Published : 04 Jun 2019 09:32 AM
Last Updated : 04 Jun 2019 09:32 AM
மாற்றத் திறனாளிகளின் கற்றலை எளிதாக்க இன்று பல்வேறு நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டி வருகிறது கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம்.
இந்நூலகத்தில் நாளிதழ்கள், குறிப்புதவிப் புத்தகம், தமிழ், ஆங்கில நூல்கள், குழந்தைகள், மகளிர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பல்வேறு பிரிவுகள் உள்ளன. இலவச வைஃபை வசதியும், மேக்ஸ்டர் (Magzter) செயலி மூலமாக மின்னூல்களைப் பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கண்-செவி-மனம்
“மாற்றுத் திறனாளிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். ஒரு பொருளின் பெயரை அறிந்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அதன் வடிவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதை அறிந்துகொள்ளும் வகையில் தொடுவுணர் படங்கள் பொருத்தப்பட்ட நூல்கள் இங்குள்ளன.
‘ரீட் ஈஸி மூவ்’ என்ற கருவியின் கீழ் புத்தகத்தை வைத்து, பக்கங்களைப் புரட்டினால் அச்சில் உள்ள எழுத்துக்களை ஒலி வடிவில் வாசிக்கும். திரைவாசிப்பான் மென்பொருள் பொருத்தப்பட்ட கணினி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவர்கள் கணினியை இயக்கத் தொடங்கியதும், திரையில் தோன்றுவதை வாசித்துக் காண்பிக்கும். அதற்கேற்ப அவர்களால் கணினியை எளிதாக இயக்க முடியும். குறைந்த பார்வைத்திறன் உள்ளவர்கள், சிந்திக்கும் திறன் குறைபாடு உடையவர்கள் கணினியை எளிமையாகக் கையாள ஏதுவாகச் சிறப்பு விசைப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், எழுத்துக்களை எளிதாகப் படிக்கும் வகையில் எண்கள் ஒரு நிறமாகவும், உயிரெழுத்துக்கள் ஒரு நிறமாகவும், மற்ற எழுத்துகள் வேறொரு நிறமாகவும் கொண்ட விசைப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
‘ஆவாஸ்’ என்ற மென்பொருள் காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு உதவக்கூடியது. பேச நினைக்கும் கருத்தைப் புரோகிராமிங் செய்து வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடியும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பிரெய்லி என்ற புள்ளி எழுத்து வடிவம் கொண்ட புத்தகங்கள் உள்ளன. பிரெய்லி நூல்களில், தேவையான பக்கங்களை பிரெய்லி எழுத்துடன் பிரதி எடுக்கும் வசதியும் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றிப் பிரதி எடுத்துக்கொடுக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் செயல்வழிக் கற்றல் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வதற்கான கருவிகள் உள்ளன” என்கிறார் நூலகர் பே.ராஜேந்திரன்.
இந்நூலகத்துக்கு நாள்தோறும் 20 மாற்றுத் திறனாளிகள்வரை வந்து படித்துப் பயன்பெறுகிறார்கள். பட்டதாரிகள், போட்டித் தேர்வுக்குத் தயார்செய்பவர்கள் ஆகியோரும் நாள்தோறும் வருகிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி அவர்கள் சிரமமின்றி வந்துபோக சாய்தளப் பாதையும் இங்கே அமைக்கப்பட்டிருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT