Published : 12 Feb 2019 10:50 AM
Last Updated : 12 Feb 2019 10:50 AM
சமூகப் பணி, அறிவியல், பொறியி யல்,வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி உள்ளிட்ட பிரிவுகளில் மகத்தான பங்களிப்பை நல்கிய வர்களுக்குப் பத்ம விருதுகளை 1954 முதல் இந்திய அரசு வழங்கிவருகிறது.
அவ்வாறு இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தேர்வாகி இருக்கும் 112 ஆளுமைகளில் கல்வி, அறிவியல், பொறியியல் துறைகளில் பெரும்பங்காற்றியவர்கள் 15 பேருக்குப் பத்ம பூஷண் (2) பத்ம ஸ்ரீ (13) விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் சி.வி.ராமன் போன்ற உலகப் புகழ்வாய்ந்த விஞ்ஞானிகள் பணியாற்றிய இந்திய அறிவியல் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயற்பியல் பேராசிரியை ரோகிணி கோத்பலே போன்றோரும் இருக்கிறார்கள். இஸ்ரோவின் விஞ்ஞானியாக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ஆகியவற்றை வடிவமைத்ததில் பங்காற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் போன்றோரும் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சாதாரணர்களின் வாழ்வை மேம்படுத்தவும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியைக் கொண்டுசேர்க்கவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கும் எளியோர் சிலரும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அசாதாரணச் சாதாரணர்களில் இருவர்:
உண்மையான ‘மாஸ்டர்’!
ஒடிஷா மாநிலத்தின் கடக் நகரத்தில் வசிக்கும் டீ மாஸ்டர் தேவரப்பள்ளி பிரகாஷ் ராவ் . தேநீர் விற்றுக் கிடைக்கும் வருவாயில் பாதியைக் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காகக் கடந்த 20ஆண்டுகளாகச் செலவழித்துவருகிறார். ‘கனவுக்கு உத்தரவாதம்’ என்ற பொருள் தரும் ‘ஆஷா ஓ அஷ்வசனா’ என்ற பள்ளியை 2000-ம் ஆண்டில் தொடங்கினார்.
அப்பகுதி வாழ் தினக்கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர், கடைநிலை சுகாதார ஊழியர்களின் குழந்தைகளில் 70-க்கும் மேற்பட்டோருக்குப் பால், பிஸ்கட், மதிய உணவு, பள்ளிச் சீருடை, காலணியுடன் இலவசக் கல்வி அளித்துவருகிறார். வறுமையால் தான் 10-வதுக்கு மேல் படிக்க முடியாமல்போனதுபோல் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதாலேதான் இதைச் செய்துவருகிறார். அதே நேரத்தில் இவருக்கு 8 இந்திய மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரியுமாம். அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொண்டுசேர்க்கும் சமூகப் பணிக்காக இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாமானியரின் கண்டுபிடிப்பாளர்!
மாதுளம் பழத்தின் சுளைகளைப் பிரித்தெடுப்பதானாலும் பூண்டு தோலை உரிப்பதானாலும் எளிதாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர் உத்தவ் குமார் பராலி. அசாம் மாநிலத்தின் லக்ஷ்மிபூரைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு ஜனவரி 25 வரை இவர் 150 இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.
அத்தனையும் அன்றாடத்துக்குப் பயனளிப்பவை. சாமானியருக்கான பொறியாளர் என்று பாராட்டப் பெற்ற இவர் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய பல்வேறு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி இருக்கிறார். சென்னையில் 1988-ல் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்டவர் குடும்பத்தின் ஏழ்மை நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்றுபோனார். சொந்த ஊருக்கே திரும்பியவர் பொறியியல் ஆராய்ச்சி மீது கொண்ட தீராத காதலால் கண்டுபிடிப்பில் இறங்கினார்.
படிப்படியாக முன்னேறித் தற்போது யூ.கே.பி. அக்ரோடெக் என்ற இயந்திர வடிவமைப்பு, ஆராய்ச்சி மையத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார். ஏற்கெனவே 2009-ல் குடியரசுத் தலைவர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்ட இவருக்குத் தற்போது அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சாமானியரின் கண்டுபிடிப்பாளர் என்ற அடையாளத்துடன் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணைத் தாண்டி ஆராயும் ஆராய்ச்சியாளர்களை ஆராதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மண்ணின் மைந்தர்களோடு செயலாற்றுபவர்களையும் ஊக்குவிப்பது அவசியம். இத்தகைய திறமைவாய்ந்த அர்ப்பணிப்பு மிக்க சாமானியர்கள் ஏராளமானோர் இருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கே உரிய அங்கீகாரம் போய்ச்சேர்ந்து கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT