Published : 16 Apr 2019 09:21 AM
Last Updated : 16 Apr 2019 09:21 AM
இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் தமிழகத்துக்கு எப்போதும் முக்கியப் பங்கு இருந்துவந்துள்ளது. திராவிட அரசியலின் பிறப்பிடமான தமிழகம் பல நேரம் தேசிய அரசியலின் ஓட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளது.
இங்கு முகிழ்ந்த திராவிடக் கட்சிகள் இரண்டும் மாறி மாறி மத்திய ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்துள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகம் எப்படி வாக்களிக்கும் என்பது தேர்தல் கருத்துக் கணிப்பு மேதைகளுக்குப் பெரும் சவாலாகவே விளங்கிவருகிறது.
1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் 75 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வென்று மக்களவைக்குச் சென்ற தமிழர்களில் ஒருவரான காமராஜர், பிறகு யார் பிரதமர் என்று தீர்மானிக்கும் ‘கிங்மேக்கர்’ ஆக உருவெடுத்தார்.
தமிழகக் கட்சிகளின் முதல் தடம்
இந்தத் தேர்தலில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கட்சிகளான ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ நான்கு தொகுதிகளிலும் ‘காமன்வீல் கட்சி’ மூன்று தொகுதிகளிலும் வென்றன. 1957 தேர்தலில் தி.மு.க. முதல்முறையாகப் போட்டியிட்டது. கட்சிக்குத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காததால் 11 உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.
அவர்களில் ஈ.வி.கே.சம்பத், தர்மலிங்கம் ஆகிய இருவரும் வெற்றிபெற்று மக்களவைக்குள் திராவிடக் கட்சிகளின் தடங்களை முதன்முறையாகப் பதித்தனர். 1962 தேர்தலில் தி.மு.க.வின் ஏழு உறுப்பினர்கள் மக்களவைக்குச் சென்றனர். 1967-ல் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததோடு 25 மக்களவைத் தொகுதிகளிலும் தி.மு.க. வென்றது.
தேசிய அலைக்கு எதிராக
மக்களவைத் தேர்தலில் தேசிய அலைக்கு எதிரான மனநிலையைத் தமிழக வாக்காளர்கள் பல முறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் பெரிய வெற்றியைச் சுவைக்கவில்லை.
75 தொகுதிகளில் 35-ல் மட்டுமே வென்றது. 1967 தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் தமிழகத்தில் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அத்தேர்தலில் தி.மு.க., ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு சுயேச்சை வேட்பாளர் அடங்கிய கூட்டணி 36 தொகுதிகளில் வென்றது.
1977-ல் நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆனால், தமிழகத்தில் மொத்தமுள்ள
39-ல் 34 தொகுதிகளை அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய கூட்டணி வென்றது.
அ.தி.மு.க. முதல்முறையாகப் போட்டியிட்ட மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 17 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் வென்றது. அதேபோல் 2014 மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்த தேசத்திலும் மோடி அலை வீசுவதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. மீதமுள்ள 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றது.
திராவிடக் கட்சிகளின் வலிமை
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வலுவாகக் காலூன்றிய பின் பெரும்பாலான தேர்தல்களில் அக்கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோது மட்டுமே மற்ற கட்சிகள் வென்றுள்ளன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. 1971-ல்
இருந்து தி.மு.க., அ.தி.மு.க.வுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்தபோது மட்டுமே காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் வெல்ல முடிந்திருக்கிறது. இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் எதிர்கொண்ட 1998, 2014 தேர்தல்களில் அக்கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அதேபோல் பாரதிய ஜனதா கட்சியும் 1998-ல்
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே முதல்முறையாக மூன்று தொகுதிகளில் வென்றது. 1999 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து நான்கு தொகுதிகளில் வென்றது. திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எதிர்கொண்ட 2009 தேர்தலில் அக்கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.
2014-ல் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வென்றது. தருமபுரி தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான பா.ம.க. வென்றது. ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தி.மு.க. அல்லது அதி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் மக்களவைக்குச் சென்றிருக்கின்றன.
17-ம் மக்களவைக் களத்தில்
2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 அன்று ஒரே கட்டமாகத் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முறை அதி.மு.க.+பாஜக தலைமையிலும், தி.மு.க.+காங்கிரஸ் தலைமையிலும் இரண்டு வலுவான கூட்டணிகள் அமைந்துள்ளன. முக்கியக் கட்சிகள் அனைத்தும் இவற்றில் ஏதேனும் ஒன்றில் இணைந்துவிட்டன. நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புதிய கட்சிகள் மட்டும் தேர்தலைத் தனித்து எதிர்கொள்கின்றன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,587 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 742 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுவிட்டன. எனவே, 845 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்களில் யாரெல்லாம் வெற்றிபெற்று அமையவிருக்கும் 17-வது மக்களவையில் இடம்பெறப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
சாதனைத் துளிகள் # தமிழகத்திலிருந்து ஏழு முறை மக்களவைக்குச் சென்றிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: 1984, 1989, 1991, 1996,1998, 2004, 2009 தேர்தல்களில் சிவகங்கையில் போட்டியிட்டு அவர் வென்றார். # காமராஜர் 1952, 1969, 1971 ஆகிய மூன்று மக்களவைத் தேர்தல்களில் வென்றிருக்கிறார். மூன்று முறை மக்களவை உறுப்பினரான மாநில முதல்வர் அவர் மட்டும்தான். # 1951 தேர்தலில் டி.ஏ.ராமலிங்கம் கோயம்புத்தூரின் எம்.பி. ஆகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 தேர்தலில் திருச்சியின் எம்.பி.யாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. # 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நோட்டாவுக்கு 5.81 லட்சம் வாக்குகள் பதிவாயின. நோட்டாவுக்கு வாக்களித்தவர்களில் தேசிய அளவில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. # மக்களவைத் தேர்தல்களில் தமிழகத்தில் இதுவரை நான்கு இடதுசாரித் தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை வென்றிருக்கிறார்கள். 1962-ல் ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.உமாநாத் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வென்றார்.1967 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக அதே தொகுதியில் வென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம் 1971, 1977 தேர்தல்களில் திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்தும், அதே கட்சியின் எம்.செல்வராசு 1996, 1998 தேர்தல்களில் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் பி.மோகன் மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1999, 2004 தேர்தல்களில் வென்றனர். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT