Last Updated : 01 Sep, 2014 12:00 AM

 

Published : 01 Sep 2014 12:00 AM
Last Updated : 01 Sep 2014 12:00 AM

கல்லறையில் கிடைத்த தொல்பொருள்

1.சமீபத்தில் இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட உலகின் பழமையான உலோகத் தொல் பொருள் எந்த உலோகத்தாலானது?

அ) இரும்பு

ஆ) தாமிரம்

இ) அலுமினியம்

ஈ) இவற்றில் எதுவுமல்ல



2. இந்தியக் கப்பல் படையில் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். காமோர்த்தா எனும் கப்பலைத் தயாரித்த நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) ஜப்பான்

இ) இந்தியா

ஈ) இங்கிலாந்து



3. பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ள ராமானுஜம் கமிட்டி என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது?

அ) மரண தண்டனை தொடர்பாக ஆராய

ஆ) நிர்வாகச் சட்டங்களை ஆராய

இ) வழக்கில் இல்லாத சட்டங்களை ஆராய

ஈ) இவற்றில் எதுவுமல்ல



4. இங்கிலாந்தின் நிழல் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சீமா மல்ஹோத்ரா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) இங்கிலாந்து

ஆ) இலங்கை

இ) இந்தியா

ஈ) பாகிஸ்தான்



விடைகள்:

1. விடை: ஆ) தாமிரம்

இஸ்ரேல் நாட்டின் ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள டெல் சாஃப் என்னுமிடத்தில் தொல்லியலாளர்கள் சமீபத்தில் தொன்மையான பொருள்கள் பற்றிய ஆய்வு நடத்தியுள்ளார்கள். அப்போது ஒரு பெண்ணின் கல்லறையைத் தோண்டியபோது தாமிரத்தாலான ஊசி ஒன்று கிடைத்துள்ளது.

அதன் நீளம் 1.6 அங்குலம், முனை 0.03 அங்குலம். இதன் காலம் கி.மு. 5100 லிருந்து கி.மு. 4600க்குள் இருக்கலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்தப் பெண் இறக்கும்போது அவருக்கு 40 வயது இருந்திருக்கும் என்றும் அவர் இடுப்பில் தீக்கோழியின் முட்டையோ்டில் செய்யப்பட்ட மணிகளை அணிந்திருந்ததாகவும் தொல்லியலாளர்கள் கூறுகிறார்கள். கி.மு. 5100 - கி.மு. 4600 காலத்தைச் சேர்ந்த அந்தக் கிராமம் பொருளாதார ரீதியாக வளமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

செங்கல்லாலான பெரிய கட்டிடங்கள் இருந்துள்ளதாகவும், 15 முதல் 30 டன் எடையிலான கோதுமை, பார்லி போன்றவற்றைச் சேமித்து வைக்கும் குதிர்கள், விலங்குகளின் எலும்புகளைப் பொரிக்கப் பயன்படுத்தும் கணப்பு அடுப்பு ஆகியவையும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.

2. விடை: இ) இந்தியா

ஐ.என்.எஸ். காமோர்த்தா, முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நீர்மூழ்கிக் கப்பலை எதிர்த்து போர் புரிய உதவும் போர்க்கப்பல். இதை, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் உருவாக்கியது. ஸ்டீல்த் தொழில்நுட்பம் இந்தக் கப்பலின் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. இதனால் சோனார், ராடார் போன்றவற்றின் மூலம் கப்பலின் இருப்பிடத்தை அறிவது மிகவும் கடினம். இதில் தளத்திலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்த அதிக உறுதி கொண்ட எஃகு இரும்பால் இது கட்டப்பட்டுள்ளது. ஏ.எஸ்.டபிள்யூ. ஹெலிகாப்டர் ஒன்றும் இக்கப்பலில் உள்ளது. 3500 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கட்டும் பணி 2006-ல் தொடங்கப்பட்டது. 25 நாட்டிகல் மைல் வேகத்தில் பயணப்படும் இந்தக் கப்பல் தொடர்ந்து 3500 நாட்டிகல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது.

3. விடை: இ) வழக்கில் இல்லாத சட்டங்களை ஆராய

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27 ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் செயலராக உள்ள ஆர். ராமானுஜம் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார். இதில் குழுத் தலைவர் ராமானுஜத்தைத் தவிர, நாடாளுமன்ற விவகாரத் துறையின் முன்னாள் செயலர் வி.கே.பாஷினும் உள்ளார்.

இக்குழு மூன்று மாதங்களில் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு மசோதா கொண்டுவரப்படும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத சட்டங்கள் பற்றியும் அரசாங்க இயந்திரத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் சட்டங்கள் பற்றியும் விரிவான ஆய்வு நடத்தப்படும்.

4. விடை: இ) இந்தியா

லேபர் கட்சியைச் சேர்ந்த சீமா மல்ஹோத்ரா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெண்கள், குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை பற்றிய விவகாரங்களைக் கையாள்வதற்காக லேபர் கட்சி இவரை நிழலமைச்சர் ஆக்கியுள்ளது. நிழல் அமைச்சரவை என்பது இங்கிலாந்து நாட்டில் எதிர்க்கட்சிகள் அமைக்கும் அமைச்சரவை.

ஆளும்கட்சியின் நிறைகுறைகளை எடுத்துக் கூறி ஆட்சியமைப்பைச் சீர்ப்படுத்துவதே இதன் நோக்கம். இப்பொறுப்பை நிறைவேற்றிவந்த ஹெலன் ஜோன்ஸ் என்னும் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து சீமா மல்ஹோத்ராவுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x