Published : 26 Jul 2016 10:00 AM
Last Updated : 26 Jul 2016 10:00 AM
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது என்பது உங்களுக்குத் தெரிந்த சங்கதிதான். ஆனால், பொறியியல் கல்லூரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இயங்குவது அகில இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) வழிகாட்டுதலின் கீழ்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏஐசிடிஇ தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை கூறும் அமைப்பும்கூட. நாடு முழுவதும் தன் அதிகாரத்தைக் கிளை பரப்பி வைத்திருக்கும் இந்த அமைப்பின் வரலாற்றையும், அதன் செயல்பாடுகளையும் பார்ப்போம்.
தொடக்கம்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நாடு சுதந்திரம் அடையும் முன்பே 1945-லேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சட்டரீதியான அமைப்பாக இது இருக்கவில்லை. என்றாலும், இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கை இந்த அமைப்பு ஆற்றியிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து சுமார் 40 ஆண்டுகள் கழித்து, 1986-ல் இந்த அமைப்பு சட்டபூர்வ அமைப்பாக மாறியது. தற்போது மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வித் துறையின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.
நாட்டின் தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டுக்குத் திட்டமிடல், விதிமுறைகள் மற்றும் தர மதிப்பீடுகளை உருவாக்கிப் பாதுகாத்தல், கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், நிதியுதவி அளித்தல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைக் கண்காணித்தல், படிப்புகளை மதிப்பாய்வு செய்தல், படிப்புகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது.
பணிகள்
மேற்சொன்ன பணிகள் மட்டுமல்லாமல், இன்னும் சில சிறப்பு பணிகளையும் ஏஐசிடிஇ செய்துவருகிறது. பெண்கள், ஊனமுற்றோர், சமூகத்தில் நலிவுற்றோர் ஆகியோருக்குத் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான விதிமுறைகளை வகுப்பது, பொறியியல் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற கட்டணங்களை நிர்ணயித்து வசூலிப்பதற்கான விதிமுறைகளை வகுத்தல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பான நடைமுறை விதிகளை உருவாக்குவது, தொழில்நுட்பக் கல்வி வணிகமயமாதலைத் தடுக்கும் செயல்திட்டங்களை உருவாக்குவது, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவது போன்ற பணிகள் இவற்றில் முக்கியமானவை.
கிளைகள்
ஏஐசிடி இ-யின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, கான்பூர், திருவனந்தபுரம், சண்டிகர், குவாஹாட்டி, போபால், பெங்களூரு, ஹைதராபாத், குர்கான் ஆகிய நகரங்களில் இந்த அமைப்புக்கான பிராந்திய அளவிலான கமிட்டிகள் உள்ளன. எந்த ஒரு புதிய தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கவோ அல்லது புதிய தொழிற் படிப்புகளைத் தொடங்கவோ வேண்டுமென்றாலும், இந்த அமைப்பின் அங்கீகாரம்தான் தேவை. அதனால்தான் எந்த ஒரு பொறியியல் கல்லூரியும், படிப்பும் ஏஐசிடிஇ அமைப்பின் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்பதை விசாரிப்பது முக்கியமாகிறது.
ஏஐசிடிஇ சட்டதிட்டங்களின்படி கல்வி வாரியங்களை அமைக்க அந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. தற்போது அகில இந்தியத் தொழிற்கல்வி வாரியம், அகில இந்தியத் தொழில்நுட்ப வாரியம், அகில இந்திய மேலாண்மை கல்வி வாரியம், அகில இந்தியப் பாராமசூட்டிகல் கல்வி வாரியம், அகில இந்தியத் தகவல் தொழில்நுட்ப வாரியம் உட்பட 10 வாரியங்கத்தை ஏஐசிடிஇ அமைத்துத் தொழிற்கல்வியைக் கண்காணித்துவருகிறது.
பொறியியல் மற்றும் தொழிற்கல்விகளைப் படித்துவரும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு அமைப்பு ஏஐசிடிஇ. இந்த அமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி உங்கள் கல்லூரியும் படிப்பும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதும் உங்களுக்கும் உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது. மேலும் தகவல்கள் அறிய: >http://www.aicte-india.org/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT