Published : 08 Sep 2014 02:48 PM
Last Updated : 08 Sep 2014 02:48 PM
அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் போய்ப் படிப்பது இன்று பலருக்கும் ஒரு லட்சியக் கனவு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர வெளிநாட்டு மாணவர்கள் காத்துக் கிடந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் 821 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
800 ஆண்டுச் சாதனை
நாளந்தா தற்போதைய பிஹார் மாநிலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் உருவாக தொடங்கியது. 1400 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து 800 ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது. குப்த பேரரசர் சக்ராதித்யா இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதாக நாளந்தாவின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவரான சீன யாத்ரிகர் யுவான் சுவாங் கூறுகிறார்.
நுழைவுத்தேர்வு
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேசியா, துருக்கி, கிரீஸ், பெர்ஷியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்களை ஈர்த்தது நாளந்தா பல்கலைக்கழகம். அப்பொழுதே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவிற்கு வந்து பவுத்தம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனப் பல்லாயிரம் மைல்கள் கால்நடையாக நடந்தும், கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக் குதிரைகளிலும் பயணம் செய்து வந்தவர் யுவான் சுவாங். காஷ்மீர், பாடலிபுத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பவுத்தத்தைக் கற்றுக்கொண்ட யுவான் சுவாங், மகாயான பவுத்தத் தத்துவத்தை நாளந்தாவில் தங்கிக் கற்க விரும்பியபோது தனக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது என்கிறார்.
10 ஆயிரம் மாணவர்கள்
யுவான் சுவாங்கின் குறிப்புகள் நாளந்தாவைக் கண் முன் நிறுத்துகின்றன. 10,000 மாணவர்கள் வரை தங்கிக் கல்வி பயின்றுள்ளனர். கிட்டத்தட்ட 1500 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். தங்கும் விடுதியோடு கூடிய உலகின் முதல் பல்கலைக்கழகம் நாளந்தாதான். கணிதம், மருத்துவம், வான சாஸ்திரம், தத்துவம், தர்க்கம் உள்ளிட்ட 18 பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய நூலகம் இங்கே இயங்கியிருக்கிறது.
புத்தர் விவாதித்த இடம்:
புத்தர் தனது சீடர்களோடு விவாதித்த இடத்தில்தான் நாளந்தா பல்கலைகழகம் அமைக்கப்பட்டதாக இரிக்பா ஷேத்ரா எனும் திபெத்திய புத்தமதம் பற்றிய இணையதள கலைக்களஞ்சியம் கூறுகிறது.
கட்டிடக் கலையிலும் தனித்துவம் வாய்ந்தது நாளந்தா. சுண்ணாம்பு, வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு கொண்டு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. 3 முதல் 12 அடி அகலத்துக்குச் சுவர்கள் இருந்தன. அதனால், அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன. 10 கோவில்கள், தியான மண்டபங்கள், எனக் கட்டுமானங்கள் இருந்திருக்கின்றன.
நூல்களின் புதையல்
ஒன்பது மாடி கொண்ட பல்கலைகழகத்தில் தர்மா கஞ்ச் (தர்மத்தின் புதையல்) என்ற பெயரில் நூலகம், மூன்று மாடிகளில் இயங்கியது. புத்த மத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவம், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்கியம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன.
அதனால் லட்சக்கணக்கான நூல்கள் ஓலைச்சு வடிகள் உள்ளிட்ட வடிவங்களில் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தன.
இங்கே 12 ஆண்டுகள் தங்கி புத்த தத்துவங்களும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களும் பயின்ற யுவான் சுவான் 600க்கும் மேற்பட்ட நூல்களோடு சீனா திரும்பினார். அவற்றைச் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
தாக்குதல்கள்
மூன்று முறை நாளந்தா பல்கலைக்கழகம் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
ஸ்கந்தகுப்தர் (455-467)
காலத்தில் மிகிரகுலா அரசால் முதன்முதலில் சேதப்படுத்தப்பட்ட நாளந்தா பின்னர் சீரமைக்கப்பட்டது. 7-ம் நூற்றாண்டில் கவுடர்களின் தாக்குதலிலிருந்தும் ஹர்ஷவர்தன் மன்னர் நாளந்தாவை மீட்டெடுத்தார்.
மூன்றாம் தாக்குதல் சூறாவளியாக வந்தது. 1193-ல் துருக்கிய மன்னர் பக்தியார் கில்ஜி நடத்திய இந்தத் தாக்குதல் இந்த ஞானக் களஞ்சியத்தைத் தரைமட்டமாக்கியது. பவுத்த சமயத்தையும் பெருமளவில் பாதித்தது. பல்லாயிரக்கணக்கான நூல்கள் தீயில் மூன்று மாதங்களாகக் கொழுந்து விட்டு எரிந்தன என்கிறார் பெர்ஷிய வரலாற்று அறிஞர் மின்கா-ஐ-சிராஜ்.
நாளந்தாவும்- கிரேக்க அகாடமியும்
கிரேக்கத்தில் தத்துவ ஞானி பிளாட்டோ அவரது கல்விக்கூடமான ‘அகாடமி’ யை சுமார் கிமு 345-ல் உருவாக்கினார். அதில் அரிஸ்டாட்டில், ஹெராகிளிடஸ், செனொக்ரேட்ஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் உருவாகினர்.
நாளந்தா பல்கலைகழகமும் அது போன்றே யுவான் சுவாங், நாகார்ஜுனா, வசுபந்து, ஹர்ஷவர்த்தனர், பத்மசம்பவா போன்ற மாமேதைகளை உலகிற்குத் தந்தது.
அகாடமி கிரேக்க நாட்டிற்குள் மட்டுமே சிந்தனையாளர்களை உருவாக்கியது. நாளந்தாவோ உலகெங்கிலுமிருந்து மாணவர்களை ஈர்த்து அவர்களை ஞானச் சுடர்களாக மெருகேற்றியது. யுவான் சுவாங்கிற்கு நூற்றுக்கணக்கான பவுத்த சூத்திரங்களையும், தர்க்க சாஸ்திரங்களையும் அள்ளித் தந்தது. நாளந்தாவில் ஞானம் பெற்ற பத்மசம்பவா திபெத்திய பவுத்தத்தைக் கட்டமைத்தார். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த நாகர்ஜுனா மாத்யமிகா எனும் பவுத்தத் தத்துவத்தை அருளினார்.
அப்துல் கலாமின் முயற்சி
பிஹாருக்கு இன்று சென்று பார்த்தால் நாளந்தாவின் எச்சங்கள் மட்டுமே தென்படுகின்றன. அறிவுக் கருவூலமாக செழித்திருந்த நாளந்தா பல்கலைக்கழகம் சிதில மடைந்துள்ளது.
எஞ்சிய சில பகுதிகள் மட்டும் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. சிறு பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. அதை மறுபடி கட்டுவதற்கான கோரிக்கையை 2006ல் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்வைத்தார்.
2700 கோடி
இந்தத் திட்டத்துக்கு உயிரூட்டிய மத்திய அரசு ரூ 2700 கோடியை ஒதுக்கிக் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளது. வரலாற்றுச் சுவடுகளை அப்படியே பாதுகாக்க முடிவெடுத்துள்ளது அரசு. பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் அப்பால் ராஜ்கி பகுதியில் புதிதாக 443 ஏக்கர் நிலத்தை பிஹார் அரசு மக்களிடம் இருந்து பெற்று பல்கலைக்கழகத்தை உருவாக்கத் தொடங்கியது. இந்த பணி 2020- ல் முழுமை பெறும். கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
உயிர்த்தெழுந்தது
முதல் கட்ட நடவடிக்கையாக செப்டம்பர் 1, 2014 முதலாக மீண்டும் நாளந்தா கல்வி நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தலைமையில் இதற்கென ஒரு குழுவை அரசு நியமித்திருக்கிறது. சிங்கப்பூர், சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கல்விப் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளனர்.
மாணவர் சேர்க்கை:
இந்தக் கல்வியாண்டுக்காக வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், மியான்மர், ஆஸ்திரியா, இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்தும் 1000–க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். இதில் முதல் 15 சிறந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான், பூடான் நாடுகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்களைத் தவிர மற்றவர்கள் இந்தியர்கள்.
இளைய தலைமுறையினர் இனி நாளந்தாவில் சேருவது குறித்தும் கனவு காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT