Published : 23 Apr 2019 11:07 AM
Last Updated : 23 Apr 2019 11:07 AM
டெல்லி, பொ.ஆ. 1540
“இப்ராஹிம் லோதி, தௌலத் கான், ராணா சங்கா என வட இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பலரை பாபர் தோற்கடித்தாலும், இந்தியாவை அவரால் நீண்ட காலத்துக்கு ஆள முடியல. 1530-ல காபூலுக்குத் திரும்பிக்கிட்டிருந்த போது அவர் இறந்தார், செழியன்."
“ஓ, அப்பத்தான் ஹுமாயுன் வந்தாரா, குழலி?”
“ஆமா, பாபரைப் போலவே, ஹுமாயுனின் கதையும் ஏற்ற இறக்கங்கள் நிறைஞ்சது”
“அப்படியா?”
“பாபர் காலத்துலயே ஹுமாயுன் போர்கள்ல ஈடுபட்டிருந்தாலும்கூட, பாபர் அளவுக்குப் போர்க் கலையில் அவர் திறமைசாலியா இல்ல. அதனால பாபர் வென்று கொடுத்த பகுதிகளை ஹுமாயுன் கடுமையா போரிட்டுத்தான் தக்க வெச்சுக்க வேண்டியிருந்துச்சு. குஜராத்தைச் சேர்ந்த பகதுர் ஷாவும் பிஹாரைச் சேர்ந்த ஷெர் ஷா சூரியும் (சுர்) அவரைக் கடுமையாக எதிர்த்தாங்க. 1540-ல் ஷெர் ஷா சூரி ஹுமாயுனை வீழ்த்தி ஆட்சியையும் கைப்பற்றிட்டாரு.”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“ஹுமாயுனுக்கு எல்லாப் பக்கங்களிலும் பிரச்சினை. ஒரு பக்கம் தாங்களே ராஜாவாக நினைத்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் அஸ்கரி, ஹிந்தல் ஆகியோர் தந்த நெருக்கடி, மற்றொருபுறம் ஷெர் ஷா சூரியின் வெற்றி. இதனால ராஜஸ்தான் பாலைவனங்கள்ல ஹுமாயுன் தஞ்சமடைஞ்சார். அந்தக் காலத்துலதான் அவருடைய மனைவி ஹமிதா பானு 1542-ல அக்பரைப் பெற்றெடுத்தார்.
பாபர் ஏற்கெனவே ஆட்சி புரிஞ்சுக் கிட்டிருந்த இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதிய, ஹுமாயுனின் ஒன்றுவிட்ட சகோதரர் கம்ரான் ஆட்சி புரிஞ்சுக் கிட்டிருந்தார். அவர் ஹுமாயுனுக்கு உதவ மறுத்துட்டார். இதனால என்ன செய்யுறதுன்னு தெரி யாம ஹுமாயுன் தவிச்சார். கடைசியா ஹீரத்தைச் சேர்ந்த ஈரானிய அரசர் உதவ முன்வந்தார். அந்த உதவியோட 1545-ல கம்ரானை வீழ்த்தி காந்தஹார், காபூலை ஹுமாயுன் கைப்பற்றினார்.”
“திரும்பவும் இந்தியா வந்தாரா?”
“எப்படி வராமப் போவார். இடையில ராஜபுதனர்களின் கலிஞ்சார் கோட்டையைத் தகர்க்க கோட்டைச் சுவர்களில் வெடிமருந்தை இட்டு வெடிக்க வைக்க ஷெர் ஷா சூரி உத்தரவிட்டிருந்தார். துரதிருஷ்டவசமா அவரே இதுல சிக்கி இறந்துபோனார். அவருக்குப் பின்னால வந்த அவருடைய வம்சத்தினர் அவ்வளவு வலுவா இல்ல. அதனால, தான் இழந்த பகுதிகளை ஹுமாயுன் திரும்பவும் கைப்பற்ற முடிஞ்சது. பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி வந்த அவர், சிக்கந்தர் ஷா சூரியைத் தோற்கடித்தார்.”
“ஓ! இத்தனை ஆண்டுகளாச்சா?”
“15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, முகலாயர்கள் திரும்பவும் இந்தியாவை ஆட்சி புரியத் தொடங்கினாங்க. ஆனா, அதுவும்கூட ஹுமாயுன் நீண்ட காலம் ஆட்சிபுரிய வழியமைக்கலை. டெல்லி வந்து ஏழு மாசத்துக்கு அப்புறம், தன்னோட நூலகப் படிகள்ல தவறி விழுந்து ஹுமாயுன் இறந்தார். அவர் நல்ல போர்த் தளபதியாகவோ தலைவராகவோ இருந்திருக்கலை. அதேநேரம், தின்பனா என்ற புதிய நகரை டெல்லி பக்கத்துல நிர்மாணிச்சு சந்தைகள், திருவிழாக்களை நடத்தியிருக்கார். ஓவியம் வரையுறதிலும் கவிதை எழுதுறதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கார்."
“அதுக்கப்புறம்தான் அக்பர் வர்றார், இல்லையா?”
“ஹுமாயுன் இறந்தப்போ 13 வயசே ஆகியிருந்த அக்பர், தன் படையுடன் பஞ்சாபுக்குச் சென்றிருந்தார். தாத்தா பாபர் மாதிரி சின்ன வயசிலேயே அவரும் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஹுமாயுனுக்கு உதவிய தளபதி பைரம் கான், அக்பருக்கும் பக்கபலமாக இருந்தார்.”
“முகலாயர் ஆட்சியை பாபர் தொடங்கி வெச்சாலும், அக்பர் வழியாதான் அது இந்தியாவுல நிலைபெற்றுச்சுன்னு சொல்வாங்களே, குழலி”
“ஆமா, அக்பர்தான் முகலாயப் பேரரசை வலுப்படுத்தினார். அவரோட தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைச்சது. அவரும் அதைச் சிறப்பா பயன்படுத்திக்கிட்டு 50 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிஞ்சார்.”
ரூபாய் வந்தது
# ஹுமாயுனைத் தோற்கடித்த ஷெர் ஷா சூரி காலத்தில்தான் ‘ருபியா’ என்ற வெள்ளி நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே இன்றைய ‘ரூபாய்’ என்ற பெயருக்கான அடித்தளம்.
# முகலாயர் என்பது மங்கோலியர்கள் என்பதற்கான பாரசீகப் பெயர்.
யாருக்கு உதவும்?
போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்
கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT