Published : 05 Feb 2019 11:04 AM
Last Updated : 05 Feb 2019 11:04 AM
காலம்: பொ.ஆ.மு. 270-230, பாடலிபுத்திரம்
“மாமன்னர் அசோகர் பத்திப் பேச ஆரம்பிச்சாலே, அவர் மரம் நட்டார், குளம் வெட்டினார்னுதான் திரும்பத் திரும்பச் சொல்லுவாங்க. நீ போன வாரம் சொன்னது, அதிலிருந்து மாறுபட்டிருந்துச்சு குழலி.”
“நல்லது செழியன். வரலாற்றில் அசோகர் முக்கியமானவரா திகழ்வதற்கு அவர் பின்பற்றிய பௌத்தக் கொள்கை களைத் தாண்டி, இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கு. அது பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம்.”
“அப்படி என்ன அவர் வித்தியாசமா செஞ்சார்?”
“அசோகரின் மெய்க்காவலர்கள் யாரா இருந்திருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”
“மெய்க்காவலர்கள்னாவே கம்பீர மான ஆண்கள்தானே ஞாபகத்துக்கு வருவாங்க?”
“இல்ல, அசோகரின் மெய்க் காவலர்கள் பெண்கள். மேற்சட்டை, கால்சட்டை போன்ற உடைகளோட ஈட்டி, கேடயம், வாள், குறுவாள் போன்றவற்றை அவங்க தரிச்சிருந்தாங்க. மன்னரின் தேருக்குப் பாதுகாப்பா குதிரைகள்ல அவங்க பாய்ஞ்சு போனாங்க.”
“பெண்களை மெய்க்காவலர்களாத் தேர்ந்தெடுத்ததுல, அப்படி என்ன விசேஷம்?”
“பெண்களே நம்பகமானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருப் பாங்கன்னு அரசர்கள் நம்பியதுதான் காரணம். அரசரின் உணவு, பானங்கள் போன்றவற்றை அவங்க பரிசோதிச் சாங்க. அரசரோட பல்லக்கையும் தூக்கிப் போனாங்க. அசோகருக்குப் பின்னால வந்த குப்த மன்னர்கள் காலத்திலேயும் இது தொடர்ந்துச்சு.”
“2000 வருஷத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் நடந்திருக்கு. ஆனா, நாடு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் முன்னேற்றம் இந்தியாவுல இன்னும் தள்ளாடிக்கிட்டு இருக்கே”
“நீ சொல்றது நிஜம்தான். முதன் முதல்ல மகளிர் நலத் துறை அமைச்சரை நியமித்தவர் யார் தெரியுமா?”
“அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ அப்படி நடந்திருக்கலாம்னு நினைக்கிறேன்”
“இல்ல. அதை செஞ்சதும் அசோகர்தான். அந்த அமைச்சருக்கு ‘ஸ்திரீ அத்யாக்ஷ மகாமத்ரா’ன்னு பேர். ஏழைப் பெண்களுக்கு வேலை கிடைக்கச் செய்றது, கணவரை இழந்தோர், வயது முதிர்ந்த பெண்களின் நலனைப் பாதுகாக்கிறது இந்த அமைச்சரோட வேலை. பெண்கள் மீது அசோகர் கொண்டிருந்த அக்கறையையும் கரிசனத்தையும் இதுபோன்ற நடவடிக்கைகள்ல இருந்து தெளிவாப் புரிஞ்சுக்கலாம்.”
“பெண் மெய்க்காவலர்கள், தனி அமைச்சகம் எல்லாம் மிக முக்கியமான நடவடிக்கைகள்தான். அதேநேரம், பெண்களால படிக்க முடிஞ்சதா?”
“புனித நூல்களை மனப்பாடம் செய்றது, கணிதம், இலக்கணம், தர்க்கம், வானியல், கவிதை போன்றவை அந்தக் கால மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. ஆனா, அந்தக் காலத்துல எல்லாப் பெண்களும் படிச்சாங்கன்னு சொல்ல முடியாது. செல்வந்தக் குடும்பங்கள்ல இருந்த சில பெண்களுக்கு வீட்டிலேயே கல்வி போதிக்கப்பட்டது. அதிகபட்சமா சமய நூல்களை வாசிக்கவும் கூட்டல்-கழித்தல் கணக்குகளைப் போடவும் கற்றுத் தரப்பட்டது.”
“பெண்களின் நிலை மேம்பட்டு இருந்திருக்கு. ஆனா, எல்லோரும் படிக்க அனுமதிக்கப்படல”
“ஆமா. அதேநேரம் அன்றைக்கு வலுவா இருந்த பௌத்த சங்கங்கள்ல பல பெண்கள் துறவிகளா இணைஞ்சிருந்தாங்க. அவங்க எழுதின ‘தேரிகதை’ என்ற கவிதைத் தொகுதி உலகில் பெண்கள் எழுதியதிலேயே, பழமையான தொகுப்பு நூலா கருதப்படுது செழியன்.”
“நிச்சயமா, இது பெரிய சாதனைதான் குழலி”
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
அசோகரை ஆராய்ந்தவரும் பெண்! உலகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த கருப்பொருள் அசோகருடைய ஆட்சி. அவருடைய முதல் புத்தகமான ‘Asoka and the Decline of the Maurya'-வும் (1961) அசோகர் ஆட்சியை அடிப்படையாகக்கொண்டிருந்தது. ஒரே அரசாட்சியின்கீழ் பல்வேறு இனக் குழுக்கள், பண்பாடுகளைச் சேர்ந்தவர்களைப் பிரிவினைசெய்து ஆட்சி நடத்தாமல், சமூக ஒழுங்கைச் சிறப்பாகப் பாதுகாத்ததில் அசோகரின் கொள்கை (தம்மம்) முக்கியமானது என்கிறார் ரொமிலா தாப்பர். டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர், பத்ம பூஷண் விருதை இரண்டு முறை மறுத்தவரும்கூட. |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT