Published : 19 Feb 2019 11:14 AM
Last Updated : 19 Feb 2019 11:14 AM

அந்த நாள் 21: சாதி ஏற்றத்தாழ்வுக்கு என்ன பதில்?

காலம்: பொ.ஆ.மு. 270-230, பாடலிபுத்திரம்

"அந்தக் காலப் பெண்கள், ஊர்கள் பத்தியெல்லாம் சொல்லிட்ட. அந்தக் காலச் சமூகம் எப்படி இருந்துச்சு? அசோகர் ஆட்சி நடத்தின காலத்துல சமூகம் மேம்பட்டதா தானே இருந்திருக்கும், குழலி?"

"முழுசா அப்படி இருந்ததுன்னு சொல்ல முடியாது. ஆனா, அதற்கு முன்னாடி இருந்ததைவிட மேம்பட்டு இருந்துச்சு. புகார், முசிறி, மாமல்லபுரம் போன்ற தமிழகத் துறைமுகங்கள் வழியா ஏற்றுமதி வர்த்தகம் கடல் வழியா நடந்தது பத்தி நாம பேசிருக்கோம். அசோகர், குப்தர்கள் காலத்துல ‘வைசியர்கள்' எனப்பட்ட வர்த்தக சாதிகளைச் சேர்ந்தவர்கள் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகம் செஞ்சாங்க செழியன்."

"அவங்களும் கடல் வழியா போனாங்களா?"

"இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் வழியா அவங்க வர்த்தகம் செஞ்சாங்க. குஜராத்தில் இருந்த துறைமுகங்கள், தென்னிந்தியாவுக்குச் சென்ற பாதை ‘தட்சிணபாதை'ன்னு அழைக்கப்பட்டுச்சு. ‘உத்தரபாதை', உலகப் புகழ்பெற்ற பட்டுப் பாதைக்கு இட்டுப் போச்சு. சீனா, இந்தியாவில் தொடங்கி ஆப்கானிஸ்தான்-பெர்சியா (ஈரான்), மத்திய கிழக்கு நாடுகள் என நிலம் வழியாகவே ஐரோப்பாவைச் சென்றடைந்ததுதான் பட்டுப் பாதை. இந்தப் பாதை வழியா வைசியர்கள் சிறப்பா வியாபாரம் செஞ்சாங்க."

"உள்நாட்டு வியாபாரம், உள்நாட்டு வேலைகள்லாம்?"

"வெளிநாட்டு ஏற்றுமதி சிறப்பா நடந்தாலும், ஒரு நாட்டை முழுமையாக இயக்கத் தேவையான மற்ற வேலைகளைச் செஞ்சது யார் என்ற கேள்வி முக்கியமானது. கடுமையான உடல் உழைப்பைக் கோரக்கூடிய, பெரும் அழுக்கைச் சார்ந்திருந்த, கீழாகக் கருதப்பட்ட வேலைகளையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களே செஞ்சாங்க. செருப்பு தைப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வேட்டையாடிகள், மீனவர்கள் போன்றவங்க, அந்த வேலைகளுக்காகவே ஒதுக்கப்பட்டவர்களா இருந்தாங்க. எடுத்துக்காட்டா, தோல் பொருள் வேலை செஞ்சவங்க ‘சண்டாளர்கள்'னு அழைக்கப்பட்டாங்க. இன்னைக்கும் அந்தப் பெயர் அவச்சொல்லா இருக்கிறதுக்குக் காரணம் என்னன்னு உனக்குப் புரியுதா?"

andha-2jpgபுத்தர்

"அவங்க சாதிதானே காரணம்?"

