Published : 16 Apr 2019 09:49 AM
Last Updated : 16 Apr 2019 09:49 AM

அந்த நாள் 38: புலி போல் வந்தவன்

காலம்: ஆக்ரா, பொ.ஆ. 1527

“பாபர் - அக்பரின் தாத்தாவான இவர், இந்திய வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகிப் போனவர். அவர் வாழ்ந்தது என்னவோ 500 ஆண்டுகளுக்கு முன்னாலதான்.

ஆனாலும், அயோத்தில அவர் பேர்ல இருந்த மசூதி 1992-ல இடிக்கப்பட்டதுக்கு அப்புறம், நவீன இந்திய அரசியலிலும் மறைமுகமாகத் தாக்கம் செலுத்துபவரா அவர் மாறிட்டார் செழியன்.”

“ஓ! அப்ப தஞ்சாவூர்லேர்ந்து நேரா நாம ஆக்ரா வந்துட்டோமா, குழலி?”

“ஆமா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த பாபர் அவரோட அப்பா ஆண்டுக்கிட்டிருந்த ஃபர்கானா என்ற பகுதிக்கு 11 வயதில் மன்னர் ஆனார். அந்தப் பகுதி இன்றைய உஸ்பெகிஸ்தான் பக்கத்துல இருக்கு. ஆனா, அப்பகுதியை இழந்த பிறகு தன்னோட 21-வது வயசுல ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அவர் ஆளத் தொடங்கினார்.”

“அப்புறம் எப்போதான் இந்தியாவுக்கு வந்தாரு?”

“பொ.ஆ. 1526-ல அவரோட 42-வது வயசுல. அப்போ இந்தியாவோட பல பகுதிகளையும் பல்வேறு மன்னர்கள் ஆண்டுக்கிட்டிருந்தாங்க. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இப்ராஹிம் லோதி ஆண்டுக்கிட்டிருந்தார்.

பஞ்சாப்பை ஆண்டு வந்த தௌலத் கானும் மேவாரை ஆண்டு வந்த ராணா சங்காவும் பாபரைப் பயன்படுத்தி லோதியை வீழ்த்த நினைச்சாங்க. பாபர் இந்தியா வந்தபோது, பானிபட்ங்கிற இடத்துல இப்ராஹிம் லோதியை வீழ்த்தினார்.”

“அதுதான் முதலாம் பானிபட் போரா?”

“ஆமா, டெல்லிக்கு வடக்கே 90 கி.மீ. தொலைவுல இன்றைய ஹரியாணாவுல அந்த ஊரு இருக்கு. லோதிக்கு எதிரா பாபர் வந்தப்போ அவரிடம் இருந்தது 10,000 வீரர்கள்தான். லோதியிடமோ ஒரு லட்சம் வீரர்கள் இருந்தாங்க”

“அப்புறம் எப்படி பாபரால வெல்ல முடிஞ்சது?”

“அந்தப் போர் ஐஞ்சு மணி நேரத்துல முடிஞ்சிட்டதா சொல்றாங்க. பாபர் மிகச் சிறந்த போர் வியூகம் வகுப்பவர்.  துப்பாக்கிகள், பீரங்கிகளை பாபர் பயன்படுத்தினாரு. இந்தியாவில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய முதல் மன்னர் அவர்தான்.

லோதியை வீழ்த்தத் தனக்கு அழைப்பு விடுத்த தௌலத் கானையும் கானுவா போரில் ராணா சங்காவையும் வீழ்த்தி வட இந்தியாவின் பெரும் பகுதியை பாபர் கைப்பற்றினார்.”

“இப்படிச் சிறந்த போர் வீரராகவும் ராணுவப் படைத் தலைவராகவும் இருந்தது மட்டும்தான் அவரோட சிறப்பா, குழலி?”

“நிச்சயமா இல்ல, படிச்சவராவும் கவிதை எழுதுபவராகவும், நினைவுகளைக் குறிப்பு எழுதுபவராகவும் அவர் இருந்திருக்கார்.

அந்த நினைவுக்குறிப்புகள் ‘பாபர்நாமா’ங்கிற பேர்ல நூலா வெளியாச்சு, செழியன்.”

 

andha-2jpgபாபர் – சில சிறப்புகள்

# பாபர் என்ற பெயருக்குப் புலி என்று அர்த்தம்.

# தந்தை வழி தைமூர்- தாய் வழி செங்கிஸ்கான் என இரண்டு பெரும் மன்னர்களின் வழிவந்தவர் பாபர்.

# ஸாஹிர் உத் தின் முகம்மது பாபர் என்பதுதான் அவருடைய முழுப் பெயர்.

# ‘பாபர்நாமா’வில் இந்திய தாவரங்கள், உயிரினங்கள்

# பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன.

# இந்தியாவில் அதிக காலம் ஆட்சி செலுத்திய

பேரரசுகளில் ஒன்று முகலாய வம்சம் – மொத்தம் 332 ஆண்டுகள்

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

கட்டுரையாளர்

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x