Last Updated : 19 Feb, 2019 11:18 AM

 

Published : 19 Feb 2019 11:18 AM
Last Updated : 19 Feb 2019 11:18 AM

சேதி தெரியுமா? - ஆப்பிரிக்க யூனியனின் புதிய தலைவர்

பிப்ரவரி 10: ஆப்பிரிக்க யூனியனின் புதிய தலைவராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா எல் சிஸி (Abdel Fattah El Sisi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக் காலம் 2020-ல் நிறைவடைகிறது. 55 ஆப்பிரிக்க நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமையகம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் அமைந்துள்ளது.

 

ஏழைக் குடும்பங்களுக்கு நிதி

பிப்ரவரி 11: தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2,000 நிதி உதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். கஜா புயல் பாதிப்பு, பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் இந்த நிதி உதவி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, ரூ. 1,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ரஃபேல்: சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்

பிப்ரவரி 13: 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில்  முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் விலை 2.86 சதவீதம் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

s2jpgAbdel Fattah El Sisi

ஆனால், 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தனிப்பட்ட ரஃபேல் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இதையடுத்து, சி.ஏ.ஜி. அறிக்கையை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

பயங்கரவாதத் தாக்குதலில் 43 பேர் பலி

பிப்ரவரி 14: காஷ்மீரில் புல்வாமா நகரில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 43 பேர் பலியாயினர். ஜெய்ஸ்-ஏ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்தத் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தான் அரசைக் கடுமையாக எதிர்த்த இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த ‘மிகவும் விரும்பத்தகுந்த நாடு’ என்ற அந்தஸ்தை (பிப்ரவரி 15) நீக்குவதாக அறிவித்தது.

 

புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம்

பிப்ரவரி 14: பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவுடன், மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையில், 12 புதிய பாடப் பிரிவுகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இந்தப் பன்னிரண்டு புதிய பாடப் பிரிவுகளும் மாணவர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கக்கூடியவையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.சேதி தெரியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x