Published : 26 Mar 2019 11:51 AM
Last Updated : 26 Mar 2019 11:51 AM
மார்ச் 19: பிரமோத் சாவந்த், கோவாவின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். கோவாவின் முதல்வராகப் பதவிவகித்துவந்த மனோஹர் பரிக்கர், உடல்நலக் குறைவால் மார்ச் 17 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து புதிய முதல்வராக பிரமோத் சாவந்த், 11 அமைச்சர்களுடன் பதவியேற்றுக்கொண்டார். இந்தப் பதினோரு அமைச்சர்களில் இரண்டு துணை முதல்வர்களான விஜய் சர்தேசாய், ராமகிருஷ்ண தவலிக்கர் ஆகியோரும் அடக்கம்.
24 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவை
மார்ச் 20: தமிழ்நாட்டின் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனன.
இதில், கடந்த ஆண்டு, 17 மாவட்டங்களில் சராசரி அளவைவிட 59 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைவான மழை பெய்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வடகிழக்குப் பருவமழை பொய்த்தது இந்த வறட்சிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியில் பின்னுக்குச் சென்ற இந்தியா
மார்ச் 20: 2019-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உலகின் 156 நாடுகள் இடம்பெற்றிருந்த மகிழ்ச்சிப் பட்டியலில், இந்தியா 140-வது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது. 2018-ம் ஆண்டில், 133-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஏழு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (67), வங்கதேசம் (125), சீனா (93) ஆகியவை நம்மைவிட மேம்பட்ட நிலையில் உள்ளன. உலக நாடுகளின் குடிமக்களின் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, பெருந்தன்மை ஆகிய ஆறு அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில், முதல் இடத்தை பின்லாந்து சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் பிடித்திருக்கிறது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.
நீரவ் மோடி லண்டனில் கைது
மார்ச் 20: பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட இந்திய வைர வியாபாரி நீரவ் மோடிக்குப் பிணை வழங்க வெஸ்ட்மின்ஸ்டர் குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மார்ச் 29 வரை சிறைக்காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவால் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, விரைவில் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவார் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT