Published : 20 Mar 2018 11:06 AM
Last Updated : 20 Mar 2018 11:06 AM
கு
ரங்கணி காட்டுத் தீ… அதுதான் இப்போதுவரை ‘சூடான’ செய்தி!
விடுமுறையில் சென்றவர்கள், விடைபெற்றுச் செல்வார்கள் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. உலகம் முழுவதும் காட்டுத் தீயால், காட்டுயிர்களுக்கோ மனிதர்களுக்கோ பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக ஏதும் தகவல் இல்லை. அப்படி இருக்கும்போது, குரங்கணி காட்டுத் தீ, நடையுலா (ட்ரெக்கிங்) சென்றவர்களை எப்படித் தழுவியது என்பது மர்மமாகவே உள்ளது!
இந்தக் காட்டுத் தீயால் சிலர் உயிரிழக்க, தப்பித்த சிலருக்கோ அது நிச்சயமாகவே ‘ட்ரையல் பை ஃபயர்’ (trial by fire) நிலைமையாக இருந்திருக்கும்.
குற்றவாளியா இல்லை நிரபராதியா?
கடினமான சூழ்நிலையில், ஒருவரின் திறமைகளைப் பரிசோதித்துப் பார்ப்பதை ஆங்கிலத்தில் ‘ட்ரையல் பை ஃபயர்’ என்பார்கள். அந்தக் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் சிலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பலரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொண்டே பிறரையும் காப்பாற்றியிருக்கிறார்கள் வேறு சிலர். இந்தச் சம்பவம், கடினமான சூழ்நிலையில் தங்களால் இவ்வளவு தூரம் செயலாற்ற முடிந்திருக்கிறதே என்ற பெருமையையும் நிம்மதியையும் அந்த நாயகர்கள் சிலருக்கு வழங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இந்தச் சொற்றொடருக்கான வரலாற்றுக் காரணம் கொஞ்சம் சிக்கலானது. முன்பெல்லாம், உலகின் பல நாடுகளில் இப்படி ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதாவது, ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டார் என்றாலோ தவறுதலாக தவறே செய்யாத ஒருவர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டாலோ, போதிய சாட்சியங்கள் இல்லாததால், அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளிப்பதா நிரபராதி என்று கூறி விடுவிப்பதா என்று நீதிபதிக்கு மிகவும் குழப்பமாக இருக்கும்.
அந்த நேரத்தில், ‘நீ குற்றவாளியா, இல்லையா என்பதை கடவுள் முன் முடிவு செய்யட்டும்’ என்று கூறி, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஒரு ‘டெஸ்ட்’ வைப்பார்கள். அது வேறொன்றுமில்லை… ஒரு இடத்தில் நெருப்பு மூட்டிவிடுவார்கள். அதற்குள் ஏதேனும் ஒரு பொருளை வைத்துவிடுவார்கள். நெருப்பு கனன்று கொண்டிருக்கும்போது, வெறும் கைகளால் நெருப்பிலிருந்து அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் என்று குற்றம் சுமத்தப்பட்டவருக்குக் கட்டளையிடப்படும்.
அவர் எடுத்து வருவார். சில நாட்கள் கழித்து, அவர் கைகளுக்கு எதுவும் ஆகவில்லை என்றால், அவரை நிரபராதி என்று சொல்லி விடுதலை செய்துவிடுவார்கள். ஒரு வேளை, தீக்காயம் ஏற்பட்டிருந்தால், அவர் குற்றவாளி என்று முடிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். இந்த நடைமுறையால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டார்கள். 12-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மூன்றாவது இன்னொசண்ட் எனும் போப் ஆண்டவரால், ‘ட்ரையல் பை ஃபயர்’ என்ற இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
பிற்காலத்தில் இந்த நடைமுறை, ஒருவர் எவ்வளவு தூரம் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதற்கான சொற்றொடராக மாறியது. எனவே, இனி எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் உங்களது நம்பிக்கையைத் தளரவிட்டுவிடாமல், ‘இது ஒரு ட்ரையல் பை ஃபயர்’ என்று சொல்லிவிட்டு, ‘நெருப்பில் பூத்த மலராக’ வெற்றி வாகை சூடுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT