Published : 11 Sep 2018 12:34 PM
Last Updated : 11 Sep 2018 12:34 PM
25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாகத் தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6 அன்று தெரிவித்தது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கி இருக்கிறது. அத்துடன், இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த கருணை மனுவைத் தமிழ்நாடு ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தன்பாலின உறவு குற்றமல்ல
தன்பாலின உறவைக் குற்றமாக அறிவிக்கும் இந்தியச் சட்டப் பிரிவு 377 நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு செப்டம்பர் 6 அன்று தீர்ப்பளித்தது. இந்தியாவின் காலனி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் 158 ஆண்டுகள் பழமையானது.
இந்தச் சட்டத்தின்படி, தன்பாலின உறவைக் குற்றமாக்கும் அம்சம் அடிப்படை மனிதச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதால், அந்த அம்சத்தை நீக்குவதற்குச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மோடி அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரம், விவசாயம், அண்டை நாடுகளுடனான உறவு என அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்திருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செப்டம்பர் 7 அன்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் ‘ஷேட்ஸ் ஆஃப் ட்ரூத்’ (Shades of Truth) புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் வளர்ச்சி பற்றிய கருத்துகள் மக்களைக் கவரவில்லை என்றார்.
2014 மக்களவைத் தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வியெழுப்பிய மன்மோகன் சிங், கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவீதம் கடுமையாகக் குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
தெலங்கானா சட்டமன்றம் கலைப்பு
தெலங்கானா சட்டமன்றக் காலம் முடிவடைய எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் செப்டம்பர் 6 அன்று பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்றுகொண்ட தெலங்கானா ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்ஹன், அடுத்த அரசு பதவியேற்கும்வரை சந்திரசேகர் ராவைப் பொறுப்பு முதல்வராகத் தொடரக் கேட்டுக்கொண்டார்.
வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த நான்கு மாநிலங்களுடன் இணைத்து தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலையும் நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுவருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
இந்தியாவின் 46-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகோய் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா செப்டம்பர் 4 அன்று அரசுக்குப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை அரசு ஏற்றவுடன், இந்தியாவின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3 அன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2 அன்று தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் 2018, அக்டோபர் 3 முதல் 2019, 17 நவம்பர்வரை 13 மாதங்கள் நீடிக்கும். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருப்பார்.
உடல் செயல்பாடு குறைந்த இந்தியர்கள்
இந்தியாவின் மக்கள்தொகையில் 34 சதவீதத்தினர் போதுமான அளவுக்குச் செயல்படுவதில்லை என்று செப்டம்பர் 4 அன்று வெளியான லான்செட் சர்வதேச மருத்துவ இதழ் ஆய்வு தெரிவிக்கிறது. 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாட்டில் போதுமான அளவுக்குச் செயல்படாதவர்களில் பெண்கள் 48 சதவீதமாகவும் ஆண்கள் 22 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்திருக்கிறது.
உலகச் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் 168 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக அளவில் போதுமான அளவுக்கு உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருக்கும் 140 கோடி பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருக்கின்றனர். உலக அளவில் மூன்றில் ஒரு பெண்ணும் (32 சதவீதம்), நான்கில் ஓர் ஆணும் (23 சதவீதம்) போதிய உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர்.
பாகிஸ்தான் 13-வது அதிபர்
பாகிஸ்தானின் 13-வது அதிபராக டாக்டர் ஆரிஃப் அல்வி செப்டம்பர் 4 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான இவர், அதிபராக செப்டம்பர் 9 அன்று பதவியேற்றார். இந்த அதிபர் தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் ஐத்ஸாஸ் அஹசான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி வேட்பாளர் மவுலானா ஃபஸல் உர் ரஹ்மான் ஆகிய இரண்டு பேரையும் அல்வி தோற்கடித்தார்.
ஒட்டுமொத்த 430 வாக்குகளில் 212 வாக்குகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார் அவர். முன்னாள் பல் மருத்துவரான இவர், 2006 முதல் 2013வரை, பி.டி.ஐ. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.
தேவை 30 லட்சம், இருப்பதோ 3 லட்சம் பேருந்துகள்
இந்திய அரசுத் தரவுகளின்படி, நாட்டில் 19 லட்சம் பேருந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் 2.8 லட்சம் பேருந்துகள்தாம் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படுகின்றன. பொது மக்களின் தேவைக்கு 30 லட்சம் அரசுப் பேருந்துகள் தேவை என்று மத்திய போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஒய்.எஸ். மாலிக் தெரிவிக்கிறார்.
சீனாவில் 1000 பேருக்கு ஆறு பேருந்துகள் இருக்கின்றன, ஆனால், இந்தியாவில் 10,000 பேருக்கு நான்கு பேருந்துகளே இருப்பதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலமும் பகிர்ந்து இயக்கும் முறைக்குத் தனியார் பேருந்து நிறுவனங்கள் முன்வருவதாலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT