Last Updated : 01 Sep, 2014 12:00 AM

 

Published : 01 Sep 2014 12:00 AM
Last Updated : 01 Sep 2014 12:00 AM

ஆசைப்பட்டதை விட வேண்டாம்

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஒரு பழமொழி இருக்கிறது தெரியுமா? (தாசில் என்றால் அதிகாரம் செய்தல் என அர்த்தம்.) ஒரு விஷயத்தின்மீது ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அது கைகூட வேறு பல விஷயங்களும் கூடுதலாக வேண்டும் என்பதை கேலியாகச் சொல்லும் பழமொழி இது.

இரு புள்ளிகள்

கழுதை மேய்ப்பது உள்பட எந்தத் தொழிலும் இழிவானதல்ல. ஆசைக்கும் கைகூடும் வாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளியைச் சொல்வதுதான் இந்தப் பழமொழியின் நோக்கம். அதிர்ஷ்டம்தான் எல்லாமே என்றால் நமது முயற்சிகளுக்கு அர்த்தம் இல்லாமல்போகும். எனவே அதிர்ஷ்டம் என்பதைக் கைகூடுதல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஏன் ஆசைப்பட்டது கிடைக்காமல் போக வேண்டும்? அத்தகைய சூழல் உருவாவது ஏன்?

ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி. இந்த இரண்டு புள்ளிகளையும் இணைக்கும் பாலம் ஒன்று இருக்கிறது. அது பல அம்சங்களால் ஆனது. அந்த அம்சங்கள் என்னென்ன?

அம்சங்கள்

திறமை, வாய்ப்பு ஆகியவை அந்தப் பாலத்தின் முக்கியமான பகுதிகள். திறமை என்பது இயல்பான திறமை, முயற்சியால் மெருகேற்றப்படும் திறமை என இரு பகுதிகளால் ஆனது.

வாய்ப்பு என்பது ஏற்கனவே இருப்பது, உருவாக்கப்படுவது என இரு வகைப்படும். ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளையும் புதிதாக உருவாகிவரும் வாய்ப்புகளையும் அறிந்துகொள்ள விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லாத வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் தெரிய வேண்டும். உரிய வாய்ப்பு கிடைப்பது, வாய்ப்புகளை அடையாளம் காண்பது, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது, வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது ஆகியவை நமது தொழில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை.

திறமைகளே நம் அடையாளம்

திறமையை வளர்த்துக்கொள்வது பெரும்பாலும் மாணவப் பருவத்தில்தான் தீவிரமாக நடைபெறுகிறது. வாய்ப்பு பற்றிய கவலை அதற்கு அடுத்த கட்டத்தில் வருவது.

சிலருக்குச் சில விஷயங்களில் இயல்பான திறமை இருக்கும். இசை, ஓவியம், பேச்சுத்திறன், நிர்வாகம், விளையாட்டு, கற்பித்தல், உடல் திறன், தொண்டு மனப்பான்மை எனப் பல விதமான திறமைகளாக இவற்றை அடையாளம் காணலாம்.

இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். உதாரணமாக, இசையில் திறமை பெற்ற ஒருவர் இசைக் கலைஞராகவே தன் வாழ்வை அமைத்துக்கொள்வது. விளையாட்டு, உடல் திறன், வடிவமைப்பு எனப் பல விதங்களிலும் இந்த உதாரணத்தை விரிவுபடுத்திக் கொண்டேபோகலாம்.

பயிற்சியும், முயற்சியும்

ஆசைக்கு ஏற்ற திறமை இயல்பாக அமைந்துவிட்டால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ள முனைய வேண்டும். பயிற்சி, முயற்சி என்று மெனக்கெட்டுத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஓவியம், இசை, விளையாட்டு, எழுத்து என்று என ஏதோ ஒரு துறையில் உங்களுக்கு அடங்காத ஆர்வம் உள்ளது. ஈடுபாடு உள்ளது. ஆனால் அதில் அவ்வளவாகத் திறமை இல்லை. அப்படியானால் நீங்கள் அதிகமாக உழைத்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆவல் எதில் இருக்கிறதோ அதில் சிறிதளவேனும் திறன் இருக்கத்தான் செய்யும். அதை மெருகேற்றுவதே உங்கள் முனைப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் சில சமயம் ஆவல் இருக்கும் விஷயத்தில் எவ்வளவு முயன்றாலும் திறமை வளராது. உதாரணமாக, பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் தன் குரலை ஒரு அளவுக்கு மேல் மேம்படுத்தவே முடியாது. குரல் என்பது பெரும்பாலும் இயற்கையின் கொடை. அந்தக் கொடையை மெருகேற்றவே கடுமையாக உழைக்க வேண்டும். இயல்பாக நல்ல குரல் இல்லை என்றால் எப்படி உழைத்தாலும்

ஒரு அளவுக்கு மேல் அதை மெருகேற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? ஆசையை விட்டுவிடலாமா?

கிளைகளில் கவனம்

அவசியம் இல்லை. எதில் அடங்காத ஆர்வம், இயல்பான ஆர்வம் இருக்கிறதோ அதையே தன் தொழிலாக, தனக்கேற்ற துறையாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். எனவே ஆவல் அதிகமுள்ள துறையையே தேர்ந்தெடுக்கலாம். அந்தத் துறையின் அடிப்படை ஆதாரமான அம்சத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாவிட்டால் அந்தத் துறையின் கிளைகளில் கவனம் செலுத்தலாம்.

உதாரணமாக, பாட்டுப் பாடக் குரல் இல்லாவிட்டால் வாத்திய இசையைக் கற்றுக்கொள்ளலாம். இசைக் கலைஞர்களை ஒன்று சேர்த்து இசைக் குழுவை அமைக்கலாம். இசையில் ஞானத்தை வளர்த்துக்கொண்டு இசையமைப்பாளராகலாம். இசையை ரசிக்கும், அலசும் திறனை வளர்த்துக்கொண்டு இசை பற்றி எழுதலாம்.

இதேபோல இதர ஆவல்களையும் அணுகலாம். குறிப்பிட்ட ஆவல் தொடர்பான ஒரு துறையின் அடிப்படையான அம்சத்தில் பெரிதாகத் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாவிட்டால் அதே துறையில் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

சினிமா துறை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அதில் நடிப்பு, இயக்கம், எழுத்து, இசை, எடிட்டிங், ஒலிப்பதிவு, ஒப்பனை, நடனம் எனத் திரைக்கு முன்னும் பின்னும் பல தொழில்கள் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்றில் திறமையை வளர்த்துக்கொண்டு உங்களுக்குப் பிடித்த துறையில் இருக்கலாம். கணினித் துறை, வடிவமைப்பு, கல்வித் துறை, எழுத்துத் துறை, விற்பனைத் துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம்.

ஆர்வத்துக்கும் சாதனைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இப்படியும் நிரப்பலாம். ஏதோ ஒன்று வரவில்லையே என ஏங்குவதற்கு பதில் சற்றே வித்தியாசமாக யோசித்தால் தனக்குப் பிடித்த துறையிலேயே ஒருவர் சந்தோஷமாகச் சாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x