Published : 11 Jun 2019 12:38 PM
Last Updated : 11 Jun 2019 12:38 PM
“அறிவியலில் பின்தங்கி இருந்தாலும் முகலாயர் காலத்ததுல கலைகள் எல்லாம் செழிப்பா வளர்ந்திருந்துச்சு. குறிப்பா கட்டிடக் கலை. அக்பரும் அவருடைய பேரன் ஷா ஜஹானும் அதற்கெனத் தனி பாணியை உருவாக்கினாங்க செழியன்.”
“அப்ப தாஜ்மகாலுக்கு முன்னாடியே முகலாயக் கட்டிடக் கலை சிறப்பா வளர்ச்சி பெற்றிருந்திச்சா, குழலி?”
“நமக்கு தாஜ்மகால்தான் தெரியும். ஆனா, அதுக்கு முன்னோடி எது தெரியுமா?”
“அப்படி ஒண்ணு இருக்கா, எனக்குத் தெரியாதே?”
“ஷா ஜஹானின் அப்பா ஜஹாங்கிரின் காலத்தில் தன் தந்தை இத்மத் உத் தௌலாவுக்கு நூர்ஜஹான் கட்டின சலவைக்கல் நினைவகமே தாஜ் மகாலுக்கு முன்னோடி.”
“சரி, தாஜ்மகால் பத்தி நானே தேடிப் படிச்சிட்டேன். அதை உனக்குச் சொல்லிடுறேன். 1648-ல் நிறைவுசெய்யப்பட்ட தாஜ்மகாலைக் கட்ட 16 ஆண்டுகள் ஆச்சு. அதைக் கட்டுறதுக்கு 20,000 பேர் பயன்படுத்தப்பட்டாங்க. அதன் சலவைக்கல் சுவர்கள்ல பியட்ரா டுரா (Pietra Dura) என்ற வேலைப்பாடு செய்யப்பட்டிருந்துச்சு. அரிய மணிக்கற்கள் பதிக்கப்பட்டு மலர்கள், கொடிகள், அலங்கார வேலைப்பாடு, அழகு எழுத்துக்கள் போன்றவற்றைப் பொறிப்பதுதான் பியட்ரா டுரா. அன்றைய மதிப்பில் மூன்று கோடி ரூபாயில் கட்டப்பட்டுச்சு. அதோட இன்றைய மதிப்பு 1,000 கோடி ரூபாய்.”
“ம், உனக்கும் வரலாறு-கட்டிடக் கலைல எல்லாம் ஆர்வம் வந்திருச்சு செழியன். இந்தியாவுல அந்தக் காலத்துல பயணம் செஞ்ச பிரெஞ்சுப் பயணி பிரான்சுவா பெர்னியர், எகிப்தில் உள்ள பிரமிட், மற்ற உலக அதிசயங்களைவிடச் சிறந்த உலக அதிசயமா இது கருதப்படணும்னு அப்பவே குறிப்பிட்டிருக்கார். அதைப் போல நவீன உலகின் ஏழு உலக அதிசயங்கள்ல தாஜ்மகாலும் பிற்காலத்துல இடம்பெற்றுச்சு.”
“ஷா ஜஹான் இல்லாமப் போனாலும் தாஜ்மகாலையும் மும்தாஜையும் நம்மால மறக்க முடியலையே.”
“ஷாஜஹானின் பெருமை தாஜ்மகாலோட முடியல. ஷா ஜஹானோட இன்னொரு சாதனை மயில் சிம்மாசனம்”
“அது என்ன, இப்போ அது எங்க இருக்கு?”
“இப்போ அது எங்க இருக்குன்னு தெரியாது. ஆனா, மயில் சிம்மாசனத்தை உருவாக்குறதுக்காக ஷாஜஹான் அன்றைய மதிப்புக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், விலைமதிப்பில்லா மணிக்கற்கள் போன்றவற்றை ஒதுக்கினாரு. மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்கள் ஏழு ஆண்டு செலவழிச்சு, அந்த சிம்மாசனத்தை உருவாக்கினாங்க.
சிவப்புக்கல், மரகதம், வைரம், முத்து போன்ற கற்களெல்லாம் அதுல பதிக்கப்பட்டுச்சு. அந்த சிம்மாசனத்தின் உச்சியில் தங்கம், மணிக்கற்களால் மயிலும் நீலக்கல், மற்ற மணிக்கற்களால் தோகையும் உருவாக்கப்பட்டுச்சு. 1635-ல் அதை பார்வைக்கு வெச்சாங்க. இந்தியாவுல 1739-ல ஊடுருவிய பெர்சிய மன்னர் நாதிர் ஷா அதைக் கொள்ளையடிச்சுட்டுப் போனார்”.
“அசையா சொத்தா இருந்ததால தாஜ்மகாலை யாராலயும் களவாடிட்டுப் போக முடியல. மயில் சிம்மாசனத்தைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.”
“அது என்னவோ உண்மைதான். ஆனா, ஷா ஜஹானோட தாத்தா அக்பர் காலத்துலேர்ந்தே முகலாயர்கள் பல வகைக் கலைகளை வளர்த்தெடுத்தாங்க”
“அதையெல்லாம் பத்தி சொல்லக் கூடாதா?”
“நிறைய இருக்கு. ஒண்ணைப் பத்தி சிறப்பா சொல்லலாம். அது இசை.”
“தான்சேன் பத்தித் தானே சொல்லப் போற”
“தான்சேன் பத்தி எப்படிச் சொல்லாம இருக்க முடியும்? புகழ்பெற்ற இசைக்கலைஞர் தான்சேனின் நிஜப் பெயர் ராம்தனு மிஸ்ரா. மதுராவைச் சேர்ந்த சுவாமி ஹரிதாஸ் என்பவரிடம் அவர் இசைப் பயிற்சி எடுத்துக்கிட்டார். பின்னர் சூபி மறையாளர் முகம்மது கௌஸைப் பின்பற்றத் தொடங்கிய அவர், இஸ்லாத்துக்கு மதம் மாறி முகம்மது கௌஸின் மகளையே மணந்துக்கிட்டார். ரேவாவின் மன்னர் ‘தான்சேன்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினாரு. அக்பர் ‘மியான்’னு அன்போட அவரை அழைச்சாரு. சூபி மதத்தைப் பின்பற்றுபவர்களை மியான் என கூப்பிடுறது வழக்கமா இருந்துச்சு.”
“தான்சேன் பாடினா தீ பிடிக்கும்னு சொல்வாங்களே?”
“அது முழுக்க உண்மையான்னு தெரியல. ஆனா, அக்பரோட அரசவைல தான்சேன் முதல்ல பாடினப்போ வழங்கப்பட்ட சன்மானம் இரண்டு லட்சம் ரூபாய். தான்சேன் புதிய ராகங்களையும் உருவாக்கியிருக்கார். அதுல ‘மியான் கி தோடி’, ‘தர்பாரி கானடா’ போன்றவை அக்பருக்காகவே உருவாக்கப்பட்டவை. குவாலியரில் முகம்மது கௌஸின் கல்லறைக்கு அடுத்தபடியாக தான்சேனின் கல்லறை இருக்கு. இன்னைக்கும் இசைக் கலைஞர்கள் தேடிச் செல்லும் இடமா அது இருக்கு.”
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT