Published : 15 Nov 2013 10:45 AM
Last Updated : 15 Nov 2013 10:45 AM

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - அடுத்த ஆண்டு வழங்கப்படும்

16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.

பெரும் வரப்பிரசாதம்

அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் இனிமேல் தவிர்க்கப்படும்.

தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1.34 கோடி மாணவர்களுக்கு பயன்

கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப் பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன.

மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x