Last Updated : 19 Jul, 2016 12:04 PM

 

Published : 19 Jul 2016 12:04 PM
Last Updated : 19 Jul 2016 12:04 PM

தொந்தரவு தராத விளம்பரங்கள் சாத்தியமா?

இணையம் என்பதை வெறும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தாமல் கல்விக்காகவும் போட்டித் தேர்வுக்காகவும் பயன்படுத்தும் மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாகவே உள்ளனர். தினசரிச் செய்திகளையும் உலக விஷயங்களையும் அவர்களுக்கு வழங்குவதில் இணையத்துக்கு முக்கிய இடமிருக்கிறது. இணையதளத்தில் செய்திகளைப் படிக்கும்போதும், தகவல்களைத் தேடும்போதும் அவற்றில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழக்கம். செய்திச் சேவையை அளித்துவரும் இணையதளங்களைப் பொறுத்தவரை அவை தமது பார்வையாளர்களுக்குக் கட்டணம் என எதையுமே விதிப்பதில்லை.

அவற்றின் வருமானம் அவை தங்கள் இணையதளங்களில் பதிவேற்றும் விளம்பரங்கள் மூலமே கிடைக்கின்றன. இணையத்தின் பயனாளிக்கும் இந்த விவரம் தெரியாமலில்லை. அவர்களில் அதிகச் சதவீதமானோர் விளம்பரங்களைச் சொடுக்கி, தாங்கள் பார்க்கும் இணையதளத்துக்கு வருமானம் பெற்றுத்தருவதை விரும்பவும் செய்கிறார்கள். மிகக் குறைந்த சதவீதத்தினரே விளம்பரங்களே இடம்பெறக் கூடாது என ஆசைப்படுகின்றனர்.

விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருள்கள்

ஆனால் செய்தியைப் படிக்கவிடாமல் செய்துவிடும் அளவுக்கு விளம்பரங்கள் இணையத்தின் பக்கத்தை ஆக்கிரமிக்கும்போது பயனாளிகள் அந்த விளம்பரங்களைத் தடுப்பது பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள். இத்தகைய விளம்பரங்களைத் தடுப்பதற்கான மென்பொருள்கள் மிகவும் சுலபமாக, இலவசமாக இணையத்திலேயே கிடைக்கின்றன.

ஆகவே பயனாளிகள் அவற்றைப் பயன்படுத்தி விளம்பரங்களை எளிதாகத் தடுத்துவிடுகின்றனர். இதனால் சில இணையதளங்கள் அப்படி விளம்பரங்களைத் தடுத்துவிடும் பயனாளிகளுக்குத் தங்கள் சேவையை அளிப்பதை மறுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டன. அத்தகைய இணையதளங்கள் விளம்பரங்களை மறுக்கும் பயனாளிகளிடம் விளம்பரத் தடையை நீக்கும்படியும் நீக்கினால் மட்டுமே தங்கள் சேவையை அனுபவிக்கும் நிலைமை உருவாகும் என்றும் கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இணையதளத்தைப் பயன்படுத்துவதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏதாவது ஒரு இலவச மென்பொருளைப் பயன்படுத்தி விளம்பரங்களைத் தடுத்துவிடுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்றால் விளம்பரங்கள் எந்த அளவுக்கு அவர்களுக்கு இடையூறாக அமைந்துள்ளன என்பதை எண்ணிப் பாருங்கள். விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருள்களை உருவாக்கும் நிறுவனங்களுக்குச் சமீப காலமாக இந்திய மொபைல் சந்தை கைகொடுப்பது வெகுவாக அதிகரித்துவருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கெல்லாம் பொருள் இணையத்தில் கட்டுக்கடங்காமல் விளம்பரங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதுதானே?

விரும்பினால் பாருங்கள்!

ஓர் இணையதளத்தில் விளம்பரங்கள் இடம்பெறுவது சரிதான். ஆனால் அவை பிரதான சேவையை அனுபவிக்க விடாமல் தடுக்கும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் இணையதளங்கள் கவனமாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்குத் தொந்தரவு தராத வகையில் விளம்பரங்களை அமைக்கும்போது பயனாளிகளும் விளம்பரங்களைத் தடுப்பது பற்றி யோசிக்கப்போவதில்லை.

ஆனால் வருமானத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி முழுக்க முழுக்க இணையதளப் பக்கத்தை விளம்பரங்களால் நிறைப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. மேலும் தானாக ஓடும் வகையிலான வீடியோக்கள் பயனாளிகளை மிகவும் திசை திருப்பும் வகையில் அமைந்துவிடுகின்றன.

போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கும் ஒரு மாணவர் முக்கியமான தகவல் ஒன்றுக்காக இணையத்தை நாடும்போது அவரை அலைக்கழிக்கும் வகையில் விளம்பரங்கள் அமைந்துவிடும் போது அவர் என்ன செய்வார்? விளம்பரங்களைத் தடுத்துவிடத்தான் துடிப்பார்.

அதுவே அவருக்கும் தகவலையும் தந்து, வாய்ப்பு கிடைக்கும்போது இந்த விளம்பரங்களையும் பாருங்கள் என்று ஒரு வாய்ப்பைத் தந்தால் அவரும் அதில் கவனம் செலுத்துவார். இந்த விஷயத்தை இணையதளச் சேவை செய்து தரும் நிறுவனங்கள் யோசிப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x