Published : 04 Sep 2018 10:45 AM
Last Updated : 04 Sep 2018 10:45 AM

வெற்றி முகம்: மதியால் வென்ற ஸதி!

அரசுப் பள்ளி என்றாலே அடிப்படை வசதிகள்கூட இருக்காது. கல்வித் தரம் குறைவாக இருக்கும். ஆசிரியர்கள் அலட்சியமாக இருப்பார்கள்... என்பன போன்ற வாதங்களைத் தன் உழைப்பால் துடைத்தெறிந்து, தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மிகச் சிறந்ததாக மாற்றியிருக்கிறார் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இரா.ஸதி (46). அதனால்தான் இவரைத் தேடி வந்திருக்கிறது தேசிய நல்லாசிரியர் விருது.

நடப்பாண்டு தமிழகத்திலிருந்து 6 ஆசிரியர்கள் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இவர் மட்டுமே இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு, கோவை மண்ணுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

‘வெல்கம் சார்’

அவரைத் தேடிப் பள்ளிக்குச் சென்ற போது, ஏதோ தனியார் கான்வென்டில் நுழைந்தது போல இருந்தது. டை, பெல்ட், ஷூ, அடையாள அட்டை அணிந்தபடி, வரிசையில் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவ, மாணவிகள், ‘குட்மார்னிங், வெல்கம் சார்’ என்று கூறி வரவேற்று ஆச்சரியப்படுத்தினர்.

ஐந்தாம் வகுப்பு மாணவர் சரவணாவிடம் பேச்சுக் கொடுத்தோம். “எனக்கு அம்மா இல்லை. தந்தை வாகன ஓட்டுநர். வீட்டில் சொல்லிக் கொடுக்கக்கூட யாருமில்லை. ஆனால், அதற்குத் தேவையே ஏற்படவில்லை. ஆசிரியைகள் மிக நன்றாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். பாடங்களைத் தாண்டி, டேப்லட் மூலம் ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பது எனப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தனியாரிலிருந்து அரசுப் பள்ளிக்கு...

அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்புவரை படித்த சுவாதி, 3-ம் வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்தார். தற்போது 5-ம் வகுப்பு பயிலும் அவர், “தனியார் பள்ளியில் ஃபீஸ் அதிகமாக வசூலித்தார்கள். அப்போது ஃபேஸ்புக் மூலம் இந்தப் பள்ளியைப் பற்றி அறிந்த அப்பா, இங்குச் சேர்த்துவிட்டார்.

தனியார் பள்ளியைக் காட்டிலும் இங்கு நன்றாகப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலும், தினமும் இருமுறை பல் விளக்குவது, குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது, என்பது பற்றியெல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

பள்ளியில் உள்ள தோட்டத் தில் மாணவ, மாணவிகளால் வளர்க்கப்பட்ட செடிகளில், அவர்களைப் போலவே பூத்துக் குலுங்குகின்றன மலர்கள். காய்கறிகள், மூலிகைச் செடிகள், கீரைகளைக்கூட இங்கு விளைவித்திருக்கிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை.

ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்பிப்பதுடன், பாட்டு, நடனம், யோகா, கராத்தே எனப் பல்வேறு விஷயங்களையும் கற்பிக்கின்றனர் இங்குள்ள 8 ஆசிரியைகள். அது மட்டுமல்ல, அவர்களது சொந்தப் பணத்தில், குழந்தைகளை அறிவியல் மையம், சூலூர் விமானப்படைத் தளம், அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங் களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

‘குட்டி கமாண்டோஸ்’

திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘குட்டி கமாண்டோஸ்’ என்ற மாணவப் படை ஆசிரியை ஸதி தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மாணவப் படையினர் தினமும் காலை, மாலை பள்ளி முடிந்ததும் விசிலடித்தபடி ஊருக்குள் வலம் வருவார்கள். இந்த நடவடிக்கை பொதுவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க உதவுகிறது.

மீறிக் கழிப்பவர்களிடம், பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்தத் தவறினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளை விளக்குகிறார்கள். இந்தத் திட்டம் இந்தப் பகுதியில் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது அவ்வூர் மக்களுடன் உரையாடியபோது புரிந்தது.

வீட்டுக்கேச் சென்று விழிப்புணர்வு

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் இரா.ஸதியிடம் பேசினோம். “1995-ல் சுல்தான்பேட்டை அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகச் சேர்ந்தேன். 2009-ல்

 தலைமை ஆசிரியை பதவி உயர்வு பெற்று, போடிப்பாளையம் பள்ளியில் பணியாற்றினேன். இந்தப் பள்ளியில் 2012-ல் சேர்ந்தேன். அப்போது 146 மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்தனர். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் நிலையை மாற்ற முடிவுசெய்தோம். இங்குள்ள ஆசிரியைகளுடன் இணைந்து, பள்ளியின் தரத்தை உயர்த்தினோம்.

இங்குப் பயில்வோர் ஏழைக் குழந்தைகள் என்பதால், சில நிறுவனங்களிடம் ஸ்பான்சர் பெற்று, மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், டை, ஷூ, டிபன் பாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை என அனைத்தையும் பெற்றுத் தந்தோம்.

மே மாதத்திலிருந்தே வீடு வீடாகச் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தோம்.  இப்போது 270-க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர்.   இந்த விருது எனக்கு மட்டுமல்ல, அனைத்து ஆசிரியைகளுக்கும் சேர்ந்ததுதான். உணவு அருந்தும்

அறை (டைனிங் ஹால்), கம்ப்யூட்டர் ஆய்வகம், விளையாட்டுச் சீருடைகள் எனப் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றையும் பெற்றுத்தர முயன்று வருகிறோம்” என்றார்.

ஏற்கெனவே ஆசிரியை ஸதிக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்துள்ள நிலையில், தேசிய விருதும் கிடைத்திருப்பது மென்மேலும் சிறப்பாக இவர் செயல்பட ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆசிரியர் பணிக்கு அவமதிப்பு!

இதுவரை 345 ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த தேசிய நல்லாசிரியர் விருதுகள், இந்த ஆண்டு 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட முடிவெடுக்கப்பட்டிருப்பது ஆட்சேபணைக் குரியது. அதிலும் கடந்த ஆண்டுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த இந்த விருது, இப்போது ஒரே ஒருவருக்குத் தரப்பட இருப்பது கூடுதல் வேதனை அளிக்கிறது.

bojpg

நான்கு லட்சம் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரிந்துவரும் தமிழ்நாட்டில், ஒரே ஒருவர்தான் சிறந்த ஆசிரியர் என்கிறார்களா? தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச்செய்வது, கல்வி தரத்தில் முன்னேற்றம், பள்ளியின் சுற்றுப்புறத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணக்கில்கொண்டுதான், இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதாளரான  ஸதியைப் போலவே இம்முறை பரிந்துரைக்கப்பட்ட  எஞ்சிய ஐந்து ஆசிரியர்களும் இந்தத் தகுதிகளை பெற்றிருக்கவே செய்திருப்பார்கள். ஆனால், எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மனிதவள மேம்பாட்டு துறை செயல்பட்ட விதம் பண மதிப்பிழப்பைப் போல ஆசிரியர்களின் மீதான மதிப்பையும் குறைத்துவிட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். இது சார்ந்து மனிதவள மேம்பாட்டு துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வா. அண்ணாமலை, அகில இந்தியச் செயலாளர்,
அகில இந்தியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x