Published : 15 Jan 2019 10:06 AM
Last Updated : 15 Jan 2019 10:06 AM
காலம்: பொ.ஆ. 100-400, வஞ்சி
“பாண்டிய நாடு, சோழ நாடு, பல்லவ நாடு எனப் பழந்தமிழகத்தின் மூன்று நாடுகளுக்கும் போய் வந்துவிட்டோம். இன்னும் மிச்சமிருப்பது சேர நாடு மட்டும்தான் குழலி”
“ஆமா செழியன், இப்ப நாம நேரா சேர நாட்டுக்குப் போயிடுவோம்.”
“சேர நாட்டுல எந்த ஊருக்குப் போறோம்?”
“போர் தொடுத்துப் போகும் வீரர்கள் வஞ்சிப் பூவை அணிவது வழக்கம்னு படிச்சிருப்பே. வஞ்சிங்கிறது வேறொண்ணும் இல்ல, ஆற்றுப் பூவரச மரம்தான். இப்போ நாம வஞ்சி மாநகருக்குத்தான் போறோம்”
“சிலப்பதிகாரத்துல வஞ்சிக் காண்டம்னு ஒரு பகுதி உண்டே, அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
“கலக்குற செழியன். நீ சொன்ன தொடர்பு சரியானதுதான். வஞ்சி நகரம் செல்வச் செழிப்புடனும் பெரிதாகவும் இருந்ததுன்னு அகநானூற்றுப் பாடல் (263) சொல்லுது”
“வஞ்சி மாநகருக்கு வேற என்ன முக்கியத்துவம்?”
“வஞ்சி சேரர்களோட தலைநகரமா இருந்துச்சு. இந்த ஊருக்கு கருவூர் என்றொரு பெயரும் இருந்திருக்கு. தமிழகத்தின் கொங்கு நாடு பகுதி முடியும் இடத்தில், முன்பு கருவூர் எனப்பட்ட கரூர் திருச்சி பக்கத்துல இருக்கு.”
“பொதுவாகவே அந்தக் காலத்துல குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த மக்கள், வேறொரு புதிய பகுதிக்குச் சென்று குடியேறும்போது தாங்கள் பழைய ஊரின் பெயரையே புதிய ஊருக்கும் சூட்டுவது வழக்கமா இருந்திருக்குன்னு நீ சொல்லியிருக்கியே?”
“ஆமா, இதைப் போலவே ஏற்கெனவே ஊர்ப் பெயர் ஒற்றுமைகளை நாம பார்த்திருக்கோம். வஞ்சிக்கும் அதுபோல கருவூர் என்ற பெயர் இருந்திருக்கலாம். கொங்கு பகுதிகளைச் சேரர்கள் கைப்பற்றிய பிறகு, தங்கள் ஊரின் பெயரையே கருவூருக்கும் சூட்டியிருக்கலாம்.”
“ஆனா ரெண்டு கரூரும் ஒன்றல்ல என்பதை எப்படி நிரூபிப்பது?”
“வஞ்சி-கரூரின் இருப்பிடத்தைப் பற்றி, பண்டைய கிரேக்க-ரோமானியப் பயணி தாலமி குறிப்பிட்டுள்ளார். அதனால சேரர் தலைநகரும் தமிழகக் கரூரும் ஒண்ணு இல்ல. பேரியாற்றின் கிளையாறு கடலில் கலக்கும் இடத்துக்குக் கிழக்கே வஞ்சியும், அதற்கு வடமேற்கில் கரூரும் இருந்திருக்கின்றன. இரண்டு ஊர்களையும் சேர்த்து ஒரே பேர்ல அழைச்சிருக்காங்க.”
“இந்த ஊர் தலைநகரா இருந்துச்சுன்னா, அங்க யாரெல்லாம் இருந்தாங்க”
“உதியன் மரபினர் எனப்படும் அரச வம்சத்தினர், போர் இல்லாத காலங்கள்ல வஞ்சியில் தங்கியிருக்காங்க.”
“வேற என்ன இருந்துச்சு?”
“எல்லாப் புகழ்பெற்ற நகரங்களும் ஆற்றங்கரையில்தானே இருந்தன. ‘ஆன் பொருநை’ எனும் ஆற்றங்கரைல வஞ்சி அமைஞ்சிருந்தது. இந்த ஆறு வஞ்சியைச் சுத்தி ஓடினதால, அந்த ஊருக்கு இயற்கை அரணா இருந்துச்சு. வஞ்சியைச் சுற்றியிருந்த ஊர் வயல்கள்ல நெல் விளைச்சலுக்கு ஆன் பொருநை உதவியது. இந்த ஆறு இன்றைய கேரள மாநிலத்துல இருக்கும் புள்ளூத்துப் புழையா இருக்கலாம்.”
“பொருநை – இந்தப் பேரை ஏற்கெனவே நிறைய தடவ கேட்ட மாதிரி இருக்கே”
“ஆமா, தாமிரபரணிக்கும் பொருநைன்னு இன்னொரு பேர் இருக்கு. அதனாலதான், வஞ்சி நகரம் இருந்த ஆற்றோட பெயரை ‘ஆன் பொருநை'னு சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. இந்த ஆற்றங்கரைல ஆபரணம் அணிந்த பெண்கள் மணலில் பொம்மை செஞ்சு, அவற்றுக்கு கோட்டுப்பூவைச் சூடி விளையாடியிருக்காங்க. அப்புறம் தண்ணீர்ல நீந்தியும் விளையாடினாங்கன்னு அகநானூற்றுப் பாடல் (93) சொல்லுது.“
"கேரளம் இன்னைக்கும் அந்தச் செழிப்பைத் தொலைக்காம இருக்கு குழலி"
"நாமதான் நிறைய தொலைச்சிட்டோம். சரி, பார்ப்போம் செழியன்."
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT