Published : 25 Apr 2017 11:03 AM
Last Updated : 25 Apr 2017 11:03 AM

வாசிப்பின் சிறகுகள்

வெறும் காகிதங்களும், அச்சிடப்பட்ட எழுத்துகளும் நிறைந்து மட்டுமல்ல புத்தகங்கள். ஒருவர் தான் என்னவாக விரும்புகிறாரோ அவ்வாறாகவே அவரை மாற்றும் வல்லமை படைத்தவை அவை.

உலக யுத்தங்களால் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் உணர்த்தும் சக்தி அவற்றுக்கு உண்டு. அதேபோல அழகிய நகரங்களையும் புத்தகத்தின் வரிகளின் மூலம் ஒருவரால் ரசிக்க முடியும். இத்தகைய புத்தகங்களின் மதிப்பை உயர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தகம் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

சேகரிக்கப்பட்ட பொக்கிஷம்

இந்நாளின் முக்கியத்துவத்தையொட்டி இந்திய மாணவர் சங்கமும் (எஸ்.எஃப்.ஐ) ஐ.ஐ.டி. மாணவர்களும் ஒன்றிணைத்து ‘சிறகுகள் விரிப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினர். நடிகை ரோகிணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். உலகப் புத்தக தினத்தன்று சைதாப்பேட்டை சூர்யா நகரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்காகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடந்த ஒரு மாதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்துள்ளனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பாடப் புத்தகம், அகராதி, சிறுகதை தொகுப்பும், தலைவர்கள் குறித்த வரலாற்றுப் புத்தகம், அறிவியல் புத்தகம் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டி

“மாணவர்கள் அமைப்பு என்றால் போராட்டம் மட்டும் செய்வார்கள் என்ற நினைப்புதான் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் எங்கள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகவே மாணவர்களுக்குப் புத்தகங்கள் கொடுப்பது, நடப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்க வாசகர் வட்டம் நடத்துவது என தொடர்ச்சியாக பல ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதற்காகக் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்களை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுள்ளோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் பிரித்து வழங்குகிறோம்” என்றார் இந்திய மாணவர் சங்க தென் சென்னை மாவட்டச் செயலாளர் நிருபன்.

“ ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள சூர்யா நகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களில் சிலர் தங்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாங்க முடியாத பொருளாதாரச் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தபோதுதான் மற்றவர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று அவர்களுக்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்தோம். இந்த முயற்சியில் நானும் என் நண்பர்களும் மாணவர் சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இந்தப் பகுதியில் ஒரு சிறிய நூலகமும் விரைவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்ட மாணவரான உம்மன்.

பாடப் புத்தகங்களைத் தாண்டிப் பல விதமானப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் இளைஞர்களின் உலகம் விரிவடையும். தங்களுடைய இலக்கைக் கண்டடைந்து அடுத்தகட்டத்துக்கு செல்லவும் பார்வையை விசாலப்படுத்தும். அத்தகைய வாசிப்பை வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்காக மாணவர்களே எடுத்த இந்த முயற்சி கல்வியாளர்கள் பலரால் பாராட்டப்பட்டுவருகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x