Published : 12 Feb 2019 11:10 AM
Last Updated : 12 Feb 2019 11:10 AM
பிப்ரவரி 4: பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு மத்தியப் பிரதேச முன்னாள் டி.ஜி.பி.யான ரிஷி குமார் சுக்லாவை சி.பி.ஐ. இயக்குநராக நியமிப்பதாக (பிப்ரவரி 2) அறிவித்தது. இதையடுத்து, புதிய சி.பி.ஐ. இயக்குநராக ரிஷி குமார் சுக்லா பதவியேற்றுக்கொண்டார். ஆனால், இதுவரை சி.பி.ஐ., மாநில ஊழல் ஒழிப்புத் துறையில் இவர் பணியாற்றியது இல்லை. உயர்மட்டக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவராக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் எதிர்ப்பையும் மீறி ரிஷி குமார் சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வாக்குகள் காகிதத் தணிக்கை சோதனை
பிப்ரவரி 5: நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களில், வாக்காளார் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிந்துகொள்ளும் வசதி (Voter Verifiable Paper Audit Trail) செய்துதரப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ‘விவிபேட்’ இயந்திரம், கட்சிச் சின்னத்துடன் இந்தச் சீட்டை வெளியிடும். வாக்காளர், ஏழு நொடிகளுக்கு இந்தச் சீட்டைப் பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘விவிபேட்’ சீட்டுகளை வாக்காளர்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியாது.
ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றி
பிப்ரவரி 6: இந்தியாவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-31 பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏரியன்-5 ஏவுகணையின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 15 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட இந்தச் செயற்கைக்கோள், ‘விசாட் நெட்வர்க்’, தொலைக்காட்சி இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். சேவை, கைபேசி சேவை ஆகியவற்றுக்குப் பயன்படும் என்று தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.
தேசியப் பசு ஆணையத்துக்கு ஒப்புதல்
பிப்ரவரி 6: தேசியப் பசு ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்காக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து இந்தத் தேசியப் பசு ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
2019: தமிழகப் பட்ஜெட் தாக்கல்
பிப்ரவரி 8: 2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டைத் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் வருவாய் வளர்ச்சி 14 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கு ரூ. 1,656 கோடியும் லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 1,072 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 2,361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT