Published : 07 May 2019 12:32 PM
Last Updated : 07 May 2019 12:32 PM
ஒவ்வோர் ஆண்டும் மே 1-ம் நாளை ‘சர்வதேசத் தொழிலாளர் நாளா’கக் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அனுசரிக்கின்றன. மே 1 அன்று கொண்டாடப்படுவதால் இது ‘மே நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மே நாள் உருவானதற்குப் பின்னணியில் உலகத் தொழிலாளர்களின் நெடிய போராட்ட வரலாறு உள்ளது. தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை ஒரு நாளுக்கு எட்டு மணி நேரமாகக் குறைப்பதற்கான போராட்டம் அது.
வரலாறு
19-ம் நூற்றாண்டில் உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு தொழிலாளர் புரட்சிகளும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளும் தோன்றின. தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், அவற்றின் பின்னால் அணி திரண்டனர். அப்போதெல்லாம் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்வரை வேலைபார்க்க வேண்டிய சூழல் நிலவியது.
இந்நிலையில் ஜெர்மனி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேலை நேரம் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கினார்கள். அந்தந்த நாடுகளில் தோன்றியிருந்த கம்யூனிச, சோஷலிச அமைப்புகள் பேரளவில் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தன.
கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், அவருடைய நண்பர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோர் எழுதி 1848-ல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ பல்வேறு உலக நாடுகளில் இருந்த தொழிலாளர்களிடம் பெரும் தாக்கம் செலுத்தியது.
அவர்களது போராட்டங்கள் வலுவடைந்தன. 1864-ல் ‘முதல் அகிலம்’ என்று அழைக்கப்படும் ‘சர்வதேசத் தொழிலாளர்கள் ஒன்றியம்’ (International Working men’s Association) இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் உருவானது.
கம்யூனிச, சோஷலிச அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பாக இது செயல்பட்டது. 1876-ல் ‘முதல் அகிலம்’ கலைக்கப்பட்டு 1889-ல் ‘இரண்டாம் அகிலம் தொடங்கப்பட்டது. இந்த ‘இரண்டாம் அகிலம்’தான் மே 1-ம் நாளை உலகத் தொழிலாளர் நாளாக முதல்முறையாக அறிவித்தது.
ஏன் மே 1?
அமெரிக்காவில் இயங்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 1886 மே 1 அன்று ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்தும் நாள் என்று அறிவித்து, நாடு முழுவதும் அன்றைய நாளில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. திட்டமிட்டபடி அமெரிக்காவின் பல தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
பேரணிகளை நடத்தினார்கள். பலர் கைது செய்யப்பட்டார்கள். மே 3 அன்று ஒரு தொழிற்சாலையின் வாயிலில் 3,000 தொழிலாளர்கள் இணைந்து கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள், அப்போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதை எதிர்க்கும் விதமாக மே 4 அன்று சிகாகோவில் உள்ள ஹே மார்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களின் கண்டனக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 2,500 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியதை அடுத்து வெடித்த வன்முறையில், ஏழு காவலர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வு ‘ஹேமார்க்கெட் படுகொலை’ என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்துத் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஏழு பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
1889 ஜூலையில் பாரிஸில் நடந்த ‘இரண்டாம் அகில’த்தின் முதல் மாநாடு ‘ஹே மார்க்கெட் படுகொலை’யைக் கண்டித்ததுடன், அதற்கு வித்திட்ட போராட்டத்தை நினைவுகூரும் விதமாக 1890 மே 1 அன்று எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கைக்காக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவித்தது.
1891-ல் நடந்த இரண்டாவது மாநாட்டில் மே முதல் நாளை ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கான நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதன் மூலம்தான் மே 1 தொழிலாளர் நாளாக ஆனது.
இந்தியாவில் மே நாள்
சென்னையில் முதல் முறையாக 1923 மே 1 அன்று, பொதுவுடைமைக் கட்சித் தலைவராக இருந்த ம.சிங்காரவேலர் மே நாள் கொண்டாட்டத்தை நடத்தினார். மெரினா கடற்கரையிலும் உயர் நீதிமன்ற வளாகத்திலும் அன்று இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மே 1-யைத் தொழிலாளர் நாளாக அங்கீகரிக்கவும் அந்நாளை அரசு விடுமுறை நாளாக அறிவுக்கவும் பிரிட்டிஷ் அரசைக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முறையாக 1957-ல் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, மே 1-யை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது.
பிறகு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு 1967-ல் மே நாளை விடுமுறை நாளாக அறிவித்தது. தமிழ்நாட்டில் 1969-ல் மே நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. பிறகு இந்தியா முழுவதும் தேசிய விடுமுறை நாளாக, 1990-ல் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT