Published : 06 Mar 2018 11:10 AM
Last Updated : 06 Mar 2018 11:10 AM
தே
ர்வுக்கு முந்தைய நாள் எந்த அளவு முக்கியமானது என்பதை மரத்தான் ஒட்டப் பந்தயத்தைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம். அதில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்றவர்களே. அவர்கள் அனைவரும் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே. அனைவரும் அதற்காகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டவர்களே. ஆனால், வெற்றிக் கோட்டை அனைவரும் முதலில் தொடுவதில்லை.
வெற்றியாளர் மட்டும் அப்படி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்துகிறார்? மற்றவர்களைப் போல் தன்னுடைய திறனை முதலிலேயே வீணடிக்காமல், பந்தயத்தின் கடைசி கட்டத்தில் தேவையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். இந்தப் பண்பை எப்படி உங்கள் தேர்வுக்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
நிம்மதியாகத் தூங்குங்கள். படிப்பைவிடத் தூக்கம்தான் தேர்வுக்கு முந்தைய நாளில் முக்கியம். தூக்கம் உங்கள் மூளைக்கு ஓய்வு கொடுத்து, தேர்வைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ளவைக்கும்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் நண்பர்களும் உங்கள் படிப்புக்குப் பல வகைகளில் உதவி இருக்கலாம். ஆனால், தேர்வை நீங்கள்தான் எழுத வேண்டும். எனவே, அவர்களின் மூலம் வரும் எந்த விதமான அழுத்தத்தையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
ஒரு வருடத்தில் படிக்க முடியாததைக் கண்டிப்பாகக் கடைசி ஒரு நாளில் படிக்க முடியாது. ஆதலால், தேர்வுக்கு முந்தைய நாள் எதையும் புதிதாகப் படிக்காதீர்கள்.
படிக்கும்போது நீங்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்புக் கையேடுகளை (Flash cards) கண்டிப்பாக ஒருமுறை முழுவதுமாக மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் கண்டிப்பாகப் புரிந்து படிக்க முடியாது. பெயர்கள், வருடங்கள், தேதிகள், இடங்கள் போன்றவற்றை அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டும். எனவே, அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
தேர்வில் என்ன கேள்வி கேட்கப்படும் என்று யோசித்துக் கையில் இருக்கும் குறைந்த நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஏனென்றால், அது உங்கள் கையில் இல்லை.
முடிந்த அளவு உங்கள் கைகளுக்கு முக்கியமாக விரல்களுக்கு ஓய்வுகொடுங்கள்.
தேவையில்லாத கைப்பேசி அழைப்புகளைத் தவிருங்கள்.
எந்தச் சச்சரவிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பிடித்த பாடல்களைச் சிறிது நேரம் கேளுங்கள். தூங்கும் முன் மூச்சுப் பயிற்சிசெய்யுங்கள்.
தேர்வு நாள் என்பது உங்களின் திறமையைப் பரிசோதிக்கும் நாள் அல்ல. அது உங்கள் ஒரு வருட உழைப்புக்கான பலனை நீங்கள் அறுவடை செய்யப்போகும் நாள். நீங்கள் வளர்த்த வெற்றி மலர் உங்கள் கரங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT