Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM
பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது. அந்த வகையில், படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகைக்காக 3 வகை யான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை:
1. தேசிய திறனாய்வுத் தேர்வு (National Talent Search Exmn) 2. தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு (National Means cum Merit Scholarship)
3. ஊரக திறனாய்வுத் தேர்வு (TRUST)
தேசிய திறனாய்வுத் தேர்வு
தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்.
முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்.
கல்வி உதவித்தொகை தேர்வு
இந்த தேர்வு, எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தகுதித்தேர்வு ஆகும். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 7ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எனில் 50 சதவீதம்.
தேர்வுக்கான பாடத்திட் டத்தைப் பொறுத்தவரையில், 7ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டமும், 8ஆம் வகுப்பில் காலாண்டுத் தேர்வு வரையிலான பாடத்திட்டமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இந்தத் தேர்வை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் 6,695 பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப் படுகிறது. பிளஸ்-2 வரை இந்த உதவித்தொகையைப் பெறலாம்.
ஊரக திறனாய்வுத் தேர்வு
டிரஸ்ட் தேர்வு என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தேர்வு, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வு செய்யப் படுகிறார்கள். அவர்கள் பிளஸ்-2 படிக்கும் வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT