Last Updated : 05 Mar, 2019 11:24 AM

 

Published : 05 Mar 2019 11:24 AM
Last Updated : 05 Mar 2019 11:24 AM

உலகத்தர நூலகத்தை வடிவமைத்த சம்யுக்தா

உலகத் தரத்தில் நூலகத்தைப் பார்க்க விரும்பினால் புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்துக்குச் செல்லலாம். 2.25 அச்சுப் புத்தகங்கள், மின்நூலகத்தில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், இ-புக், இ-ஜர்னல் வகையறா நூல்கள், டிஜிட்டல் வடிவில் ஆராய்ச்சிக்கு உதவும் பலவாரியான தகவல்கள், முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்பவர்களுக்குத் தனி வளாகம்…இப்படி ஏகப்பட்ட வாசிப்பின் வாசனை தரும் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

தனது குழுவினருடன் இந்தப் பணியை முன்னெடுத்துச் செய்து வருகிறார் புதுச்சேரி பல்கலைக்கழக நூலகர் சம்யுக்தா. நூலகத்தின் பல பகுதிகளில் இவர் பெற்ற விருதுகள் அணிவகுத்து நிற்கின்றன.

இரு தேசிய விருதுகள், ‘பபாசி சிறந்த நூலகர் விருது’, பன்னாட்டு நூலக மேம்பாட்டு அமைப்பு புரோகொஸ்ட் சார்பில் புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்துக்கு ‘ஒளி நட்சத்திர விருது’ எனப் பல விருதுகள். நூலகத் துறையில் 38 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் இவர் 2008-லிருந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவருகிறார்.

தேசத்தின் முன்னோடி

“நான் பணியில் சேர்ந்தவுடன் நூலகத்தை மேம்படுத்தப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அக்காலத்தில்தான் புதுச்சேரி நூலகக் கட்டிடத்தைப் புதுப்பித்தோம். இயற்கைச் சூழல் உகந்த நூலகமாக மாற்றினோம்.

மாணவர்கள் நூலகத்தில் படிக்க உலகத் தரத்திலான தனி அரங்கு, சிறு விவாத அரங்கு எனப் பல வசதிகளுண்டு. அருமையான இருக்கை, டேபிள், குளிர்சாதன வசதி, தேவையான இணைய வசதி எனப் படிப்பதை விருப்பமாக்கியுள்ளோம். கல்லூரி நேரம் முடிந்த பிறகு இங்கு அமர்ந்து படிக்கவே பலரும் வரத்தொடங்கினர். இரவு 12 மணி வரை இந்த அரங்குகள் இயங்குகின்றன” என்கிறார் சம்யுக்தா.

நூலகம் முழுவதுக்குமான RFID என்ற ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடெண்டிஃபிகேஷன்’ முறை பொருத்தப்பட்டிருப்பதால் யாராவது பதிவிடாமல் புத்தகம் எடுத்துச் சென்றால் வாயிலில் சிவப்புவிளக்கில் அலாரம் அடிக்கும். அதே நேரத்தில் அடையாள அட்டையைக் காண்பித்து எளிதாகப் புத்தகம் எடுத்துச் செல்லும் வசதியுள்ளது. அத்துடன் புத்தகத்தை எந்நேரமும் செலுத்தி ரசீது பெறும்வசதியும் உள்ளது. இந்த வசதிகள் நாட்டிலேயே முன்னோடியாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு அறிமுகப்படுத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

“பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி மூலமாக ஒலி வடிவில் புத்தகங்களைக் கேட்க, பிரெய்லி முறையில் வாசிக்கத் தேவையான மென்பொருளைப் பொருத்தியுள்ளோம். அத்துடன் காது கேளாதோர் படிக்கவும் பல லட்சம் மதிப்பிலான சாதனத்தை வைத்துள்ளோம். இத்தகைய முயற்சிகளில் தேசத்துக்கே முன்னோடியாக விளங்குவதால் சிறப்பு விருதும் கிடைத்துள்ளது”என்கிறார்.

விரியும் வேலைவாய்ப்பு

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆளுமை மிகுந்த இவர், இத்துறைக்கு நல்ல பேச்சுத் திறன் அவசியம் என்கிறார். நூலகத் துறையில் தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறார்.

“ஒரு நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துத் தருவது, விநியோகித்த புத்தகங்களின் தகவலைப் பதிவிடுவது மட்டுமே நூலகரின் வேலை என்று நினைக்கிறார்கள். நூலகம் சார்ந்த படிப்பை முடித்தவருக்கு இதர துறைகளில் வெவ்வேறு பெயர்களில் வேலைகள் கிடைக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களில் ‘டெக்னிக்கல் எடிட்டர்’, ‘வெப் மாஸ்டர்’ தொடங்கி இணையத்திலேயே பல பணி வாய்ப்புகள் உள்ளன.

வேலைவாய்ப்புக்கு உகந்த படிப்பு இது. திறமையை வளர்த்து வெல்லலாம்” என்கிறார் இந்தச் சிறந்த நூலகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x