"ஆமா. அவங்க உருவாக்கிய செருப்பு, காலணி, தண்ணீர் பை, குதிரை சேணம் போன்றவையெல்லாம் பரவலா பயன்படுத்தப்பட்டாலும், சமூகத்தில் அவங்க சமமா மதிக்கப்படலை. சண்டாளர்களின் நிழல்கூடத் தங்களை அசுத்தப்படுத்திவிடும். அதனால் அவர்கள் ஊருக்குள்ள நுழையும்போது கைல இரண்டு குச்சிகளை வெச்சு தட்டி ஒலி எழுப்பணும்னு சாதி இந்துக்கள் எழுதப்படாத சட்டத்தை வெச்சிருந்தாங்க. தங்களைத் தவிர மத்தவங்க எல்லாம் அசுத்தமானவங்கன்னு சாதி இந்துக்களின் அதீதப் புனித மனப்பான்மையில் பிறந்த அபத்த விதிகள் இதெல்லாம்."

"அதெல்லாம் இன்னைக்கு ஓரளவு மாறியிருக்கு. ஆனா, முழுசா மாறலை"

"மற்றொரு பக்கம் வைசியர்கள்ட்ட அதிகப் பணம் சேர்ந்திருந்துச்சு. ஆனா, எவ்வளவோ பணம் இருந்தும் அதிகாரம் மட்டும் ஆட்சி நடத்தின சத்திரியர்கள், அவர்களுடன் நெருக்கமாக இருந்த பிராமணர்கள் கையிலேயே இருந்துச்சு."

"அப்ப பிரச்சினை இன்னும் ஆழமானதுன்னு சொல்ல வர்ற"

"இந்தப் பின்னணிலதான் சமண மதத்துக்கு வர்த்தமான மகாவீரர் புத்துயிர் அளிச்சார். கௌதம புத்தர் பௌத்த மதத்தை நிறுவினார். மகாவீரர் பிஹாரில் வாழ்ந்தவர், புத்தர் ஞானம் பெற்றதும் பிஹாரில் உள்ள கயைலதான். ரெண்டு பேருமே சமகாலத்தில் வாழ்ந்த மகான்கள். அவங்க உருவாக்கின புதிய சமயங்கள் சாதி-வர்ண முறை, பலிகொடுத்தலை மறுத்து அனைவரும் சமம், அகிம்சை ஆகிய உயரிய கொள்கைகளைப் போதித்தன. சாதி இந்துக்களால ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த இரண்டு சமயங்களும் புது வாழ்வு அளித்தன. சாதி முறை இல்லாததால வைசியர்களும் சமணர், பௌத்தர்களா மதம் மாறினாங்க."

"புரியுது, சாதி ஏற்றத்தாழ்வுக்கு அந்தக் காலத்துல இதுதான் பதிலா இருந்திருக்கு"

"அது மட்டுமில்ல, நகரங்கள் - கிராமங்கள்ல பெருகியிருந்த பௌத்த விஹாரங்கள்-மடாலயங்கள், சமணப் பள்ளிகள்ல சிறார்கள் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டாங்க. சமண, பௌத்தத் துறவிகளிடம் பெரியவங்க ஆலோசனைகளும் மருந்துகளும் வாங்கிவந்தங்க. இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கைல சமண, பௌத்தத் துறவிகள் கலந்திருந்தாங்க."

"எல்லா சமய மக்களும் அவங்கள ஏத்துக்கிட்டாங்களா குழலி?"

"மஞ்சள்காவி உடையணிஞ்ச துறவிகள் வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்டப்போ, அது இந்து வீடா இருந்தாலும்கூட யாசகம் கொடுத்தாங்க. அதேமாதிரி சமய விழாக்கள், பண்டிகைகளை எல்லா சமயத்தினரும் இணைஞ்சு கொண்டாடினாங்க. இன்னைக்கும் பல பகுதிகள்ல இதுபோல மற்ற சமய விழாக்களைக் கொண்டாடுறதைப் பார்க்க முடியுதே. அதிலும் குறிப்பா, தீபாவளி ஒரு சமணப் பண்டிகை - வர்த்தமான மகாவீரர் நிர்வாணம் அடைஞ்ச நாள்தான் தீபாவளி செழியன்."

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்.

 

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x