Published : 13 Mar 2018 10:44 AM
Last Updated : 13 Mar 2018 10:44 AM
இ
ளைஞர்கள் எழுவர் அந்த அறையில் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்துள்ளனர். அவர்கள் முன்னால் சட்டக்கல்விப் புத்தகங்களை வைத்துக்கொண்டு அவர்கள் தங்களுக்கிடையே தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது தலை மழிக்கப்பட்டுள்ளது. நீல வெள்ளைக் கோடுகள் போட்ட சீருடையை அணிந்திருக்கின்றனர். அவர்கள் உகாண்டா சிறையில் தண்டனைக் காலத்தைக் கழித்துக்கொண்டே சட்டக்கல்வி படிப்பவர்கள்.
திருந்த உதவாமல் துன்புறுத்துவதா?
ஆப்ரிக்கன் பிரிசன்ஸ் ப்ராஜக்ட்-ன் கீழ், தங்கள் சட்ட உரிமைகளுக்காகவும், தங்கள் சக கைதிகளின் சட்ட உரிமைகளுக்காகவும் முறைப்படி போராடுவதற்காகச் சட்டக் கல்வியில் சேர்ந்துள்ளனர். சட்ட மாணவராக இருந்தபோது 2007-ம் ஆண்டு இந்தக் குழுவைத் தொடங்கிய அலெக்சாண்டர் மெக்லீன் தற்போது இங்கிலாந்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.
உகாந்தா நாட்டின் மருத்துவமனை ஒன்றுக்கு சேவைக்காக இளைஞர் அலெக்சாண்டர் மெக்லீன் சென்றபோது, அங்கே அதிகமாகச் சிரமப்படுத்தப்பட்ட சிறைவாசிகள் இறந்துபோனதை நேரடியாகப் பார்க்க நேரிட்டது. தவறிழைத்த மனிதர்கள் திருந்துவதற்கு உதவாமல் அவர்களைத் துன்புறுத்துவது குற்ற நீதி அமைப்பின் வேலையாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தார்.
முதலில் ஆப்ரிக்கன் பிரிசன்ஸ் ப்ராஜக்ட், உகாண்டா சிறைகளின் சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டது. நூலகங்களையும் மருத்துவமையங்களையும் உருவாக்கினால் சிறைவாசிகளுக்குக் கவுரவமான வாழ்நிலையை அளிக்கும் என்றே முதலில் அலெக்சாண்டர் மெக்லீன் நினைத்தார்.
ஆனால், சிறைகளில் 67 சதவீதம் படிப்பறிவின்மை நிலவும் நிலையில் சிறைகளில் மேம்பாடு ஏற்படுத்தவே முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டார். எழுத்தறிவு, வாசிப்பு, அடிப்படை ஆரோக்கியக் கல்வி, தொழிற்பயிற்சியைக் கற்றுத்தரும் கல்வியாளர்களைச் சிறைகளுக்குள் அழைத்துச்சென்றார். சிறைவாசிகள் மட்டுமல்ல; சிறைப் பணியாளர்களுக்கும் இந்தக் கல்வி தேவையாக இருந்தது. ஒருகட்டத்தில் நல்ல ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிப்பது செலவு பிடிக்கும் காரியமாக ஆனது.
அப்போது அலெக்சாண்டருக்குக் கண்முன்னாலேயே இன்னொரு வாய்ப்பு இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே கல்வி, விளையாட்டுப் பயிற்சிகளை முடித்த கைதிகளிலேயே சிறந்தவர்களை ஆசிரியர்களாக உருமாற்றினார் அலெக்சாண்டர். ஆரோக்கியம், படிப்பறிவு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகச் சிறை வாசிகளுக்குச் சட்டக் கல்விதான் அவசியமானது என்பதும் உணரப்பட்டது.
சிறைவாசிகளுக்குக் கல்வி எதற்கு?
உகாண்டா, கென்யா சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் 80 சதவீதத்தினர் வழக்கறிஞர் என்னும் மனிதரையே தங்கள் வாழ்க்கையில் பார்த்திராதவர்கள் என்கிறார் அலெக்சாண்டர். லண்டன் பல்கலைக்கழகம் அளிக்கும் இணையவழி சட்டக் கல்வித் திட்டத்தின் கீழே முதலில் மாணவர்கள் ஒன்பது பேர் சட்டக் கல்வி பெற ஆப்ரிக்கா பிரிசன்ஸ் ப்ராஜக்ட் அமைப்பு உதவியது.
“சிறையில் உள்ளவர்களுக்கு ஒரு சமூகம் ஏன் கல்வி அளிக்க வேண்டும்? ஏனெனில், முதலில் அதை அந்தச் சமூகம் அளிக்கத் தவறியதுதான் காரணம். ஒருவரைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிடக் கல்வியளிப்பது மலிவானது. கல்விதான் குற்றத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி” என்கிறார் குற்ற நீதியைக் கற்றுத்தரும் பேராசிரியரான பாஸ் ட்ரெசிங்கர்.
ஒன்பது பேரில் தொடங்கித் தற்போது உகாண்டாவின் 30 சிறைகளைச் சேர்ந்த சிறைவாசிகள் 63 பேர் சட்ட மாணவர்களாகக் கல்வியைத் தொடர்கின்றனர். மூவர் தற்போது இளநிலைப் படிப்பை முடித்து எல்.எல்.பி. பெற்றுள்ளனர். மாணவர்கள் நால்வர் சட்டப் பட்டயச் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
அறிவின் வழியாக விடுதலை
சட்டக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தங்கள் சக கைதிகள் 5 ஆயிரம் பேருக்குச் சட்ட ஆலோசனைகளை இதுவரை வழங்கியுள்ளனர். இவர்களின் உதவியால் கைதிகள் 3 ஆயிரம் பேர் பிணையில் விடுதலையாகியுள்ளனர். கைதிகள் 77 பேரின் தண்டனை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஏழு மரண தண்டனைகள் ரத்தாகியுள்ளன. நால்வர் மரண தண்டனையிலிருந்து விடுபட்டு விடுதலையுமாகியுள்ளனர்.
“முன்னாள் கைதிகளின் உடல் திறனைக் கொண்டு எப்படி அவர்களைச் சமூகத்துக்குப் பங்களிப்பு செய்யவைக்கப் போகிறோம் என்ற எண்ணம்தான் பொதுவாக நிலவுகிறது. அவர்களது அறிவின் வழியாக எப்படி அவர்களைப் பங்களிக்க வைக்கப்போகிறோம் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. ஒளிபடைத்த, படைப்பூக்கம் மிகுந்த, அர்ப்பணிப்பு கொண்ட சட்ட மூளைகளாக அவர்கள் சமூகத்துக்குப் பங்களிக்க வேண்டுமென்று கனவு கண்டேன். அது ஒருவகையில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.” என்கிறார் அலெக்சாண்டர் மெக்லீன்.
ஆப்ரிக்கன் பிரிசன்ஸ் ப்ராஜக்ட் திட்டத்தின்கீழ் சட்டக் கல்வி பெற்ற முதல் பெண் கைதியும் வழக்கறிஞருமான சூசன் கிகுலா, மரண தண்டனைக் கைதியாக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்தவர். தனது வாதங்களைக்கொண்டே அவர் 2016-ம் ஆண்டு விடுதலை ஆகியுள்ளார். தற்போது மகளிர் சிறைகளுக்குச் சென்று சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவியையும் அளித்துவருகிறார். அலெக்சாண்டர் மெக்லீன் கண்ட கனவின் நனவுப் பிரதிநிதி இவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT