காரருக்கும் மக்களுக்குமிருந்த அன்னியோன்யத்தையோ உணர்ந்திருக்க வழியில்லை. ஆனால் அஞ்சல் துறை கடிதம் அனுப்புவதை மட்டும் வேலையாக வைத்திருக்கவில்லை. அதன் பல பணிகளில் கடிதங்களை அனுப்புவதும் ஒன்று, அவ்வளவுதான்.

அஞ்சல் வரலாறு

ஒரு செய்தியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்த மனிதன் என்று விரும்பினானோ அன்றுதான் அஞ்சல் துறையின் அவசியம் உணரப்பட்டது. தொடக்கக் காலத்தில் நடந்து சென்றும், குதிரையில் சென்றும் தெரிவிக்க வேண்டிய தகவல்களை, செய்திகளைத் தூதர்கள் சொல்லிவந்தார்கள்.

1600, 1700களில் பெரும்பாலான நாடுகளில் அஞ்சலகச் சேவை தொடங்கப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டார்கள். 1800களில் அஞ்சல்கள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்களை அதிகமாக உணர்ந்தார்கள். எனவே அனைத்து நாடுகளின் அஞ்சல் துறையினரையும் அழைத்துப் பேசி இதற்கொரு முடிவெடுக்க விரும்பினார்கள்.

இதனால் 15க்கும் மேற்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றை 1863-ல் அமெரிக்கப் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் மாண்ட்கோமெரி ப்ளைர் என்பவர் நடத்தினார். அஞ்சல்கள் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளும் இதில் விவாதிக்கப்பட்டன.

இதனடிப்படையில் சில முடிவுகளை எட்டினார்கள், சர்வதேச அஞ்சல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய விதிமுறைகளைக் கட்டமைத்தார்கள், பரஸ்பரப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டார்கள். ஆனால் சர்வதேச அஞ்சல் ஒப்பந்தம் போடுவதை மட்டும் ஏனோ விட்டுவிட்டார்கள்.

அஞ்சல் தினம்

இந்நிலையில் வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த அஞ்சல் துறை அதிகாரி ஹென்ரிச் வோன் ஸ்டீபன் என்பவர் 1874-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சுவிட்ஸர்லாந்தின் பெர்னே நகரில் ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு என்பது இப்போதைய ஜெர்மனி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அதில் சுமார் 22 நாடுகள் கலந்துகொண்டன. அதன் தொடர்ச்சியாக 1874 அக்டோபர் ஒன்பது அன்று ஜெனரல் போஸ்டல் யூனியன் என அழைக்கப்பட்ட சர்வதேச அஞ்சல் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

உலகத்தின் தகவல் தொடர்புக்கு இந்த அமைப்பு வலிவூட்டியது. அஞ்சல் துறையில் இந்த அமைப்பின் தொடக்கம் முக்கியமான திருப்புமுனை. ஆகவே அந்த நாளை உலக அஞ்சல் தினமாகக் கொண்டாடுவது வழக்கமானது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. பிரிட்டிஷ் இந்தியா 1876-ல் ஜெனரல் போஸ்டல் யூனியனில் உறுப்பினரானது. இந்தியா முழுவதும் அமைந்திருந்த மாகாணங்களில் அஞ்சல் துறையின் சார்பில் வங்கிகள் தொடங்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இந்தச் சேவை குறிப்பிட்ட சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் வங்காள மாகாணத்திலோ பம்பாய் மாகாணத்திலோ இந்தச் சேவை தொடங்கப்படவில்லை. 1884 பிப்ரவரியில் ஆயுள் காப்பீடு திட்டங்களும் அஞ்சல் துறையில் தொடங்கப்பட்டன. படிப்படியாக அஞ்சல் துறையின் சேவை தனது எல்லையை விரித்துக்கொண்டேபோனது. ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் அது பாலமாகச் செயல்படத் தொடங்கியது.

நாம் இப்போது இமெயில் காலத்தில் வாழ்கிறோம். பணப்பரிமாற்றங்களை மிக எளிதாக இணையம் மூலம் நிறைவேற்றுகிறோம். ஆனால் முன்பெல்லாம் கடிதங்கள், பணம், முக்கிய அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள அஞ்சல் துறையின் உதவி அத்தியாவசியமானது.

இப்போதும் நகரங்களிலிருந்து உள்ளொடுங்கிய கிராமங்கள் பல அஞ்சல் துறையின் சேவையை எதிர்பார்த்தே காலத்தை ஓட்டுகின்றன. ராணுவத் துறையினருக்கு அஞ்சல் துறை அநேக வகையில் உதவியாக இருந்துவருகிறது. ஆகவே அஞ்சல் துறையின் அவசியத்தைப் போற்றும் வகையில் உலக அஞ்சல் நாளை ஒட்டி அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் அஞ்சல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தேசிய அஞ்சல் நாளை முன்னிட்டுக் கருத்தரங்கங்கள் நடத்துவார்கள். புதிய சேவைகளைத் தொடங்குவார்கள். தபால் தலைகள் அறிமுகமாகும். நாடு முழுவதும் அஞ்சல் துறைக்கு இந்த நாளில் புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் பலவகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறும். இதை ஒருவகையில் அஞ்சல் துறை தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நாள் என்றே சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x