Last Updated : 25 Sep, 2018 11:35 AM

 

Published : 25 Sep 2018 11:35 AM
Last Updated : 25 Sep 2018 11:35 AM

சேதி தெரியுமா: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்துவதாகத் தமிழக அரசு செப்டம்பர் 17 அன்று அறிவித்தது. இதன்மூலம், ஏழு சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது ஒன்பது சதவீதமாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, 2018, ஜூலை 1 முதல் கணக்கிடப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,157 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர் கி.த. பச்சையப்பன் மறைவு

முதுபெரும் தமிழறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கி.த. பச்சையப்பன் மாரடைப்பால் சென்னையில் செப்டம்பர் 20 அன்று காலமானார். அவருக்கு வயது 85. புதுச்சேரியில் பிறந்த இவர், தன் இளம்வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற வேண்டும் எனப் போராடியவர். சென்னையின் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்றவர். தமிழகத்தின் தமிழாசிரியர் கழகத் தலைவர், சென்னை ஆசிரியர் சங்கத் தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவர் தன் வாழ்க்கையில் 70 ஆண்டுகளைப் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17 அன்று எழுதிய கடிதத்தில் முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை  ஏற்ற இந்தியா, இருநாட்டின்  வெளியுறவுத் துறை அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜும், மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷியும் நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் சந்தித்து பேசுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கஷ்மீரின் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் செப்டம்பர் 21 அன்று கடத்தி கொலைசெய்தனர். இதனால் பாகிஸ்தானுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை சுஷ்மா ஸ்வராஜ் ரத்து செய்தார்.

27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்பு

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டிருப்பதாக செப்டம்பர் 20 அன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான ‘பலபரிமாண வறுமை குறியீடு’ (MPI) அறிக்கை வெளியானது. 2005-6-ம் ஆண்டுகளிலிருந்து 2015-16-ம் ஆண்டுகள்வரை, இந்தியாவில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டுவந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் வறுமை 55 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் பலபரிமாண வறுமையில் வாடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்று வங்கிகள் இணைப்பு?

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கலாம் என்று மத்திய அரசு செப்டம்பர் 17 அன்று ஆலோசனை வழங்கியிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி வங்கிகளை ஒன்றாக இணைப்பதில், இரண்டு வலிமையான வங்கிகள், ஒரு வலுவற்ற வங்கி என்ற முறையில் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஜெட்லி தெரிவித்திருக்கிறார். நிலைத்தன்மையுடைய வங்கிகளை உருவாக்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

22 லட்சம் வழக்குகள் தேக்கம்

நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் பத்தாண்டுகள் பழமைவாய்ந்த 22,90,364 வழக்குகள் தேங்கியிருப்பதாக ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பு  செப்டம்பர் 17 அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவித்திருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளில் 5.97 லட்சம் சிவில் வழக்குகளாகவும் 16.92 லட்சம் குற்ற வழக்குகளாகவும் இருக்கின்றன. தேங்கியிருக்கும் வழக்குகளைப் பற்றிய தரவுகளைத் தெரிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மின்-குழு ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பைத் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கி இருக்கும் வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

குழந்தை இறப்பில் இந்தியா முதலிடம்

 இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறப்பதாக ஐ.நா.வின் குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு (UNIGME) செப்டம்பர் 18 அன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியாவில் 8,02,000 குழந்தைகள் இறந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளைவிடக் குறைவு என்றாலும், குழந்தை இறப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும் (4,66,000 குழந்தை இறப்புகள்), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் (3,30,000 குழந்தை இறப்புகள்) இருக்கின்றன. போதுமான சுகாதார, தண்ணீர், ஊட்டச்சத்து வசதிகள் கிடைக்காததே குழந்தை இறப்புகளுக்குக்  காரணம் என்று  ஐ.நா. தெரிவிக்கிறது.

சட்டப்படி முத்தலாக் குற்றம்

முத்தலாக் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 19 அன்று ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, எந்தவித முன்னறிவிப்புமின்றி முத்தலாக் வழங்கினால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும். 2017 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் முத்தலாக்குக்குத் தடைவிதித்ததிலிருந்து நாடு முழுவதும் இதுதொடர்பாக 201 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார். 

இஸ்ரோவின் 18 திட்டங்கள்

இஸ்ரோ அடுத்த ஆறு மாதங்களில் பதினெட்டுத் திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் செப்டம்பர் 16 அன்று தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு ஒரு திட்டம் வீதம் ஆறு மாதங்களில் 18 திட்டங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் நிறுவனத்தின் பூமியைக் கவனிக்கும் நோவாஎஸ்ஏஆர் (NovaSAR), எஸ்1-4 என்ற இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி42 ஏவுகணையில் செப்டம்பர் 16 அன்று இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும் ஆறு மாதங்களில், ஜிசாட்-11, சந்திரயான்-2 போன்ற முக்கியத் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி இருக்கிறது.

சைபர் பல்கலைக்கழகம் தொடக்கம்

மகாராஷ்ட்ர இணையத் தாக்குதல்களைக் கையாள்வதற்காகப் புதிய சைபர் பல்கலைக்கழகம் தொடங்கப்படவிருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் இணையத் தாக்குதல்கள், குற்றங்கள் போன்றவற்றைக் கையாள்வதற்காக முதற்கட்டமாக 3,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவு வரும் அக்டோபர் முதல்வாரத்தில் மாநில அமைச்சரவை முன் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x