Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

டி.இ.டி. தேர்வானவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மார்க்- தமிழக அரசு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

தகுதித்தேர்வு

கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று 12,596 இடைநிலை ஆசிரியர்களும், 14,496 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதமாக (82 மார்க்) நிர்ணயித்து அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மார்க் முறை பின்பற்றப்பட உள்ளது. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர்கள் என்றால் பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) 40 சதவீதமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிய வெயிட்டேஜ் மார்க்

தகுதித் தேர்வு மதிப்பெண் ணைப் பொருத்தவரையில், ஒவ்வொரு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணுக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் மார்க் நிர்ணயிக்கப்பட்டு முன்பு அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 5 சதவீத மதிப்பெண் சலுகையால் தேர்ச்சி பெற்றோருக்கு தகுதித்தேர்வுக்கு எவ்வளவு மார்க் வழங்கப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்தது.

தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான 42 மதிப்பெண் வழங்கப்படுமா? இல்லை குறைத்து நிர்ணயிக்கப்படுமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், தகுதித்தேர்வுக்கான புதிய வெயிட்டேஜ் மார்க் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

குறைந்தபட்ச மதிப்பெண் 36

இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுக்கு பின்வருமாறு வெயிட்டேஜ் மார்க் வழங்கப்படும்.

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் - 60 மதிப்பெண்

80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை – 54 மதிப்பெண்

70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை – 48 மதிப்பெண்

60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை – 42 மதிப்பெண்

55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை – 36 மதிப்பெண்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுப்படி, 5 சதவீத மதிப்பெண் குறைப்பு சலுகையால் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வுக்கான வெயிட்டேஜ் மார்க் 60-க்கு 36 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x