Published : 27 Mar 2018 01:39 PM
Last Updated : 27 Mar 2018 01:39 PM
ராண்ட்ஜன் பிறந்த நாள்
இந்தியாவைத் தேடிப் பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா குழுவினர், அந்த வழியில்தான் மேற்கிந்தியத் தீவுகளைக் கண்டறிந்தனர். அது இந்தியா என நம்பியதால், அதற்கு மேற்கிந்தியா எனப் பெயரிட்டுவிட்டனர். இதுபோல் எதிர்மின்வாய்க் கதிர் (Cathode ray) குறித்த ஆராய்ச்சியின்போது தற்செயலாகத்தான் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார் ஜெர்மானிய இயற்பியலாளரான வில்ஹெம் ராண்ட்ஜன் (Wilhelm Rontgen). இந்தக் கண்டுபிடிப்புக்காக இயற்பியல் துறைக்கான முதல் நோபல் பரிசை 1901-ம் ஆண்டு பெற்றார்.
ராண்ட்ஜன், 1845 மார்ச் 27 அன்று பிறந்தார். இவருடைய தாய் டச்சுக்காரர் என்பதால் வளர்ந்ததெல்லாம் நெதர்லாந்தில்தான். பள்ளியில் சராசரி மாணவராகத்தான் ராண்ட்ஜன் இருந்துள்ளார். அவரை நெதர்லாந்திலுள்ள புகழ்பெற்ற கல்வி நிலையமான யுரேச்செட் பல்கலைக்கழகத்தில் சேர்க்க அவருடைய பெற்றோர் முயன்றனர்.
ஆனால், போதிய மதிப்பெண் இல்லாததால் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் சுவிட்சர்லாந்தில் ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் இயந்திரவியலில் பட்டயம் பயின்றார். பிறகு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இந்தக் காலகட்டத்தில்தான் இயற்பியல் துறை மீது ஈடுபாடு அவருக்கு அதிகமானது.
எதிர்மின்வாய்க் கதிர் குழாய் (Cathode ray tube) குறித்த ஆராய்ச்சிகள் அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தன. 1895 நவம்பர் 8-ல் ராண்ட்ஜனும் அந்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். வெற்றிடக் குழாய்களுக்குள் (vaccum tube) மின்சாரம் செலுத்தப்படும்போது எதிர்மின்வாயிலிருந்து மின்சாரம் உமிழப்படும். இந்த ஆராய்ச்சி ஏற்கெனவே கண்டுபிடிக்கப் பட்டிருந்த க்ரூக்ஸ் குழாயைக் (Crookes tube) கொண்டு நடந்தபோது அருகில் கதிர்களைக் கண்டுபிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேரியம் பிளாட்டினோ திரை ஒளிர்ந்துள்ளது.
அப்போது, மின் உமிழ்வு நடக்கும்போது திரை ஒளிர்வது உறுதியானது. மீண்டும் இரவு பகலாக இந்தக் கதிர்களைக் கண்டறிய முயன்றார். எதுவென்று கண்டறிய முடியாததால் அதற்குத் தற்காலிகமாக எக்ஸ் (X) எனப் பெயரிட்டார். ஆனால், அதுவே பெயராகிவிட்டது. சில நாடுகளில் ராண்ட்ஜன் கதிர் என அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.
கதிரின் வீச்சு
எக்ஸ் கதிரைக் கண்டுபிடித்த பிறகு முதன்முதலாக அவருடைய மனைவி அன்னா பெர்தாவின் உடலை எக்ஸ்ரே எடுத்துக் காண்பித்துள்ளார். அவரது எலும்புக்கூட்டின் எக்ஸ்ரே வரைபடத்தைப் பார்த்த அவரது மனைவி வியந்துபோனார்.
அதே ஆண்டு டிசம்பர் 28-ல் இந்த எக்ஸ் கதிர்கள் குறித்து ‘On A New Kind Of Rays’ ஆய்வைச் சமர்ப்பித்தார் ராண்ட்ஜன். மருத்துவத் துறையில் நோயைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பாதுகாப்புச் சோதனைக்காகவும் இயந்திரவியல், கட்டிடவியல் போன்ற துறைகளில் தரத்தைச் சோதிக்கவும் எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT